Skip to content

ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் உருவான சுவாரஸ்ய வரலாறு

இன்று உலகிலுள்ள அனைத்து ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகளும் (Scottish Fold Cat), சூசி என்னும் ஒரே பூனையின் வழித்தோன்றல்கள் தான். 1961 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ராஸ் என்பவர், தன்னுடைய அண்டை வீட்டுக்காரரின் பண்ணையிலிருந்து மடிந்த காதுடன் கூடிய வித்தியாசமான ஒரு பூனையை கண்டுபிடித்தார். சூசி என்று பெயரிடப்பட்ட அப்பூனை பிரிட்டிஷ் குட்டை முடி (British Short Hair) பூனையுடன் இணை சேர்ந்து, மடிப்பு காதுடன் கூடிய குட்டிகளை ஈன்றது. மடிந்த காதுகளுடன் கூடிய இப்பூனை குட்டிகளை பலரும் விரும்பியதால், தொடர்ச்சியாக கலப்பினச் சேர்க்கையின் மூலம் குட்டிகளை உருவாக்கியுள்ளனர்.

இன்றும் இப்பூனைகள், அமெரிக்க குட்டை முடி பூனை அல்லது பிரிட்டிஷ் குட்டை முடி பூனையுடன்  இணை சேர்வதன் மூலமாக மட்டுமே, ஸ்காட்டிஷ் மடிப்பு காது பூனை குட்டிகள் பிறக்கின்றன. பிறக்கும் பூனைக்குட்டிகளில் சில நேர்காதுகளுடனும் பிறக்கின்றன. அவற்றை ஸ்காட்டிஷ் ஸ்ட்ரைட் இயர் (Scottish Straight Ear) என்றழைக்கின்றனர்.

கலப்பின சேர்க்கையின் மூலம் உருவாகும் மரபணு திரிபின் (Gene Mutation) காரணமாக, காதிலுள்ள குருத்தெலும்பு மடிந்து இவ்வாறு மடிப்பு காதுடன் கூடிய பூனைகள் உருவாகின்றன என்று தற்போதைய ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

இப்பூனைகளை ஹைலேண்ட் மடிப்பு பூனை, ஸ்காட்டிஷ் நீளமுடி மடிப்பு பூனை, நீளமுடி மடிப்பு பூனை, கௌபாரி என பல பெயர்களால் அழைக்கின்றனர். ஆண் பூனைகள் 4 முதல் 6 கிலோ எடையையும், பெண் பூனைகள் 2.7 முதல் 4 கிலோ எடையையும் கொண்டவையாக உள்ளன. குட்டிகள் பிறந்து 18 முதல் 24 நாட்களுக்குள் அவற்றின் காதுகள் மடிந்து விடுகின்றன. 14 முதல் 16 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் 30,000 முதல் 50,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

உருண்டை முகம், உருண்டையான கண்கள், குட்டை கழுத்து மற்றும் மடிந்த காதுகளோடு பார்ப்பதற்கு அழகிய ஆந்தைப் போன்ற தோற்றத்தை ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் கொண்டுள்ளன. அத்துடன் இப்பூனைகள் மிகவும் நட்புடனும், துறுதுறுப்புடனும் இருப்பதாலும், ஹோட்டல்கள், பூங்காக்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள புதிய இடங்களிலும் மிக எளிதாக பழகி விடுவதாலும் பலரும் இப்பூனையை விரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளில் பிரபலங்கள் விரும்பி வளர்க்கும் பூனையாக இது உள்ளது.

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author