சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு

0
2271

நடப்பு கொள்முதல் ஆண்டில் சன்ன ரக நெல்லுக்கான விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,660 மற்றும் சாதா ரகம் ரூ.1,600 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் நெல்லுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை ஆதார விலையாக அறிவிக்கிறது. இதனுடன் தமிழக அரசு ஊக்கத் தொகையை அளித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சன்ன ரகம், சாதா ரக நெல்லுக்கு உரிய விலையை நிர்ணயித்து முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

உழவர்களின் வாழ்வு வளம் பெறும் வகையில், நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை விட தமிழக அரசு அதிக விலையை ஆண்டுதோறும் நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில், நடப்பு கொள்முதல் பருவம் 2017-18-ல் மத்திய அரசு நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையாக சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1, 590-ம், பொது ரகத்துக்கு ரூ.1,550-ம் நிர்ணயித்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, ஊக்கத் தொகையாக சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70-ம், பொது ரகத்துக்கு ரூ.50-ம் கூடுதலாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660-ம் பொது ரகத்துக்கு ரூ. 1,600-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் மூலம், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இதன்மூலம் 20 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவைப்பட்டால் கூடுதலாக புதிய நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும்.

இதற்காக சென்னை, நீலகிரி மாவட்டங்கள் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் நீண்ட தூரம் பயணிக்காமல், உற்பத்தி செய்யப்படும் நெல்லை, தமிழக அரசு நிர்ணயித்த விலைக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்க இயலும். இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

News : Tamil Hindu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here