Skip to content

கொத்தமல்லி (Coriandrum Sativum)

சித்தர் பாடல்

கொத்தமல்லி வெப்பம் குளிர்காய்ச்சல் பித்தமந்தஞ்

சர்த்திவிக்கல் தாகமொரு தாதுநட்டம் – கத்தியெழும்

வாத விகார்மடர் வன்கர்த்த பிவிரணம்

பூதலத்தில் லாதகற்றும் போற்று.

கொத்தமல்லிக் கீரையுண்ணில் கோரவ நோசகம்போம்

பித்தமெல்லாம் வேருடனே பேருங்கான் – சத்துவமாம்

கச்சுமுலை மாதே! நீ காண்.

(அகத்தியர் குணபாடம்)

பொருள்

உடல் சூடு, குளிர்க் காய்ச்சல், பித்த நோய்கள், விக்கல், தாகம், வாத நோய்கள், புண்கள் போன்றவை குணமாகும்.

கொத்தமல்லிக் கீரையின் தன்மை

பசித் தூண்டி = Stomachic

அகட்டுவாய் அகற்றி = Carminative

வெப்பம் உண்டாக்கி   = Stimulnat

சிறுநீர்ப்பெருக்கி       = Diuretic

கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அனைத்துவிதமான குழம்புகளையும் மற்ற உணவு வகைகளையும் நறுமணத்துடன் சுவையைக் கூட்டித் தருவது கடைசியாகச் சேர்க்கப்படும் கொத்தமல்லிதான். கொத்தமல்லியில் வைட்டமின் – ஏ, பி மற்றும் சி சத்துகள் நிறைய உள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிகமாக உள்ளன.

கொத்தமல்லியை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால், நரம்பு, எலும்பு, தசை மண்டலங்களில் உண்டாகும் பாதிப்புகளைத் தவிக்கலாம். கொத்தமல்லியால் நன்கு பசி ஏற்படும். வாயு நன்றாகப் பிரியும். காச நோய்கள், சிறுநீரக நோய்கள் குணமாகும். இரவு உணவில் சேர்த்துக்கொண்டால், நன்றாகத் தூக்கம் வரும்.

கொத்தமல்லியின் மருத்துவப் பயன்கள்:

கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு மென்று தின்றால் உடல் சூடு குறையும். நன்கு பசி எடுக்கும்.

கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள், மிளகு சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குளிர்காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லியோடு சிறிது சீரகம், மஞ்சள், மிளகு சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.

கொத்தமல்லி சாறில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், கொழுப்பு குறையும். ரத்த அழுத்தமும் சீராகும்.

கொத்தமல்லிச் சாறில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் உணவுக்கு முன் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வாந்தி ஏற்பட்டு, அதிகப்படியான கபம் வெளியேறும்.

கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் 30 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

கொத்தமல்லியை, நல்லெண்ணெய் சேர்த்து, வதக்கி, வீக்கம் மற்றும் கட்டிகள் மீது கட்டினால், அவை சீக்கிரம் கரைந்துபோகும் அல்லது, பழுத்து, உடைந்து, புண் எளிதில் ஆறிவிடும்.

கொத்தமல்லிச் சாறில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும். கொத்தமல்லிச் சாறில் சந்தனப்பொடி குழைத்து பற்று போட்டால் பித்தத்தால் ஏற்படும் தலைவலி சரியாகும். கொத்தமல்லியோடு சந்தனம், நெல்லிவற்றல் சேர்த்து தண்ணீரில் ஊறவைத்துக் குடித்தால் தலைச்சுற்றல் குணமாகும்.

கொத்தமல்லியின் பிற பயன்கள்:

கொத்தமல்லி சூப், கொத்தமல்லி சாதம், கொத்தமல்லி சட்னி, கொத்தமல்லி பச்சடி

கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள்:

நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாதுப்பொருள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj