Skip to content

வாத்து வளர்ப்பு : பகுதி-1

சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்..

கையில் நீளமான கம்புடன் ஹோய்.. ஏய்.. என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்க..

அந்த சத்தத்துக்கு எசப்பாட்டு படிப்பதுபோல ‘பக் பக்’ என சத்தம் கொடுத்துக்கொண்டே ஒதுங்குகின்றன. பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான வாத்துகள்.. தஞ்சைப் பகுதியில் நெல் அறுவடை முடிந்த பிறகு வயல்வெளிகளில் இது போன்ற காட்சிகள் தாராளமாகக் காணக் கிடைக்கும்.

வாத்து இறைச்சிக்கு பெரியளவில் கிராக்கி இல்லை என்றாலும், வாத்தின் முட்டைகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கேரளாவில் வாத்து முட்டைகளுக்கு சந்தை வாய்ப்பு அதிகமாகவே இடுக்கிறது அதனால், முட்டைக்காக பட்டி போட்டு வாத்து வளர்க்கும் பழக்கம் தற்போது தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரத்தநாடு அருகே உள்ள நத்தம் கிராமத்தில், பட்டி போட்டு வாத்து வளர்த்து வருகிறார் நடராஜன். “லால்குடி பக்கத்தில் இருக்கிற விரகாலூர்தான் என்னோட ஊரு. வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, ஊர் ஊரா சுத்தி வாத்து வளர்த்துகிட்டுருக்கேன். வருஷத்துக்கு ரெண்டு, மூணு ஊர்களுக்கு போய் பட்டி போட்டுடுவேன். சித்திரை மாசத்துல தஞ்சாவூர்.. மாசி, பங்குனியில் திருச்சி… ஆடி மாசத்துல மாயவரம்.. கார்த்திகை, தையில திரும்பவும் தஞ்சாவூர்னு ஊர் ஊரா சுத்துறதுதான் நம்ம பொழப்பு…” என்ற முன்னுரையுடன் தொடங்கினார் நடராஜன்.

முட்டைதான் பிரதானம்!

”முட்டை வியாபாரத்துக்காக மட்டும்தான் நாங்க வாத்து வளர்க்குறோம். ரெண்டு, ரெண்டரை வயசான பிறகு வாத்துக முட்டை விடுறது குறைஞ்சுடும். அந்த வாத்துகளை மட்டும் கறிக்காக வித்துகிட்டுருக்கோம். முட்டைக்காகங்கிறதால, ஆயிரக்கணக்குல வளர்த்தாத்தான் லாபமா இருக்கும். ஆனால், ஒரே இடத்துல வச்சு ஆயிரக்கணக்கான வாத்துகளை வளர்க்கும் போது, தீவனச்செலவு எகிறிடும். அதனாலதான் ஊர் ஊராப் போய், அறுவடை முடிஞ்ச நெல் வயல்கள்ல மேய்க்கிறோம். அந்த மாதிரி நிலத்துலதான், வாத்துக்கு தேவையான தண்ணி, நெல்மணி, புழு, பூச்சின்னு எல்லாமே இருக்கும். அதுவும் இந்த மாதிரி பட்டி போட்டாதான் வாத்து வளர்ப்புல கொஞ்சம் லாபம் கிடைக்கும். பட்டி போடுறதுன்னா குறைஞ்சது 1,000 வாத்தாவது நம்மகிட்ட இருக்கணும். ஆயிரம் வாத்தை எப்படி வளர்க்குறதுன்னெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. வெளியூருக்கு போயி அங்கயே தங்கியிருந்து மேய்க்கிறது மட்டும்தான் கஷ்டமே தவிர, வேற பிரச்னையே கிடையாது.

விற்பனை சுலபம்!

நான் 2,000 வாத்து வச்சு இருக்கேன். காலைல ஏழு மணிக்கு வயல்ல இறக்கி விட்டோம்னா, பொழுது சாயுற வரைக்கும் அதுகளா மேஞ்சுக்கும். சாயங்காலம் ஓட்டிட்டு வந்து பட்டியில அடைக்க வேண்டியது தான். இதுக்கு இரண்டு ஆள் இருந்தாப் போதும். நாம இருக்குற இடத்தைத் தேடி வந்து முட்டைகளையும், வாத்துகளையும் வியாபாரிங்க வாங்கிக்கு வாங்க, அதனால எங்கயும் அலைய வேண்டியதேயில்லை” என்ற நடராஜன் தொடர்ந்து வளர்ப்பு முறைகளைப் பற்றி விளக்கினார்.

தீவனத்தில் கவனம்!

“ஆந்திராவிலதான் வாத்துக் குஞ்சுகள் அதிகளவுல கிடைக்குது. பொதுவா ஆறுமாச குஞ்சுகளை வாங்கி வளக்குறதுதான் நல்லது. போக்குவரத்தெல்லாம் சேர்த்து ஒரு குஞ்சுக்கு அறுபத்தைந்து ரூபாய் வரைக்கும் வரும்.

மேய்ச்சலுக்குப் போற இடத்துல, ராத்திரியில அடைகிறதுக்கு கம்பி வலையால பட்டி போட்டுக்கணும். வெயில் நேரத்துல, தண்ணி நிறைய இருக்குற மாதிரி இடத்துல மேய விடணும். அப்பத்தான் வெப்பத்தைத் தணிக்க முடியும். ஆடி, சித்திரை மாசங்கள்ல மேய்ச்சலுக்கு வயல் கிடைக்காது. அந்த மாதிரி சமயங்களில், பட்டிக்குள்ள வச்சுதான் தீவனம் கொடுக்க வேண்டியிருக்கும். விலை கம்மியா கிடைக்குற ஏதாவது தானியங்களைக் கொடுக்கலாம். அந்த மாதிரி சமயத்துல எல்லா வாத்துகளுக்கும் சரியா தீவனம் கிடைக்கிற மாதிரி பாத்துக்கறது முக்கியம். கும்பலா ஒரே இடத்துல தீவனத்தை வைக்காம தனித்தனியா பிரிச்சு பிரிச்சு நிறைய இடங்கள்ல கொடுக்கணும். ஒரு நாளைக்கு ரெண்டு தடவை தீவனமும் தண்ணியும் கொடுக்கணும்.

நூறு பெட்டைக்கு ஒரு ஆண் வாத்து!

வாத்துகள் நாலரை மாசத்துல இருந்து ஆறு மாசத்துக்குள்ள பருவத்துக்கு வந்து, முட்டையிட ஆரம்பிச்சுடும். குஞ்சு பொறிக்கிற மாதிரி தரமான முட்டைகள் வேணும்னா பத்து, பன்னிரண்டு பெண் வாத்துகளுக்கு ஒரு ஆண் வாத்துங்குற கணக்குல இருக்கணும். சாப்பிடுறதுக்கான முட்டைகள்னா, நூறு பெட்டைகளுக்கு ஒரு ஆண் வாத்து இருந்தா போதும்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj