Skip to content

புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus)

சித்தர் பாடல்

தேகசித்தி யாகுஞ் சிறுகாசம் மந்தமறும்

போகமுறும் விந்துவுநற் புஷ்டியுண்டாம் – வாகாம்

வெளிச்சிறுமான் நோக்குவிழி மென்கொடியே! நாளும்

புளிச்சிறு சீரையுண்ணும் போது.

(அகத்தியர் குணபாடல்)

பொருள்

ஆரம்ப நிலை காச நோய் குணமாகும். உடலின் மந்தத்தன்மை விலகும்.

வறட்சி அகற்றி –  Emollient

மலம் போக்கி –  Laxative

இன்பம் பெருக்கி – Aphrodisiac

புளிச்சக் கீரையை கோங்குரா என்று தெலுங்கில் சொல்வார்கள். அரைக் கீரையைக் கடையும்போது தக்காளிக்குப் பதில் இந்தக் கீரையை பக்குவப்படுத்தி சமைத்துச் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். கோடை வெப்பத்தைத் தணிப்பதில் சிறந்தது. நரம்புத்தளர்ச்சியை போக்கக்கூடியது.

இந்தக் கீரையில் புரதம், கால்சியம், இரும்பு, தாது உப்புகள், மாவுச்சத்து, வைட்டமின் – ஏ, தயாமின், ரிபோஃபிளேவின், நிகோடினிக் அமிலம் போன்றவை  உள்ளன. இதயநோய், குடற்புண், ஜீரணக் கோளாறுகள், ரத்த அழுத்தம், வாத நோய், சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

புளிச்சக் கீரையின் மருத்துவப் பயன்கள்

புளிச்சக் கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும். புளிச்சக் கீரையை சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மந்தம் குணமாகும்.

புளிச்சக் கீரைச் சாற்றில் சோம்பை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ருசியின்மை பிரச்சனை தீரும்.

புளிச்சக் கீரையில் மிளகை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் அரை கிராம் அளவில் சாப்பிட்டால் சீதள நோய்கள் குணமாகும்.

புளிச்சக் கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் கரப்பான் போன்ற தோல் நோய்கள் தீரும்.

புளிச்சக் கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால், கால் வீக்கம் குணமாகும்.

புளிச்சக் கீரை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் எலும்பு ஜீரம் தணியும்.

புளிச்சக் கீரையின் பிற பயன்கள்:

புளிச்சக் கீரை சட்னி (கோங்குரா சட்னி), புளிச்சக் கீரைக் கூட்டு, புளிச்சக் கீரை இட்லிப் பொடி என்றும் பயன்படுத்துகிறார்கள்.

புளிச்சக் கீரையில் உள்ள சத்துக்கள்:

நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள் நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மாவுப்பொருள், தையாமின், ரிபோஃபிளேவின், நியாசின் வைட்டமின் – சி.

குறிப்பு: சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, கீரையை சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து அரைத்து, துவையலாக செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். வயிறு மந்தம் நீங்கும். புளிச்ச கீரையை நீரில் கொதிக்கவிட்டு அந்த நீரைக் குடித்து வந்தால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

குறிப்பு: மூட்டுவலிப் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்கலாம். இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தம் உடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj