திமில்களற்ற விசித்திரக் கொம்புடைய இந்த அழகிய மாடுகள், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள சேடு ஏரியை (Lake Chad) சுற்றியுள்ள இடங்களில் மட்டும் வாழ்கின்றன. சேடு ஏரியானது மேற்கு ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் மெகா சேடு என்னும் பிரம்மாண்ட உள் கண்ட கடலாக இந்த ஏரி அமைந்திருந்ததாக கூறுகின்றனர். இந்த ஏரியை சுற்றி சேடு, கேமரூன், நைஜர், நைஜீரியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நான்கு நாடுகளிலும் குரி மாடுகள் (Kuri Cattle) காணப்படுகின்றன. சேடு ஏரியை சுற்றி வாழும் புடூமா மற்றும் குரி பழங்குடியின மக்கள் பல நூற்றாண்டுகளாக இந்த குரி மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
மிகச் சிறப்பாக நீச்சல் அடிக்கும் இம்மாடுகள் பெரும்பாலான நேரத்தை ஏரி நீரிலேயே செலவழிக்கின்றன. தண்ணீரில் உள்ள தாவரங்களும், சேடு ஏரியில் உள்ள சிறு சிறு தீவுகளில் வளரும் புற்களுமே இவற்றின் விருப்பமான உணவு. புற்களை உண்பதற்காக அத்தீவுகளுக்கு இம்மாடுகள் நீந்தி செல்கின்றன. குரி மாடுகளால் வறட்சி மற்றும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாது.
குரி மாடுகள் பாலுக்காகவும், இறைச்சிக்காகவுமே வளர்க்கப்படுகின்றன. முழு நேரமும் ஏரியிலேயே வாழும் இம்மாடுகளை பாரம் இழுக்க, பொதி சுமக்க என வேறு எந்த வேலைகளுக்கும் பயன்படுத்த முடிவதில்லை. பெண் மாடுகள் 400 கிலோ எடை வரையிலும், ஆண் மாடுகள் 475 லிருந்து 600 கிலோ எடை வரையிலும் இருக்கும். இம்மாடுகள் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு லிட்டர் பாலை கொடுக்கக் கூடியவை. ஒரு மாடு தன்னுடைய ஆயுட்காலத்தில் 12 குட்டிகளை ஈனுகின்றது.
அழியும் தருவாயில் குரி மாடுகள்
இம்மாடுகளுக்கு தனித்துவத்தை அளிப்பதே, குமிழ் போன்ற தோற்றமுடைய இவற்றின் பெரிய கொம்புகள் தான். ஆனால் இப்போது குரி இன மாடுகளில் 5% மாடுகள் மட்டுமே இப்படி குமிழ் போன்ற கொம்புகளை பெற்றுள்ளன. பல்லாண்டுகளாக அங்குள்ள பழங்குடியின மக்கள் நேரான, கூர்மையான கொம்புகள் கொண்ட மாடுகள் மட்டுமே அதிக பால் தரும் என்று கருதி, தேர்ந்தெடுத்து இனச்சேர்க்கை செய்து வருகின்றனர். இப்பொழுது குமிழ் வடிவ கொம்புகள் கொண்ட மாடுகளின் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாமென்று கூறுகின்றனர்.
அது மட்டுமின்றி அங்குள்ள மக்கள் ஆப்பிரிக்காவின் ஷீபு இன மாடுகளோடு (Zebu Cattle), இந்த குரி மாடுகளை கலப்பினம் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் இம்மாடுகளின் எண்ணிக்கை, கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கலப்பின மாடுகள் அதிக பாலினை கொடுப்பதோடு உருவத்தில் பெரியதாகவும், வறட்சியை தாங்க கூடியதாகவும் உள்ளதால் அங்குள்ள மக்கள் கலப்பின மாடுகளையே விரும்பும் நிலை உருவாகியுள்ளது.
முழு நேரமும் சேடு ஏரி தண்ணீரிலேயே வாழ்ந்து பழகிவிட்ட மாடுகளால் வேறு இடங்களில் வாழ இயலவில்லை. இதனால், இம்மாடுகளை வேறு இடங்களுக்கு கொண்டு சென்று இனப்பெருக்கம் செய்யும் முயற்சி வெற்றி பெறவில்லை. இக்காரணங்களினால் நாட்டு குரி மாடுகள் அழியும் நிலையை எட்டிவிட்டன.
முனைவர். வானதி பைசல்,
விலங்கியலாளர்.