Skip to content

தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

இந்நோயானது பிரேசில், ஆப்ரிக்கா, கயானா, இலங்கை, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற தென்னை அதிகம் பயிராகும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் தென்னைப் பயிராகும் எல்லா மாநிலங்களிலும் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. தென்னையைத் தவிர பாக்கு, ஈச்ச மரம், கொக்கோ, ரப்பர் போன்ற மரங்களையும் தாக்கக் கூடியது. தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி

இந்நோயானது ஃபைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் தோற்றுவிக்கப்படுகிறது. இதன் பூசண இழைகள் குறுக்குச் சுவர்கள் இல்லாமலும், நிறமற்றும், திசுவறைகளுக்கு இடையேயும் காணப்படும். இழைகளிலிருந்து தோன்றும் உறிஞ்சும் உறுப்புகள் திசுவறைகளுக்குட்சென்று பூசணத்திற்கு வேண்டிய உணவுப் பொருட்களைக் கிரகித்துக்கொள்ளும்.

நோயின் அறிகுறிகள்

            தென்னையின் எந்த வயதிலும் இந்நோய் தாக்கக்கூடும். நோயின் அறிகுறி முதலில் இளங்குருத்தில் காணப்படும். நோய்த் தாக்கியக் குருத்துப் பச்சை நிறத்தை இழந்து, மஞ்சள் நிறமாக மாறும். குருத்திலுள்ள திசுக்கள் அழுகி ஓரிரு வாரங்களில் பழுப்பு நிறமாக மாறிவிடும். நடுக்குருத்து அழுகலைத் தொடர்ந்து, அதையடுத்து கீழுள்ள இலைகளும் தாக்கப்படும். முழுவதும் விரியாத இலைகளில் ஈரக்கசிவுடன் கூடிய உட்குழிந்த புள்ளிகள் தோன்றி, மேலும் கீழுமாகப் பரவி, இலைப்பகுதி முழுவதும் தாக்கப்படும். புள்ளிகள் ஒழுங்கற்ற வடிவிலும், ஈரக்கசிவுடன் தென்படும். இதனால் நுனியிலிருந்து இலைகளும், மட்டைகளும் வாடி, காய்ந்துவிடும். குருத்தை விரித்துப் பார்த்தால் இலைகளில் ஒழுங்கற்ற வடிவமுள்ள அழுகியப் பகுதிகளைத் திட்டு திட்டாகக் காண முடியும். நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் போது சில மாதங்களில் மரத்திலுள்ள மட்டைகள் எல்லாமே அழுகி, காய்ந்து விழுந்துப் பின்னர் மரமே மடிந்து விடும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

நோய்க்காராணியானது அழுகிப்போன இலைகள் மற்றும் குருத்துப் பகுதிகளில் காணப்படும் பூசண இழைகள், இழை வித்துக்கள், ஊஸ்போர்ஸ் என்னும் உறங்கும் வித்துக்கள் போன்றவற்றின் மூலம் பரவுகிறது. காற்று, மழைச்சாரல், பூச்சிகள் போன்றவற்றால் ஸ்போரான்ஜியா வித்துப்பைகள் ஒரு மரத்திலிருந்து வேறு மரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இரண்டாம் பட்சமாக நோய்ப் பரவுகிறது. மரமேறும் தொழிலாளிகள், தென்னையின் குருத்தைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகள், பூச்சிகளிலிருந்து தேன் சேகரிக்க வரும் பலவகைப் பூச்சிகள் மூலமாகவும் நோய்ப் பரவக்கூடியது. பருவ மழைத் தொடர்ந்துப் பெய்யும் போதும், ஈரப்பதம் மிக அதிகமாகக் காணப்படும் போதும் வெப்பநிலை 18 – 200 செ.கி. இருக்கும் போதும் இந்நோய் அதிகளவில் பரவுகிறது.

நோய்க்கட்டுப்பாடு

மருந்து சிகிச்சை

நோய்த் தாக்கிய உடனேயே கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடித்தால், இந்நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம். முதலில் நோய்த் தாக்கிய குருத்து மற்றும் குருத்தைச் சுற்றியுள்ள நோய்த் தாக்கிய எல்லா மட்டைகளையும், அடியிலிருந்து அறுத்து அகற்றி அழித்து விட வேண்டும். பின்னர் ஒரு சத போர்டோ கலவையை நன்குத் தெளிக்க வேண்டும். பின்னர் ஒரு சத போர்டோ பசைத் தயாரித்து அறுத்தப் பாகங்களில் எல்லாம் நன்கு பூச வேண்டும். பின்னர் ஒரு அகலமான வாய்க் கொண்ட பெரியப் பானையைக் கொண்டு, குருத்துப்பாகத்தில் மழைநீர்ப் படாதவாறு மூடிவிடவேண்டும். மரத்தின் உட்குருத்து முழுவதும் நோயினால் தாக்கப்பட்டு, அழுகாமல் இருந்தால், சில மாதங்களில் புதுக்குருத்து மறுபடியும் வளரும்.

ஒரே மரத்தில் நோய்த் தோன்றியிருந்தாலும் கூட தோப்பிலுள்ள எல்லா மரங்களுக்கும், குருத்து மற்றும் இலைப்பாகங்கள் நன்கு நனையுமாறு ஒரு சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். மழைக்காலம் ஆரம்பித்தவுடன் ஒரு முறையும், 15 – 30 நாட்களுக்குப் பின்னர் அடுத்து ஒரு முறையும் மருந்துத் தெளிக்க வேண்டும். போர்டோ கலவைக்குப் பதில் தாமிர ஆக்ஸிகுளோரைட் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்தும் தெளிக்கலாம். டைமிதியோமார்ப் 1 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்தும் தெளிக்கலாம்.

உழவியல் முறைகள் 

முறையான வடிகால் வசதியை மேற்கொள்ளுதல்.

கட்டுரையாளர்: கு.விக்னேஷ், முதுநிலை வேளாண் மாணவர், தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்– 608002. தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news