Skip to content

மான்டைரோவின் இருவாச்சி

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளான நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் வறண்ட புல்வெளிகள் மற்றும் பாறைப்பகுதிகளில் பரவலாக வாழும் பறவை இது. அங்கோலாவில் இப்பறவைகளை கண்டறிய உதவிய சுரங்க பொறியாளர் ஜோஅகீம் மான்டைரோ பெயராலேயே, இப்பறவைகள் மான்டைரோவின் இருவாச்சி (Monteiro’s Hornbill) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலங்கியல் பெயர் டோக்கஸ் மான்டைரி (Tockus monteiri).

 

உருவமைப்பு

மான்டைரோவின் இருவாச்சிகளில் ஆண் பறவைகளை விட பெண் பறவைகள் சிறியவையாக இருக்கும். பொதுவாக வளர்ந்த பறவைகள் 54 முதல் 58 செ. மீ நீளமும், 210 முதல் 400 கிராம் எடையும் கொண்டவையாக இருக்கும். இப்பறவைகளின் வயிற்றுப் பகுதி வெண்மை நிறமாகவும், மேல் பகுதியும், கண்களும் கரு நிறமாகவும், அலகு சிவப்பு நிறமாகவும் உள்ளது.

உணவு

பெரும்பாலும் தரையிலேயே உணவினை தேடும் இப்பறவைகள் வெட்டுக்கிளிகள், சில்வண்டுகள், வண்டுகள், தேள், பூரான், அட்டை, குளவி, கம்பளிப்பூச்சிகள், தவளைகள், சிறிய மர எலிகள், பறவை முட்டைகள் போன்றவற்றை விரும்பி உண்கின்றன. அத்துடன் பழங்கள், விதைகள், பூக்கள் மற்றும் கிழங்குகளையும் இவை உண்ணும்.

இனப்பெருக்கம்

மழைக்காலங்களில் இணை சேரும் இருவாச்சி பறவைகள், மரங்களில் கூடு கட்டுகின்றன. மரங்களில்லா இடங்களில் பாறை பிளவுகளில் இவை தங்கள் கூடுகளை கட்டுகின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகளை இட்டு 45 நாட்கள் அடைகாக்கின்றன.

இன்றைய நிலை

காடுகளுக்குள் 3,40,000 மான்டைரோவின் இருவாச்சி பறவைகள்  உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. எனவே பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் தங்களுடைய பட்டியலில் இவற்றை அழிவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள் (Least concern) வரிசையில் சேர்த்துள்ளது.

முனைவர் வானதி ஃபைசல்

 விலங்கியலாளர்

Leave a Reply

Author