நம் மக்கள் மட்டும் தான் வெளிநாட்டு கலப்பின மாடுகளை விரும்புகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? வெளிநாட்டினரும் அதே மோகத்தில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அதிக பால், நல்ல இறைச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நம் இந்திய நாட்டு மாடுகளின் கலப்பினங்களை அதிகளவில் விரும்புகின்றனர்.
அப்படிப்பட்ட ஆர்வத்தில் பிரேசில் மக்களால் உருவாக்கப்பட்டது தான் குஷெரா (Guzera) மாடுகள். இந்தியாவைச் சேர்ந்த கேங்கிரெஜ் (Kankrej) மாடுகளையும், பிரேசிலின் நாட்டு மாடுகளான டாரைன் கிரையுலா (Taurine Crioulo)-வையும் இணைத்து இந்த கலப்பின மாடுகளை உருவாக்கியுள்ளனர். சுவாரசியமான விஷயம் என்னவெனில், நம் இந்திய மாநிலமான ‘குஜராத்’ – தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு குஜராத், குஜராத்தி, குஜரா, குஷெரா போன்ற பெயர்களால் இவற்றை அழைப்பது தான். இந்திய கலப்பின மாடுகள் என்பதை பெருமைப்படுத்தும் விதமாகவே இம்மாடுகளுக்கு இப்பெயர்களை வைத்துள்ளனர்.
இந்த கலப்பின மாடுகள், நம் நாட்டு கேங்கிரெஜ் மாடுகளை விட அளவில் பெரியதாகவும், பெரிய கொம்புகளை கொண்டவையாகவும் உள்ளன. கேங்கிரெஜ் மாடுகள் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ரான் ஆஃப் கட்ச் பாலைவனத்தில் வாழ்கின்றன. எனவே இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட கலப்பின மாடுகள் அதிக வெயில் மற்றும் வறட்சியை தாங்குவதோடு, பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டவையாகவும் உள்ளன.
குஷெரா மாடுகளில் ஆண் மாடுகள் 900 கிலோ எடையும், பெண் மாடுகள் 600 கிலோ எடையும் கொண்டவையாக உள்ளன. ஆண் பெண் இரு மாடுகளும் கொம்புகளைக் கொண்டுள்ளன. பிரேசிலின் வெப்பமண்டல சூழலை வெற்றிகரமாக தாக்குப் பிடிக்கும், இம்மாடுகளை பிரேசில் மக்கள் மிகவும் விரும்பி வளர்ப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
முனைவர். வானதி பைசல்
விலங்கியலாளர்