உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றான அட்டகாமா பாலைவனத்தில், ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை, மழைக்குப் பின் பூக்கள் பூக்கும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
டெஸியெர்டோ ஃபுளோரிடா (Desierto Florido) என்று இந்நிகழ்வை அழைக்கின்றனர். இதற்கு ‘பூக்கும் பாலைவனம்’ என்று பொருள்.
அட்டகாமா
அட்டகாமா பாலைவனம் தென் அமெரிக்க கண்டத்தின் சிலி நாட்டில் அமைந்துள்ளது.
இப்பகுதி வறண்ட மழை மறைவு பிரதேசமாக மாற இதன் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆண்டிஸ் மலைத் தொடர்களும் ஒரு காரணம். அமேசான் மழைக்காடுகளில் இருந்தும், அட்லாண்டிக் கடலிலிருந்தும் வரும் குளிர்ச்சியான காற்றை, அட்டகாமா பாலைவனப் பகுதிக்கு செல்ல விடாமல் இந்த ஆண்டீஸ் மலைத்தொடர் தடுக்கிறது.
1600 கி.மீக்கும் அதிகமான நீளத்திற்கு பரவியுள்ள இந்தப் பாலைவனம், பல வித்தியாசமான நிலப்பரப்புகளைத் தன்னுள் கொண்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள அட்டகாமா பாலைவனத்தின் பகுதிகள், பசிபிக் பெருங்கடலில் இருந்து வரும் மூடு பனியை பெறுவதால், இது மூடுபனி பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது…. உலகின் மிகப்பெரிய மூடுபனி பாலைவனம் இதுவே…
அட்டகாமா பாலைவனத்தின் சில பகுதிகள் செவ்வாய் கிரகத்தை ஒத்திருப்பதால், உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, தன்னுடைய செவ்வாய் கிரக பயணத்திற்கான ரோவர்களை இப்பகுதியிலேயே பரிசோதித்து பார்க்கிறது.
மேலும் உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனமான சாலார் டி அட்டகாமா இப்பகுதியில் தான் அமைந்துள்ளது.
உலகின் மிகப் பழமையான பாலைவனங்களில் ஒன்று
இப்பகுதி 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான ஜுராசிக் காலத்திலேயே வறண்டு போக தொடங்கி விட்டது. 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மையோசின் காலகட்டத்தில் இப்பகுதியின் வறட்சி உச்ச நிலையில் இருந்துள்ளது.
அடகாமா பாலைவனத்தில் 400 ஆண்டுகள் மழைப்பொழிவை பார்க்காத பகுதிகள் கூட உள்ளன.
தூங்கி விழித்த விதைகள்
அட்டகாமா பாலைவனத்தில் (சிலியின் வடக்குப் பகுதி) சமீபத்தில் பெய்த மழைப் பொழிவினால், அங்கு தூக்கத்தில் இருந்த விதைகள் முளைத்து பாலைவனமெங்கும் கம்பளம் விரித்தது போல் பூக்களாக பூத்துள்ளன. கிட்டத்தட்ட 200 வகையான செடி வகைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. இப்பகுதியில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வி செடி வகைகள் அவை.
கடந்த 40 ஆண்டுகளில் 15 முறை இப்பகுதியில் பூக்கள் பூத்துள்ளன. எல் நினோ மாற்றத்தின் காரணமாகவும், மாறிவரும் புவி வெப்பமயமாதலின் விளைவாகவும், சமீப காலமாக அங்கு அடிக்கடி மழை பெய்வதால், ‘பூக்கும் பாலைவன’ நிகழ்வும் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் பூக்கள் பூத்த நிலையில், இவ்வருடமும் பூக்கள் பூத்துள்ளன.
இம்முறை வெள்ளை, ஊதா, சிவப்பு மஞ்சள், இள நீல நிற சஸ்பிரோ, அனேனுகா, சிஸ்டேன்தே, லைலக் ஆகிய பூக்கள் அதிகளவில் பூத்துள்ளன. இப்பகுதியில் மேலும் மழை பொழியலாம் என கணிக்கப்பட்டுளதால், மேலும் பல வகை பூக்கள் விரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் பூக்க தொடங்கியுள்ள இச்செடிகள், நவம்பர் முதல் வாரத்தில் பூத்து முடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பூக்களைப் பார்ப்பதற்காக புகைப்படக் கலைஞர்களும் மக்களும் ஏராளமாக அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
முனைவர். வானதி ஃபைசல்,
விலங்கியலாளர்.


