Skip to content

மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படும் கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள்

செலோசியா  கிரிஸ்டேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் தமிழில் “கோழிக்கொண்டை” என்று அழைக்கபடுகிறது. இத்தாவரம் அழகு செடிகளாகவும் மற்றும் மாலைகளில் அழகு சேர்க்க மாலைகளுக்கு  இடையே வைத்து கட்டவும் பயன்படுகிறது. மேலும் இத்தாவரத்தின் எல்லா பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பொதுவாக வளர்க்கப்படுகிறது. இலைகள் 2-4 அங்குல நீளம் மற்றும் பச்சை கலந்த ஊதா அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். மலர்கள் அடர் இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இத்தனை சிறப்புடைய இத்தாவரத்தின்  சாகுபடி தொழில்நுட்பங்களைப் இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

மருத்துவ பயன்கள்

கோழிக்கொண்டைசெடியின் பாகங்கள் உடல் சோர்வு, இதயம் சம்பந்தமான நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எலும்பு தொடர்பான வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. அதன் விதைகள் “கல்லீரல்-வெப்பத்தை” அகற்றவும், கண்பார்வையை  மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. கோழிக்கொண்டை செடியின் பூக்கள் மூச்சுத்திணறல், இரத்தக்களரி மலம், ரத்தக்கசிவு, இரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.

கோழிக்கொண்டை செடியின் இலைகள் வயிற்றுப்போக்கு, மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதி உள்ள களிமண் மற்றும் செம்மண் நிலப்பகுதிகள் கோழிக்கொண்டை பயிரிட உகந்தது. மண்ணின் கார அமில தன்மை 6.5க்கும்  அதிகமாக இருக்க கூடாது. நல்ல சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. கோழிக்கொண்டை வளரும் பருவத்தில் அதிக வெளிச்சமும் பூ பூக்கும் சமயத்தில் குறைந்த அளவு வெளிச்சம் இருந்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

இனப்பெருக்கம்

கோழிக்கொண்டை தாவரத்தை விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். விதைகள் சிறிய அளவில் காணப்படுவதால் 1 கிராம் விதைகளில் இருந்து 500 கும் மேற்பட்ட செடிகளை உருவாக்கலாம்.

விதை அளவு மற்றும் நாற்றங்கால் மேலாண்மை

            கோழிக்கொண்டையை ஒரு ஏக்கர் நடவு செய்ய 400கிராம் விதைகள் போதுமானது. எனவே ஒரு ஏக்கர்  நடவு செய்ய 4 சென்ட் பரப்பளவு உள்ள இடம் நாற்றங்காலுக்கு தேவைப்படும். மேட்டு  பாத்தி நாற்றங்கால் அமைத்து விதைகளை மணலுடன் கலந்து மேற்பரப்பில் விதைத்து விடவேண்டும், பொதுவாக கோழிக்கொண்டை விதைகள் 7-14 நாட்களிலில் முளைக்கும், எனவே விதைகள் முளைக்கும் வரையில் நாற்றங்கால் பாத்தியில் மூடாக்கு அமைத்து பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச  வேண்டும். நாற்று விட்டதிலுருந்து 30ம் நாள் நாற்றுகள் வயலில் நடுவதற்கு தயாராகி விடும்.

நிலம் தயாரித்தல் மற்றும் நடவு முறை

நிலத்தை நன்கு உழுது தயார் செய்ய வேண்டும், கடைசி உழவின் போது நன்கு மக்கிய தொழு உரத்தை 20 டன் என்ற அளவில் இட  வேண்டும். பொதுவாக ஜுலை மாதம் முதல் வாரத்தில் பார்கள்  அமைத்து 20 X 20 அல்லது 25 X 25 செ.மீ இடைவெளியில் செடிகளை நடவு செய்தால் அதிக மகசூலை பெறலாம்.

நீர் மேலாண்மை

செடிகளை நடவு செய்யும் முன்னர் நடவு பாத்திகளில் நீர்பாய்ச்சி பின்னர் நடவு செய்ய வேண்டும். செடிகளை நட்ட மூன்றாவது நாள் உயிர் பாசனமும், பின்னர் மண்ணின் தட்ப வெட்ப நிலைகளை பொறுத்து 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

களை மேலாண்மை

நடவு செய்த 15ம் நாளில் ஒரு கை களையும் பின்னர் 40ம் நாளில் ஒரு கை களையும் எடுக்க வேண்டும்.

உர மேலாண்மை

கோழிக்கொண்டை செடிகளில் அதிக விளைச்சல் பெற 10:20:10 கிராம் தழை, மணி  மற்றும் சாம்பல் சத்துக்களை ஒரு சதுர மீட்டருக்கு இட வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு 40 கிலோ 17:17:17 கலப்பு உரத்தை செடிகளை நட்ட 15வது நாள்  செடிகளின் வேர் பகுதியில் இட்டு  மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் களை எடுத்த பின்னர் ஒரு ஏக்கருக்கு 60 கிலோ பொட்டாஷ் உரத்தை செடிகளுக்கு இட்டு நன்றாக மண் அணைக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்

நடவு செய்த 60ம் நாளில் இருந்து மொட்டு  விட ஆரம்பித்து விடும். பின்னர் பூக்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்.

75வது நாளில் இருந்து பூக்களை அறுவடை செய்ய ஆரம்பித்து விடலாம். குறைந்த பட்சம் ஒரு செடியில் நான்கு முறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 1500 முதல் 2000 கிலோ வரை பூக்கள் மகசூலாக கிடைக்கும்.

கட்டுரையாளர்கள்:
1முனைவர். மு.வ. கருணா ஜெபா மேரி மற்றும் 2முனைவர்.ப.வேணுதேவன்

1ஆராய்ச்சியாளர், வேளாண்மை விரிவாக்கவியல்

2வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர்.

மின்னஞ்சல்: jebamaryextn@gmail.com

1 thought on “மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படும் கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள்”

  1. சிவகுமார் பொ

    செலோசியா கிரிஸ்டேட்டா)
    என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த கோழிக்கொண்டை தாவரத்தின் ஹைபிரிட்விதை தேவைப்படுகிறது.

    எங்கே யாரிடத்தில் பெறுவது என்று தெரியவில்லை
    உதவி செய்ய முடியுங்களா.

    எனது எண் 96 2993 4279.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news