Skip to content

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 4)

விலைபாதுகாப்பு’:

வேளாண்மை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்வது ஆகும். இன்று நாம் எந்த பொருளைக் கடையில் சென்று வாங்கினாலும், அதற்கு அதன் உற்பத்தியாளர் நிர்ணியித்த விலையை நாம் கொடுக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைபொருட்களுக்கு யாரால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது?

ஒரே பட்டத்தில் பயிர் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் சந்தைக்கு வருவதால், விளைச்சலை விற்பதில் உழவர்களிடையே ஏற்படும் போட்டி – அதே நேரத்தில், வியாபாரிகளிடையே உள்ள கட்டுப்பாடான ஒற்றுமை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப மேலாண்மை செய்ய எந்த போதுமான அடிப்படை வசதிகளும் இல்லாமை, கடன்பெற்று விவசாயம் செய்வதால் உடனடியாக ஏற்படும் பணத் தேவை போன்றவைகளால் உழவர்களுக்கு நியாயமான விலை கிடைக்காத சூழல் நிலவுகின்றது.

திண்டுக்கல் பகுதியில் முருங்கைக்காய் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. காய் சீசனில், நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் பத்து லாரி முருங்கைக்காய் சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு வியபாரிகள் எடுத்துச் செல்கிறார்கள். இதற்கு நுகர்வோர் கொடுக்கும் விலையில் சுமார் 20 முதல் 25 சதமே உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கின்றது. அதே போல் நாம் உற்பத்தி செய்யும் நிலக்கடலையைக் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டு பின்பு கடலை எண்ணெயை நாமே மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்குகின்றோம். பிரதான உணவான நெல்லும் இப்படித்தான்.

இவ்வாறான விளை பொருட்களின் விற்பனை முறையால், பாடுபட்டு உற்பத்தி செய்யும் உழவர்கள் மேலும் மேலும் ஏழைகளாகவும், கடனாளிகளாகவும் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய அவல நிலையால், விவசாயிகளுக்கு வேளாண்மையில் ஒரு கசப்பு – ஒரு விரக்தி மனப்பான்மை நிலவுகிறது. தொடர் நஷ்டத்தில் விவசாயிகளில் பலர் விவசாயத்தை விட்டு விட்டு, விளைபொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகளாகவும், இடைத் தரகர்களாகவும், ஆகியிருப்பதையும், அதன் மூலம் அவர்கள் ஒரளவு முன்னேறியிருப்பதையும் நாம் கண் கூடாகக் காண்கின்றோம். இந்த நிலை நீடித்தால், விவசாயிகள் அனைவரும் வியாபாரிகளாக மாறிவிடும் காலம் வந்துவிடுமோ!

இக்குறையை யார் தீர்த்து வைக்க முடியும்? நுகர்வோராலா? வியாபாரிகளாலா? நாமே முயன்றால் தீர்த்துக்கொள்ள முடியும். ஆம் நம்மிடையே ஒற்றுமை இருந்தால், நாம் ஒன்றுபட்டால் அரசின் உதவியுடன் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

புதிய பாதை ! புதிய நம்பிக்கைஇதோ!

  1. கிராமந்தோறும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களை இந்த அமைப்புகளின் மூலம் பெரிய நகரங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும்.
  2. வேளாண் விளைபொருட்களைப் பதப்படுத்தி விற்பனை செய்தல் – உதாரணமாக, நிலக்கடலையை பருப்பு உடைத்து அதனை எண்ணை ஆக்கி விற்பனை செய்தல், நெல்லை அரிசி ஆக்கி விற்றல் – இதற்கான ஆலைகளை ஊர்தோரும் உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு அல்லது கூட்டுறவு முறையில் நிறுவவேண்டும்.
  3. இத்தகையை கூட்டுறவு அமைப்புக்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் – உயர் விதைகள் – பூச்சிமருந்துகள், விவசாயக் கருவிகள் நியாயமான விலையில் – இடைத்தரகர்களின் லாபத்தைத் தவிர்த்து – கிடைத்திடச்செய்ய வேண்டும்.
  4. மொத்தத்தில் உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் ஒரு பாலமாக இந்த அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு அதன்மூலம் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்.
  5. புதிய செயலிகளை கைப்பேசி வாயிலாகவோ, இனையவழி தொடர்பின் மூலமாகவோ இந்த புதிய சந்தைமுறையில் அறிமுகப்படுத்த வேண்டும்.
  6. இதனால் வருடத்தில் பாதிநாட்கள் வேலையின்றி இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். மேலும், இத்தகை ஆலைகள் நகரங்களிலேயே அதிக உற்பத்தியாவதையும், கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பதையும், தவிர்த்து, கிராமப்புறத் தொழில் வளத்தைப் பெருக்கலாம்.

 

மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் வெறும் கனவுகள் அல்ல. உழவர்கள் ஒன்றுபட்டால், ஒற்றுமையுடன் முயற்சி செய்தால், அரசின் ஒத்துழைப்போடு இதனை செயலாக்கிட முடியும். இளம் உழவர்கள், படித்த இளைஞர்கள் முயற்ச்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

-முற்றும்.

கட்டுரையாளர்: முனைவர் அக்ரி ச. பாபு, இணைப் பேராசிரியர், உழவியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

மின்னஞ்சல்: agribabu74@gmail.com அலைபேசி எண் : 9486836801.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news