Skip to content

தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்பாடு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இளநீர், எண்ணெய், கயிறு தயாரித்தல், கீற்று ஓலை தயாரித்தல் என்று பல்வேறு வகைகளில் தென்னை உதவி வருகிறது. இத்தகைய தென்னை சாகுபடிக்கு சவாலாக புயல், காற்று, நோய் கிருமிகள், பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான தஞ்சாவூர் வாடல் நோய் குறித்தும் அதன் மேலாண்மை குறித்தும் காண்போம்.

இந்நோயானது அடிதண்டு அழுகல் நோய் என்றும் கேனோடெர்மா வாடல் நோய் என்றும் மற்ற பெயர்களால் அறியப்படுகிறது. பட்லர் என்பவரால் 1913ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் அடிதண்டு அழுகல் நோய்க்கான காரணி கேனோடெர்மா லியூசிசிடம் என்ற பூஞ்சாணம் என்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 1952ம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்குப் பின்னர் தஞ்சாவூர் பகுதிகளில் இந்நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது. எனவே இது தஞ்சாவூர் வாடல் நோய் என்றும் அறியப்படுகிறது. தமிழகத்தில் உள்ள தென்னை சாகுபடி செய்யப்படும் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா  உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மலேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்நோய் காணப்படுகிறது.

இந்நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள்:

இந்நோய் தாக்கப்பட்ட ஆரம்ப நிலையில் தென்னை ஓலைகள் மஞ்சள் நிறமடைந்து வெளிச்சுற்று இலைகள் கீழே தொங்கிவிடும். அதைத்தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் ஏற்பட்டு அதன் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசியும், மேலும் அது மேல்நோக்கி பரவும்.  கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும். சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி, தண்டின் அடிப்பகுதி அழுகிவிடும். மரப்பட்டை எளிதில் உடையக்கூடியதாக மாறி, அடிக்கடி செதில்களாக உரிந்து திறந்தவெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும்.  மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து, சிதைந்து, துர்நாற்றம் வீசும்.  மொட்டுக்கள் மற்றும் இளம் பிஞ்சுகள் உதிர்ந்து விடும். தண்டின் அடிப்பகுதியில் அரைத்தட்டு காளான் தோன்றும்.   வேர் பகுதிகள் அழுகிவிடும். இறுதியாக மரம் மடிந்து விடும்.

மேலாண்மை முறைகள்:

நோய் வருமுன் பாதுகாக்கும் முறைகள்:

தென்னங்கன்று நடவு செய்யும் பொழுது 1% போர்டோ கலவையை குழியில் இட வேண்டும். பசுந்தாள் உரங்களை வளர்த்து தென்னை பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை மடக்கி உழுது விட வேண்டும். தொழு உரத்துடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து 6 மாதத்திற்கு ஒரு முறை இட வேண்டும்.  சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மரத்திற்கு 200 கிராம் வீதம்,  200கிராம் டிரைகோடெர்மா விரிடி உடன் சேர்த்து இடலாம். 200 கிராம் பாஸ்போபாக்டா், 200 கிராம் அசோட்டோபாக்டர் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடலாம்.

நோய் வந்த பின் செய்ய வேண்டிய மேலாண்மை முறைகள்:

நோய் பாதிப்பு ஆரம்பகட்டத்தில் இருப்பின் ஆரியோபங்கின் 2 கி மற்றும் காப்பர் சல்பேட் 1 கி அல்லது 2 மில்லி டிரைடிமார்ஃப் + 100 மில்லி தண்ணீர் கலந்து வேர் மூலம் செலுத்தலாம். இதற்கு பென்சில் அளவு தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்டவேண்டும்.  மருந்தை பாலித்தீன் பை அல்லது பாலித்தீன் பாட்டிலில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும்.

நோய் பாதிப்பு அதிக அளவில் இருப்பின் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விடுவது நல்லது. இதன் மூலம் இந்த நோயானது தோப்பில் உள்ள மற்ற மரங்களுக்கு பரவுவதைத் தவிர்க்க முடியும். இதற்கு மரத்தை சுற்றி 4 அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த வேண்டும். தண்டின் சாறு கசியும் பகுதிகளை செதுக்கி  5% டிரைடிமார்ஃப் இட வேண்டும். மரத்தை சுற்றி 1.5 மீட்டர் தூரத்தில் 1% போர்டோ கலவையை  ஊற்றி மண்ணை நனைக்க வேண்டும். மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி தஞ்சாவூர் வாடல் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

கட்டுரையாளர்கள்:

  1.  கா. சரண்ராஜ், முதுநிலை வேளாண் மாணவர், விஸ்வபாரதி பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: klsk.1998@gmail.com
  2.  எ. செந்தமிழ், முதுநிலை வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: elasisenthamil@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news