Skip to content

டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்

குஜராத் மாநிலத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டாக்டர் பருத்தி (Doctor cotton) என்ற புதிய டிஜிட்டல் முடிவு எடுக்க உதவும் தொழில்நுட்பம் பெரிதும் உதவி வருகிறது. இப்புதிய தகவல் தொழில்நுட்பம் வாயிலாக பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்ள உதவும் தகவல்கள், தொழில்நுட்பங்கள் தினமும் வழங்கப்படுகிறது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தினந்தோறும் வானிலை தகவல்கள் வழங்கப்படுகிறது. மேலும் ஒருவார கால அளவிற்கு முந்தைய வானிலை தகவல்களும் வழங்கப்படும். அவர்கள் தங்கள் பருத்தி தோட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய வேளாண் பணிகள் பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக விவசாயிகள் தங்கள் பருத்தி தோட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நீர்ப்பாசனம், பூச்சி மருந்து தெளிப்பு, களைக் கொல்லிகள் பயன்பாடு போன்றவற்றை முறைப்படுத்த முடியும். மேலும் பருத்தியில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் காணப்பட்டால் அதனை தங்களின் திறன் கைபேசிகள் (smart phones) வாயிலாக புகைப்படம் எடுத்து, அதற்கு தேவைப்படும் கட்டுப்பாடு முறைகளை தெரிவிக்க பருத்தி விவசாயிகள் டாக்டர் பருத்திக்கு அனுப்பலாம். இதன் வாயிலாக வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று பருத்தி சாகுபடிக்குத்  தேவைப்படும் பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது குஜராத் பசுமை புரட்சி நிறுவனம் (Gujarat Green Revolution Company) என்று பொதுத்துறை நிறுவனம் மற்றும் WWF (இந்தியா), IKEA நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இப்புதிய விவசாய தகவல் தொழில்நுட்ப சேவை கடந்த ஒரு வருடமாக குஜராத் மாநில பருத்தி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்புதிய முயற்சியில் விவசாயிகள் தங்களின் பண்ணை விபரங்களை பதிவு செய்யும் வசதியும் உண்டு. தற்போது புவியியல் தகவல் அமைப்புடன் (Geographic Information System) இணைக்கப்பட்டு துல்லியமான படமிடல் (mapping) வாயிலாகவும் முறையான தரவு பகுத்தாய்வு (Data Analysis) வாயிலாக வேளாண் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய 2019-2020 காலகட்டத்தில் சுமார் 95,000 பருத்தி விவசாயிகள், குஜராத் மாநிலத்தில் உள்ள 18000 கிராமங்களில் இப்புதிய டாக்டர் பருத்தி சேவைகளை பயன்பாடுத்தி வருகின்றனர். சுமார் 2790 பருத்தி விவசாயிகள் இந்த புதிய செயலியை தங்கள் திறன் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக விவசாயிகள் நேரடியாக விஞ்ஞானிகளை குறுஞ்செய்திகள் (sms), வீடியோ அழைப்புகள் (video calls) மற்றும் குரல் அழைப்புகள் (voice calls) வாயிலாக தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகளைப் பெற முடியும். மேலும் இச்செயலி வாயிலாக புகைப்படங்களை பதிவேற்றம் (uploading) செய்து உடனடியாக உரிய தீர்வுகள் பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய தொழில்நுட்பம் விவசாயிகளின் கருத்துக்கள், தேவைகளை கேட்டு அறிந்து தொடர்ந்து மேம்படுத்துதல் (upgrade) செய்யப்படுகிறது.

பருத்தி சாகுபடி பணிகள் துவங்குவதற்கு முன்பாகவும், பருத்தி காய்கள் உருவாகும் (boll formation) பருவத்திலும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இக்கலந்துரையாடல் வாயிலாக பல பருத்தி விவசாயிகள் தங்கள் பருத்தி தோட்டங்களை செயற்கைக்கோள் உதவியுடன் இணைக்கவும் உதவியுள்ளதால் சிறந்த முறையிலான தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்க உதவிகளை பெற டாக்டர் பருத்தி உதவுகிறது. தற்போது சில கிராமங்களில் இணையவழி தொடர்புகள் ஒழுங்காக இணைக்க தடை உள்ளதால் சில பருத்தி விவசாயிகள் இப்புதிய டாக்டர் பருத்தி தகவல் தொழில்நுட்பத்தை முறையே பயன்படுத்த முடியாத நடைமுறை சூழலும் நிலவுகிறது. இருப்பினும் தற்போது வேளாண்மையில் குறிப்பாக பருத்தி பணப்பயிர் சாகுபடியில் பருவ மாற்று பிரச்சனை (climate change issues)களின் தாக்கம் அதிகமாக உள்ள நடைமுறை சூழலில் நீடித்த நிலையான வேளாண்மை அடைய (sustainable agriculture) பருத்தி டாக்டர் தகவல் தொழில்நுட்பம் குஜராத் மாநில பருத்தி விவசாயிகள் அதிகளவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அடைய பெரிதும் உதவி வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய டாக்டர் பருத்தி தொழில்நுட்பம் நமது நாடு முழுவதும் உள்ள பருத்தி விவசாயிகளிடம் விரிவாக்கம் செய்யும் போது நம்மால் பருத்தியில் அதிகளவு மகசூல் பெறுவதுடன் பருத்தி விவசாயிகளின் தற்கொலைகளையும் தடுக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news