Skip to content

ஐரோப்பிய காடுகளில் அன்னிய ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ள வளையவால் கோட்டிகள்

ரக்கூன் குடும்பத்தை சார்ந்த இந்த விலங்குகளை தென் அமெரிக்க கோட்டிகள் என்றும் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் நேசுவா நேசுவா (Nasua nasua). இவை தென் அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளான கொலம்பியா, கயானா, உருகுவே, அர்ஜென்டினா, ஈக்வடார், பொலிவியா, பராகுவே, பெரு, சூரினேம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் பரவலாக வாழ்கின்றன. அங்குள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பசுமை மாறா காடுகள், இலையுதிர் காடுகள், வறண்ட புதர் காடுகளில் நாம் இவற்றை பார்க்கலாம்.

அனைத்துண்ணிகளான வளையவால் கோட்டிகள் (Ring Tailed Coati) வண்டு, பூரான், தேள், சிலந்தி, சிறிய முதுகெலும்பற்ற உயிரினங்கள், சிறிய விலங்குகள், பறவை முட்டைகள் மற்றும் பழங்களை உண்கின்றன.

வளையவால் கோட்டிகள் 2 முதல் 7.2 கிலோ எடையும், 85 முதல் 113 செ.மீ நீளமும் கொண்டவையாக உள்ளன. சாம்பல், பழுப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறங்களில் இவற்றின் முடி இருக்கும்.  கருப்பு மற்றும் பழுப்பு கலந்த நிறத்திலுள்ள வாலின் மேலே மஞ்சள் நிற வளையங்கள் காணப்படும். சில விலங்குகளின் வால் வளையம் அற்றும் காணப்படுகின்றது.

 

பெரும்பாலும் 15 முதல் 30 விலங்குகள் சேர்ந்த கூட்டமாகவே இவை காணப்படும். இரண்டு ஆண்டுகளில் இன முதிர்ச்சி அடையும் கோட்டிகள், பழங்கள் பழுக்கும் காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. கர்ப்ப காலம் 74 முதல் 77 நாட்கள். ஒரு நேரத்தில் 1 முதல் 7 குட்டிகளை ஈனுகின்றன. இந்த கோட்டிகள் காடுகளில் ஏழு ஆண்டுகள் வரையும், பாதுகாக்கப்பட்ட வாழிடங்களில் 14 ஆண்டுகள் வரையும் உயிர் வாழ்கின்றன.

ஐரோப்பாவில் திட்டமிட்டு உள் நுழைக்கப்பட்டனவா?

வளையவால் கோட்டிகளில் 13 துணைச் சிற்றினங்கள் உள்ளன. இவை பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க பட்டியலில் அழிவாய்ப்பு கவலைக் குறைந்த இனங்கள் (Least concern) வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இறைச்சிக்காக அதிகளவில் வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பினாலும் இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கு நேர் எதிராக 2016 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளான இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்பெயினில் உள்ள காடுகளில், இவை தொல்லை கொடுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பு இனமாக மாறி வருகின்றன. பொதுவாக இவ்வகை கோட்டிகள் வீடுகளில் வளர்க்கப்படுவதில்லை. எனவே வீடுகளில் வளர்க்கப்பட்டவை காடுகளுக்குள் தப்பி சென்று பல்கி பெருகியிருக்கும் என்று சொல்லுவதற்கு இயலாது. அத்துடன் விலங்கியல் பூங்காக்களிலிருந்து இவை தப்பி சென்றதாக தகவல்களும் இல்லை. இதன் காரணமாகவே திட்டமிட்டு இந்த விலங்குகளை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

முனைவர். வானதி பைசல் 

விலங்கியலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author