Skip to content

தேனீ வளர்ப்பு (பகுதி – 2)

தேனீ வளர்ப்பின் வரலாறு அன்று முதல் இன்று வரை….

பழங்காலங்களில் தேன் கூடானது விழுந்த மரங்களிலும் மரப் பொந்துகளிலும் கட்டப்பட்டது. இதை உணர்ந்த நமது விஞ்ஞானிகள் தேனீக்களை மர சட்டங்களில் அடைத்து வர்த்தக ரீதியில் வளர்க்கத் தொடங்கினர். தேனீ வளர்ப்பில் 16 ஆம் நூற்றாண்டு வரை எந்த வளர்ச்சியும் இல்லை. மனிதன் இயற்கையில் காணப்படும் தேன் கூடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தபோதுதான் முறையான தேனீ வளர்ப்பானது தொடங்கியது. நவீன தேனீ வளர்ப்பின் வளர்ச்சியானது 1500 முதல் 1851 வரையிலான காலக்கட்டங்களில் தான் உச்சம் அடைய தொடங்கியுள்ளது. அக்காலங்களில் தேனீக்களை சட்டங்களில் அடைத்து வளர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன இருந்தும், அவை வெற்றிகரமாக இல்லை. காரணம் தேனீக்கள் தங்கள் அடைகளை தன்னுடன்  மற்றும் சட்டஙகளின் சுவர்களுடன் ஒன்றாக இணைத்து கட்டியுள்ளன. எனவே ஒவ்வொரு முறையும் தேன் எடுப்பதற்காக அடைகளை வெட்ட வேண்டியிருந்தது. 1851 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எல். எல். லாங்ஸ்ட்ரோத் (L. L. Langstroth) தேனீக்களுக்கு இடையிலான இடைவெளி (Bee space) பற்றிய கொள்கையினை கண்டுபிடித்தார். இதனால் தேனீக்கள் நகரக்கூடிய மர சட்டங்களில் (Movable frame hives) வளர தொடங்கியது. இது உண்மையிலேயே தேனீ வளரப்பின் முதல் வெற்றியாகும். இந்த கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அடை அடித்தளம் (Comb foundation sheet), தேன் பிரித்தெடுக்கும் இயந்திரம் (Extractor), புகைப்பிடிப்பான் அல்லது புகையூட்டி (Smoker) போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றால் நவீன தேனீ வளர்ப்பு மென்மேலும் வளர்ச்சி அடைந்து இருப்பதை இன்று நாம் காண்கிறோம்.

இந்தியாவில் தேனீ வளர்ப்பு

இந்தியாவில் தேனீக்களை நகரக்கூடிய மர சட்டஙகளில் வளரப்பதற்கான முதல் முயற்சி 1882 ஆம் ஆண்டில் வங்காளத்திலும் பின்னர் 1883-84 இல்   பஞ்சாபிலும் செய்யப்பட்டது. தென்னிந்தியாவில், ரெவ். நியூட்டன் (Rev. Newton) 1911-1917 ஆம் ஆண்டில் தேனீ வளர்ப்பவர்களுக்கு பயிற்சியளித்தார் மற்றும் தேனீக்களுக்கு இடையிலான இடைவெளி பற்றிய கொள்கையின் அடிப்படையில் பூர்வீக தேனீ ஏபிஸ் செரானாவுக்கு (Apis cerana indica) ஒரு செயற்கை தேன் கூடு ஒன்றை உருவாக்கினார் (இது பிற்காலத்தில் அவரது பெயரால் “நியூட்டன் ஹைவ்” என்று அழைக்கப்பட்டது). 1917 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மாநிலத்திலும் (இப்போது கொச்சின்) 1925 இல் மைசூரிலும் தேனீ வளர்ப்பு தொடங்கப்பட்டது. ஹிமாச்சல பிரதேசத்தில் நவீன தேனீ வளர்ப்பானது, 1934 இல் குலுவிலும் 1936 இல் காங்க்ராவிலும் தொடங்கியது. கவர்ச்சியான தேனீ ஏபிஸ் மெல்லிஃபெரா (Apis mellifera) இந்தியாவில் முதன்முதலில் 1962 ஆம் ஆண்டில் நாகிரோட்டா பாக்வானில் (Nagrota Bagwan) (முன்னர் பஞ்சாப் மாநிலத்திலும் இப்போது இமாச்சல பிரதேசத்திலும்) வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது, ஏனெனில் இந்த தேனீ அதிக தேனை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. தற்போது இந்த தேனீ இனங்கள் இரண்டும் நவீன தேனீ வளர்ப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் காட்டு தேனீக்களிலிருந்து   ஏபிஸ் டோர்சாட்டா (Apis dorsata) மற்றும் ஏபிஸ் ஃப்ளோரியா (Apis florea) நிறைய தேன் சேகரிக்கப்படுகின்றன. இந்தியா நான்கு வகை தேனீக்களிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 70,000 மெட்ரிக் டன் தேனை உற்பத்தி செய்கிறது.

-தொடரும்…..

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news