Skip to content

கழனியும் செயலியும் (பகுதி – 3)

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயலிகளை வேளாண் தகவல்களுக்காக இந்திய அரசானது வெளியிட்டுள்ளது.  இம்மாதிரியான செயலிகளானது வேளாண் நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை வேளாண் ஆராய்ச்சிகள், செய்திகள் நிகழ்வுகள், விலை நிலவரங்கள், மேலும் பல தகவல்களை விவசாயிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் தெரிவிக்கின்றன, அந்த வரிசையில் இந்த வார செயலிகள் இதோ….

CHC

இந்த செயலியானது உழவர்களையும் இயந்திர வாடகை மையங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. 50 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இயந்திர வாடகை மையங்களிலிருந்து, தங்களுக்குத் தேவையான உபகரணங்கள், இயந்திரங்களை உழவர்கள் தேர்ந்தெடுத்து அவற்றை குறைந்த வாடகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலை மதிப்புள்ள நுண்ணிய வேளாண் உபகரணங்களை பயன்படுத்தி நல்ல இலாபம் ஈட்டலாம். இச்செயலியினை உபயோகித்து குறைந்த நேரத்தில் இயந்திரங்களின் உதவியுடன் உழவாரப் பணிகளை எளிதில் செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்திடலாம்.

 

அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண் இயந்திர வங்கி என சொல்லப்படும் வேளாண் இயந்திர வாடகை மையங்களிலிருந்து குறைந்த வாடகையின் மூலம் தேவையான இயந்திரங்களை பயன்படுத்தி பயன்பெற்றிடலாம். தங்கள் இயந்திரங்களை வாடகைக்கு விட நினைக்கும் விவசாயிகளும் இதனை பயன்படுத்தி அவர்களது வேளாண் வருவாயினை பெருக்கிக்கொள்ளலாம். பண்மொழிகளில் செயல்படும் இச்செயலி, பழைய வேளாண்   உபகரணங்களை விற்கவும், வாங்கவும் வழிவகை செய்கிறது.

இச்செயலியினால் வேளாண் அறிவியல் மையங்களின் சேவைகளை உழவா்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே பெற்றிடலாம். வேளாண் பயிர்கள், தோட்டப்பயிர்கள், மீன்வளம் மற்றும் கால்நடைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. வேளாண் அறிவியல் மையங்களிலிருந்து தொலைவில் இருக்கும் உழவர்கள் இச்செயலியின் மூலம் தங்களுக்குத் தேவையான பெரும்பான்மையான முக்கிய செய்திகளை பெற்று பயன்பெறலாம்.

தகவல்கள்

  1. அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையம்

மாநிலம் மற்றும் மாவட்டத்தினை உள்ளிடுவதன் மூலம் தங்கள் மாவட்டத்திலுள்ள மொத்த வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரியினையும் தெரிந்துகொள்ளலாம்.

  1. சேவைகள்

காளாண், தேனி வளா்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், நாற்றாங்கால் விடுதல், மதிப்பு கூட்டல் இன்னும் பிற தகவல்கள் முதற்கொண்டு பல்வேறு சேவைகளும் அவை குறித்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் அமையப்பெற்றிருக்கும்.

  1. பயிர் தொகுப்பு (Package of practices)

வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், மீன் வளா்ப்பு மற்றும் கால்நடைகள் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். இதனை பயன்படுத்தி உழவா்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விடை பெறலாம்.

  1. நிகழ்வுகள்

நடக்கவிருக்கும் நிகழ்வுகள்: இதன்மூலம் வரவிருக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள், நிகழ்வுகளின் தொடக்கம் மற்றும் முடிவு, நடக்கும் இடம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

முன் நடந்த நிகழ்வுகள்: இதன்மூலம் ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட நிகழ்வுகள், நிகழ்வுகள் நடந்த நாள், நடந்த இடம், நிகழ்ச்சியின் சாரம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

  1. வானிலை நிலவரங்கள்

இந்திய வேளாண் வானிலை அமைப்பினால் மாவட்ட வாரியாக தெரிவிக்கப்படும் வானிலை குறித்த தகவல்களை இச்செயலியன் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  1. சந்தை நிலவரங்கள்

e-NAM ல் குறிப்பிடப்பட்டிருக்கும் வேளாண் விலை நிலவரங்களையும் இச்செயலி மூலம் அறிந்து உழவா்கள் பயன்பெறலாம்.

  1. கேள்விகள்

வேளாண்மை குறித்த சந்தேகங்களை உழவர்கள் கேள்விகளாக இச்செயலியில் உள்ளிடலாம். கேள்விகளின் துல்லியத்தினை தெளிவுபடுத்தும் வகையில் புகைப்படமாகவோ, ஒலியாகவோ, காணொளியாகவோ பதிவேற்றம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கேள்விகளுக்கான தீா்வினை துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிப்பார்கள். அதற்கு ஏற்றார் போல விவசாயிகள் தங்களது கள முடிவுகளை மேற்கொள்ளலாம்.

  • தொடரும்…

கட்டுரையாளர்: ச. ஹரிணி ஸ்ரீ, முதுநிலை வேளாண் மாணவி, உழவியல் துறை, வேளாண்புலம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: agriharini@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news