Skip to content

காடை வளர்ப்பு : பகுதி-2

குறைந்த நாளில் அதிக எடை !

காடை வளர்ப்பு தொடர்பாக நம்மிடம் பேசிய நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின் அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர் எட்வின், “இப்ப இருக்கிற சூழ்நிலையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்த்தால் மட்டுமே முட்டைக் கோழிப்பண்ணை அல்லது இறைச்சிக் கோழிப் பண்ணைகள் லாபகரமாக இருக்கும். இதுக்கு அதிக இடமும் பணமும் தேவைப்படுறதால, வசதியான விவசாயிங்க மட்டுமே இதைச் செய்ய முடியும். நடுத்தர, சிறு விவசாயிகளுக்கு ஏத்தது காடை வளர்ப்புதான்.

எங்க துறை மூலமா வெளியிடப்பட்ட, குறைஞ்ச நாள்ல அதிக எடை கிடைக்கிற ‘நாமக்கல் காடை1’ ரகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. மத்த காடை ரகங்களைவிட இந்த ரக காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். மத்த காடைகளைவிட, இந்த ரகத்தை வாங்கி வளர்த்தா அதிக லாபம் கிடைக்கும்” என்றவர், காடை வளர்ப்பு முறைகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

பழைய பண்ணைகளே போதும்..!

“காடைகளை வளர்க்க அதிக பணம் தேவையில்லை. பயன்படுத்தாத கொட்டகை, கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கலாம். அல்லது குறைந்த முதலீட்டில் கொட்டகை போட்டும் வளர்க்கலாம். ஆழ்கூளம் (கொட்டகை), கூண்டு என இரண்டு முறையிலும் வளர்க்கலாம். நமது வசதியைப் பொறுத்து இதை முடிவு செய்து கொள்ளலாம். கொட்டகையைவிட கூண்டில் வளர்க்கும்போது கையாள்வதற்கு சுலபமாக இருப்பதுடன் நோய்க் கிருமிகளும் அதிகமாக தாக்காது. ஆனால், கூண்டு செய்ய ஆரம்ப முதலீடு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

முதல் முறையாக காடையை வளர்ப்பவர்கள், சுமார் 12 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். முதல் பத்து நாட்களுக்கு விளக்குப் போட்டு, போதுமான சூட்டை (வெப்பம்) குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களுக்கும் பருவநிலைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.

இறப்பைத் தடுக்கும் கோலிக்குண்டு..!

முதல் இரண்டு வாரத்தில் பெரும்பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் விழுந்து அதிகமாக இறந்துவிடும். அந்தப் பாத்திரத்தில் கோலிக்குண்டுகளைப் போட்டு வைத்தால், உள்ளே என்னவோ இருக்கிறது என்ற பயத்தில் குஞ்சுகள் உள்ளே இறங்காமல் இருக்கும். இதன் மூலம் அவற்றின் இறப்பைத் தவிர்க்கலாம். அல்லது ‘நிப்பிள்’ மூலம் தண்ணீர் கொடுக்கலாம். நிப்பிளைப் பயன்படுத்தும்போது சுத்தமான நீர் தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு கிடைக்கும்.

காடைக் குஞ்சுகளின் கால் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வளவளப்பான பரப்பில் (செய்தித்தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும்போது, குஞ்சுகள் நொண்டியாகி, சிறிது நாளில் தீவனம், தண்ணி எடுக்காமல் இறந்துபோகும். எனவே, சணல் துணியைப் பரப்பி அதன் மேல் மூன்று நாள் வளர்ந்த பிறகு வளவளப்பான பரப்பில் வளர்த்தால் கால் ஊனமாகாது.

இரண்டாவது வாரத்தில் காடையின் எடை, சராசரியாக 90 கிராம் இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில்தான் வளர்ச்சி வேகமாக இருக்கும். அதனால் தொடர்ச்சியாக தீவனம் கிடைப்பது போல பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, இரவு நேரத்தில் தீவனம் எடுக்க வசதியாக இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

500 கிராம் தீவனம்… 200 கிராம் எடை.!

காடைகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு ஆரம்பகால தீவனத்தையும், பிறகு இறுதிகால தீவனத்தையும் கொடுக்க வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது. ஆரம்ப கால தீவனத்தில் புரதம் அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் இருக்கும். இறுதி கால தீவனத்தில் புரதம் குறைவாகவும், எரிசக்தி அதிகமாகவும் இருக்கும். காடைக்கான பிரத்யேகத் தீவனம் கிடைக்காவிட்டால்.. பிராய்லர் கோழிக்கான, ‘ஆரம்ப காலத் தீவனத்தையே பயன்படுத்தலாம். ஒரு காடை 500 கிராம் தீவனத்தை சாப்பிட்டால், 200 கிராம் எடை வரும். காடை வளர்ப்பில் தீவனச் செலவு 70% இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது இதைக் குறைக்கலாம். ஆனால், வாரத்துக்கு 1,000 காடைகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே தீவனத் தயாரிப்பில் இறங்க வேண்டும். சிறிய அளவில் வளர்க்கும் போது, தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கும் செலவு அதிகமாகிவிடும்.

காடைக்கு தீவனம் மாதிரியே தண்ணீரும் ரொம்ப முக்கியம். இரண்டும் சுத்தமாக இருந்தால், பெரும்பாலும் நோய்கள் வராது. முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொடுப்பது நல்லது. பிறகு, கொதிக்க வைக்கத் தேவையில்லை. தண்ணீரில் ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ கிருமிநாசினியை கலந்து கொடுத்தால் போதும். இது, குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கொடுக்கலாம்.

கறிக்கோழி வளர்ப்பவர்கள் அதை விற்பனை செய்வதற்குள் 4 தடுப்பூசி போடுவார்கள். ஆனால், காடைகளுக்கு எந்தவிதமான தடுப்பூசிகளும் போடத் தேவையில்லை. தண்ணீர், தீவனம் சுகாதாரமாக இல்லாவிட்டால், மட்டுமே நோய் தாக்கும். தரையில் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது, கோழிகளைத் தாக்கும் ரத்தக் கழிசல் நோய் வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க தீவனத்தில் ரத்தக் கழிசல் நோய் தடுப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். காடைகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் போது பெரும்பாலும் ரத்தக் கழிசல் நோய் வருவதில்லை.

விற்பனையில் வில்லங்கமில்லை..!

அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு காடை 25 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்கள், அக்கம்பக்கம் உள்ளவர்கள், பார்களில் இதற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களிடம் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இதுவரை விற்பனையில் பிரச்னை என்று வந்ததில்லை. எனவே, நிச்சய லாபம் கிடைக்கும் இந்த ’நாமக்கல் 1’ ரக காடையை விவசாயிகளுக்கு முன்பதிவின் அடிப்படையில் ரூ. 3.50 வீதம் விற்பனை செய்கிறோம். தேவையானவர்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று தெளிவாக விவரங்களை எடுத்து வைத்தார்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

1 thought on “காடை வளர்ப்பு : பகுதி-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj