Skip to content

மரத்தவளையை போன்று குரலெழுப்பும் அமேசான் பறவை- பாம்படார் கோட்டிங்கா

கோட்டிங்கிடே குடும்பத்தைச் சார்ந்த இந்த அழகிய பறவைகள், அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன. தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, கயானா, சூரிநேம் ஆகிய நாடுகளில் இந்த பாம்படார் கோட்டிங்கா (Pampadour Cotinga) பறவைகளை பரவலாக காண முடியும். இவற்றின் விலங்கியல் பெயர் சைஃபோலினா புனிசியா (Xipholena punicea),

1764 ஆம் ஆண்டு டச்சு இயற்கை ஆர்வலர் ஆட்ரியன் விராக் என்பவர், முதன் முதலில் இப்பறவைகளை ஆவணப்படுத்தினார். மனித நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் உள்ள, மரங்களின் உச்சிகளில் இப்பறவைகள் வாழ்வதால் இவற்றைப் பற்றி மிகக் குறைவான ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை மரத்தவளைகளை போன்று ஒலி எழுப்புகின்றன.

பாம்படார் கோட்டிங்கா பறவைகளின் முக்கிய உணவு பழங்களே. அத்தி பழங்களை மிகவும் விரும்பி உண்கின்றன. சில நேரங்களில் பூச்சிகளையும் உண்ணும்.

58 முதல் 76 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய பறவைகள் இவை. இப்பறவைகளில் ஆண், பெண் வேறுபாட்டினை எளிதில் கண்டறியலாம். ஆண் பறவைகள் பளிச்சென்ற ஒயின் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவற்றின் கண்கள் மஞ்சள் நிறமாகவும், சிறகுகளின் விளிம்பு  வெண்ணிறத்திலும் உள்ளது. பெண் பறவைகள் பழுப்பு அல்லது இளஞ்சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன. 60 அடி உயரமுள்ள மர உச்சிகளில் கூட்டினை கட்டி, ஒரு நேரத்தில் ஒரு முட்டையினை இடுகின்றன.

Cotinga pompadour. Famille des Cotingidés. Ordre : Passériformes

இன்றைய நிலை 

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் தங்களுடைய பட்டியலில் இவற்றை அழிவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள் வரிசையில் சேர்த்துள்ளது. ஆனாலும் அமேசான் காடுகளின் பேரழிவின் காரணமாக, கடந்த மூன்று தலைமுறைகளில் மட்டும் 11.5 முதல் 12. 6 சதவீதம் வரை இப்பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறுகின்றனர்.

முனைவர். வானதி ஃபைசல் விலங்கியலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author