Skip to content

இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம்

அந்நிய பூச்சி இனங்கள் தற்செயலாகவோ, மனிதன் மூலமாகவோ அல்லது வேறு காரணிகள் மூலமாகவோ நமது நாட்டில் அழையா விருந்தாளிகளாக நுழைகின்றன. இவ்வாறு வருகை தரும் பூச்சிகள் 5-20 விழுக்காடு மட்டுமே பயிர்களை தாக்குகின்றன. இதன் விளைவுகள் மீள முடியாததாகவும் பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அமைகிறது. இப்பூச்சிகளின் வருகை காரணமாக நம் நாட்டில் உள்ள வேறு பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கும் அழிவதற்கும் வழிவகுக்கின்றன.

International Union For Conservation Of Nature (IUCN) ஆய்வின் படி சிகப்பு பட்டியலில் இவை மற்ற பூச்சி இனங்கள் அழிவதற்கு இரண்டாவது அசச்சுறுத்தும் காரணிகளாக திகழ்கின்றன. இப்பூச்சிகள் பல்வேறு பயிர்களை தாக்குகின்ற காரணித்தினால் இவற்றை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். எதிர் பாராமல் நுழையும் பூச்சிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் பயிர்கள் மற்றும் தாக்குதல் முறைகள் அறியப்படாததால் இவற்றை கட்டுப்படுத்துதல் என்பது சற்றே கடினமானது. இதனை கட்டுப்படுத்தும் முதல் தீர்வாக வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிர் பாதுகாப்பு தனிமைப்படுத்துதல் மற்றும் சேமிப்பு இயக்குனரகம் செயல்பட்டு வருகிறது. இதன் கண்காணிப்பின் கீழ் இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களில் உள்ள களை வித்துக்கள், பயிர் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்கும் நுண்ணுயிர்களை ஆய்வு செய்து பரவுவதைத் தடுக்கிறது. (DIP Act, 1914).

 

வ.எண் பொது பெயர் தாக்கும் பயிர்கள் பூர்வீக நாடு அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்
1 ஆப்பிள் அசுவினி ஆப்பிள், பேரிக்காய் தென்கிழக்கு அமெரிக்கா 1889
2 சான் ஜோஸ் செதில் பூச்சி ஆப்பிள் சீனா 1911
3 வைர முதுகுப் அந்துப்பூச்சி முட்டைகோஸ், காளிபிளவர்,  முள்ளங்கி ஐரோப்பா, தெற்கு ஆசியா / கிழக்கு ஆசியா 1914
4 லன்டனா நாவாய்ப்பூச்சி கத்திரிக்காய், காப்பி , உண்ணிச்செடி கயானா 1915
5 பஞ்சு செதில் பூச்சி எலுமிச்சை கொய்யா துவரை சவுக்கு ஆஸ்திரேலியா 1921
6 உருளைக்கிழங்கு துளைப்பான் உருளை, தக்காளி, கத்திரி புகையிலை வட / தென் அமெரிக்கா 1937
7 பைன் அசுவினி பைன்னியஸ் பினி

 

கிழக்கு ஆசியா 1970
8 சூபாபுல் சாறு உறிஞ்சும் அசுவினி சூபா புல்

 

 

மத்திய அமெரிக்கா 1988
9 காஃபி பழம் துளைப்பான் காப்பி வட கிழக்கு அமெரிக்கா 1990
10 இலை துளைப்பான் தக்காளி ஆமணக்கு வட அமெரிக்கா 1991
11 பருத்தி  மாவுப்பூச்சி பருத்தி தக்காளி மாதுளை செம்பருத்தி வெண்டைக்காய் அமெரிக்கா 2005
12 கழலை

குளவி

யூகலிப்ட்ஸ் ஆஸ்திரேலியா 2006
13 பப்பாளி மாவுப்பூச்சி பப்பாளி, மல்பெரி மெக்ஸிகோ /மத்திய அமெரிக்கா 2007
14 சொலனம்

மாவுப்பூச்சி

பருத்தி, தக்காளி தென்கிழக்கு ஆசியா 2012
15 தக்காளி ஊசித்துளைப்பான் தக்காளி,

 

தென்அமெரிக்கா 2014
16 ருகோஸ் வெள்ளை ஈ தென்னை, மா, வாழை, கொய்யா மத்திய அமெரிக்கா 2016
17 படை புழு மக்காச்சோளம், கரும்பு, சோளம், நெல், பருத்தி , ஆப்ரிக்கா 2018
18 போன்டெர்ஸ் நெஸ்டிங் வெள்ளை ஈ எலுமிச்சை, வாழை, கொய்யா மத்திய அமெரிக்கா 2018

மக்காச்சோள படைப்புழு தாயகம் மற்றும் பரவியுள்ள பகுதிகள்:

மக்காச்சோள படைப்புழுவானது அதன் தாயகமயான அமெரிக்காவைத் தாண்டி நைஜீரியாவில் ஜனவரி மாதம் 2016 ஆம் ஆண்டு மாக்காச்சோளத்தில் தாக்குவது கண்டறியப்பட்டது. இதன் தாக்கமானது பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் முதல்முதலாக கர்நாடக மாநிலம் சிவமோகா வில் மே மாதம் 2018 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மேலும், இதனை சுற்றியுள்ள மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மகாராஷ்டிரா மற்றும் ஒடிஷாவிலும் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பிற்கு உள்ளாகும் பயிர்கள்:

இதன் மக்காச்சோளத்தில் மட்டுமில்லாமல் கரும்பு, சோளம், நெல், பருத்தி, கோதுமை, நிலக்கடலை வெங்காயம், தக்காளி மற்றும் சிறுதானியப் பயிர்கள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களைத் தாக்குகின்றது.

வாழ்க்கைச் சுழற்சி:

இரவு நேரங்களில் பெண் அந்துப் பூச்சியானது 100 – 200 முட்டைகளை குவியலாக இடுவது மட்டுமில்லாமல் பாதுகாப்பிற்காக ரோமங்களால் மூடி வைக்கிறது. முட்டையானது 2-3 நாட்களில் பொரிந்து படைப்புழுவானது வெளியேறும். முட்டையிலிருந்து வெளிவந்த புதிய புழுவானது பச்சை நிற உடலுடனும் கருப்பு நிற தலையுடனும் காணப்படும். வளர்ந்த புழுவானது பழுப்புக் கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் முகத்தில் ஆங்கில எழுத்தான ‘Y’ யை திருப்பிப்போட்டது போன்று மஞ்சள் நிறத்தில் காணப்படும் .

மேலும் இதன் வால் பகுதியில் நான்கு புள்ளிகள் உள்ளதால் பார்ப்பதற்கு சதுரம் போன்று தோற்றமளிக்கிறது. நன்கு வளர்ந்த புழுவானது 3-4 செ.மீ நீளத்தில் இருக்கும். முதிர்ந்த புழுவானது மண்ணிற்குள் 2–8 செ.மீ ஆழம் வரை சென்று கூட்டுப்புழுவாக மாறி விடும். கூட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் இரவு நேரங்களில் நன்கு இயங்கக்கூடியவை. முன் இறக்கைகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இறக்கையின் நுனி மற்றும் மத்திய பகுதிகளில் வெள்ளை நிற முக்கோண அமைப்பிலும் காட்சியளிக்கும். பின் இறக்கைகள் வெள்ளை நிறத்துடன் ஓரங்களில் அடர் பழுப்பு நிற கோடுகள் காணப்படும்.

அறிகுறிகள் :

இளம் புழுக்கள் கூட்டமாக இலையின் அடிப்புறத்தைச்  சுரண்டித் தின்று சேதத்தை விளைவிக்கும். 3-6 ஆம் நிலை புழுக்கள் இலையுறையினுள் சென்று கடித்துண்டு பாதிப்பை உண்டாகும்.  இதனால் இலை விரியும் வேளையில் துளைகள் வரிசையாக காணப்படும் இதன் காரணமாக பயிரின் வளர்ச்சி முற்றிலும் பாதிப்படைகிறது.

மேலாண்மை முறைகள் :

  1. வயலை நன்றாக உழுது அடி உரமாக 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதனால் கூட்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சிகள் வெளிவருவது கட்டுப்படுத்தப்படும். விளக்குப் பொறிகள் ஹெக்டருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வைத்து அந்துப்பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.
  2. 50 கிராம் அரைத்த மிளகாய் பொடியையும் 2 கிலோ மரத்தூளையும் கலந்து முழங்கால் அளவுள்ள பாதித்த பயிரின் இலையுறையினுள் இடவேண்டும்
  3. பூச்சிகளைத் தாக்கும் பூஞ்சாண்களான மெட்டாரைசியம் மற்றும் நாமுரைரா போன்றவற்றைப் பயன்படுத்தி இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  4. முட்டை ஒட்டுன்னிகளான டிரைகோகிரமா மற்றும் டெலினோமஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி இப்பூச்சியின் முட்டைப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  5. ஸ்பைனட்டோரம் மருந்தினை 10 மி.லி. ஒரு டேங்க்கிற்கு என்ற அளவிலும் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி மருந்தினை பத்து லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவிலும் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துகளில் தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்கள்:  ந. பொன்னுசாமி, ரா. ஈ. கார்த்திக். சி. இரவிவர்மன் மற்றும் சீ. அபிநயா, பூச்சியியல் துறை, டாக்டர் இராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண்மைப் பல்கலைக் கழகம், சமஸ்த்திபூர், பீகார், இந்தியா-848125.

மின்னஞ்சல்: ponzhortz043@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news