Skip to content

நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

            நெல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப் பயிராகும். நெல் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு நோய்க்காரணிகளால் தாக்கப்பட்டு பல நோய்க்களுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப் படுகிறது. அவற்றுள் ஒன்று தான் மஞ்சள் குட்டை நோய். இந்தியாவில் 1967-ம் ஆண்டில் தோன்றிய இந்நோய், புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஒரு ஸ்போராடிக் வகை நோய். இந்நோய் பற்றியும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி

இந்நோயானது மைக்கோபிளாஸ்மா என்ற நுண்ணுயிரிகளால் தோற்றுவிக்கப் படுகிறது.

நோயின் அறிகுறிகள்

இந்நோய் பயிரின் எல்லா வளர்ச்சிப் பருவத்திலும் தாக்கக் கூடியது. இளம் பயிர்கள் தாக்கப்படும் போது, நோயின் தீவிரமும், மகசூல் இழப்பும் அதிகமாகக் காணப்படும். நோயுற்ற செடியில், புதிதாகத் தோன்றும் இளம் இலைகள், வெளிரியும் மஞ்சள் கலந்த பச்சை அல்லது வெளிர்ப்பச்சை நிறத்தில் தென்படும். தாக்கப்பட்ட குத்தில், தூர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால், செடிகளின் வளர்ச்சிக் குன்றி, குட்டையாகவும், நலிந்தும் தென்படும். பெரும்பாலும் நோய்த் தாக்கியச் செடிகள், அறுவடை வரையிலும் உயிரோடு இருக்கும். இந்தச் செடிகளிலிருந்து கதிர்கள் வருவதில்லை அல்லது ஒரு குத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு கதிர்களே வரும். இவற்றிலும் சில மணிகளே உண்டாகிருக்கும். அந்த மணிகளும், சரிவர பால் பிடிக்காமல் பதராக மாறிவிடும்.

தூர் கிளைக்கும் பருவத்திற்குப் பிறகு நோய் தாக்கினால், நோயின் அறிகுறிகள் தெளிவாக வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் இப்பயிர் அறுவடைக்குப் பின்வரும் கட்டைப் பயிரில், நோயின் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும். இந்நோயால் தாக்கப்பட்ட செடிகளில், செர்க்கோஸ்போரா இலைப்புள்ளி நோயும், செம்புள்ளி நோயும் அதிகளவில் தோன்றும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்நோய் நெப்போடெட்டிக்ஸ் வைரசன்ஸ், நெப்போடெட்டிக்ஸ் நைக்ரோபிக்டஸ் போன்ற பச்சைத் தத்துப் பூச்சிகளால் பரப்பப்படுகிறது. பூச்சிகள் நோய்த்தாக்கிய செடியில், 1 – 3 மணி நேரம் சாற்றை உறிஞ்சும் போது, அவை  மைக்கோபிளாஸ்மா நோய்க்காரணியை அவற்றினுள்ளே எடுத்துக்கொள்ளும். இந்த நோய்க்காராணியானது, பூச்சியின் உடலுக்குள், 25 – 30 நாட்கள் தங்கியிருந்த பின்னரே, பூச்சிகள் நோயைப் பரப்பக்கூடிய திறனைப் பெறுகின்றன. இவ்வாறு நோயைப் பரப்பக்கூடிய தன்மையைப் பெற்ற பூச்சிகள், நோய்த் தாக்காத செடியில் 1 – 3 நிமிடங்கள் வரை சாற்றை உறிஞ்சும்போது நோயைப் பரப்பக்கூடியவை. ஒருதரம் மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியைப் பெற்றுக்கொண்ட பூச்சிகள், அவற்றின் வாழ்நாட்கள் முழுவதும் நோயைப் பரப்பக்கூடியவை.

இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் நோயைப் பரப்பக் கூடியவை. பச்சைத் தத்துப் பூச்சிகள், பல்கிப் பெருகுவதற்கு ஏற்ற காலநிலைகளான, குளிர்ந்த, ஈரப்பதம் அதிகமாக உள்ள காலங்கள், இந்நோய் அதிகளவில் தோன்றி, பரவுவதற்கு ஏற்றதாகக் காணப்படுகின்றன.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்  :

(i) வயல் வெளிகளிலும், சுற்றுப் புறத்திலும் காணப்படும், புல் பூண்டுகளை அழித்து, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

(ii) பயிர் அறுவடைக்குப் பின்னர் வயலை நன்கு உழுது, கட்டைப் பயிர் தோன்றாமல் வைத்திருக்க வேண்டும்.

(iii) நோயைப் பரப்பக்கூடியப் பூச்சிகள், வெளிச்சத்தினால் கவரப்படக் கூடியவை. ஆகவே விளக்குக் கம்பங்களுக்கு அருகில் நாற்றாங்கால் அமைக்கக் கூடாது. (iv) வயல்களில் விளக்குப்பொறி வைத்துப் பச்சைத் தத்துப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கண்காணித்து, ஒரு குத்துக்கு 5 பூச்சிகள் என்ற எண்ணிக்கை காணப்படும் போது தகுந்த கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்து, தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

(v) தழைச்சத்து உரத்தை ஒரே முறையாக இடாமல் பகிர்ந்து அளிப்பதோடு, தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

(vi) பயிரை அடர்த்தியாக நடாமல், சரியான இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.  

 (vii) நோய்த் தாக்கியச் செடிகளை வயலிலிருந்து அவ்வப்போது அகற்றி அழித்து விடவேண்டும்.

மருந்து சிகிச்சை

நோய்க்கட்டுப்பாட்டு  முறைகளை நாற்றாங்காலிலேயே கையாண்டு, பச்சைத் தத்துப் பூச்சிகளை அழிக்க வேண்டும்.

(i) நாற்றாங்காலில் 8 சென்ட் பரப்பிற்கு 1.4 கிலோ கார்போஃபியூரான் – 3 சத குருணை அல்லது 400 கிராம் ஃபோரேட் 10 சத குருணை மருந்துடன் மணலும் கலந்து சீராகத்தூவி, தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். குருணை மருந்து இடாவிட்டால் 40 மில்லி மோனோகுரோட்டோஃபாஸ் மருந்தை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து, விதைத்த 10-ம் மற்றும்  20-ம் நாள் தெளிக்க வேண்டும்.

(ii) நடவு வயலில், நடவு செய்த 15-ம் மற்றும் 30-ம் நாட்களில், ஏக்கருக்கு மோனோகுரோட்டோஃபாஸ் – 400 மில்லி அல்லது ஃபாஸ்ஃபாமிடான் 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்

ஐ.ஆர்.62 , ஐ.ஆர்.64 போன்ற இந்நோய்க்கு ஓரளவு எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடலாம்.

கட்டுரையாளர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news