Skip to content

யானைகள் விரும்பி உண்ணும் பழம் – யானை ஆப்பிள்

வெப்பமண்டல தாவரமான யானை ஆப்பிள் (Elephant Apple) மரத்தை, உவாமரம் என்றும் இதன் காயை உகக்காய் என்றும் அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் இம்மரத்தை பாங்கர் மற்றும் ஓமை என்று குறிப்பிட்டுள்ளனர். யானைகள் விரும்பி சாப்பிடுவதாலும், இவற்றின் குமிழ் வடிவ காய் பார்ப்பதற்கு யானையின் நகங்களை போன்றிருப்பதாலும் இதனை பொதுவாக யானை ஆப்பிள் என்றே அழைக்கின்றனர். இதன் தாவரவியல் பெயர் டிலினியா இண்டிகா (Dillenia indica).

பரவல்

இம்மரங்கள் இந்தியா மட்டுமில்லாது ஸ்ரீலங்கா, சைனா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை அசாம் மற்றும் கொல்கத்தாவிலுள்ள காட்டுப் பகுதிகளில் அதிகளவில் யானை ஆப்பிள் மரங்கள் காணப்படுகின்றன. அது தவிர பிஹார், ஒடிசா, கர்நாடகா, ஆந்திர மற்றும் மத்திய பிரதேசத்தின் வறண்ட காட்டு பகுதிகளிலும் இவை வளர்கின்றன. உத்தரகாண்ட் மாநிலத்திலும் இம்மரங்கள் காணப்படுகின்றன.

காட்டு விலங்குகளின் விருப்பமான பழம்

யானை ஆப்பிள் மரங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளிலே வளர்கின்றன. அக்டோபர் முதல் ஜனவரி வரை பழங்கள் பழுக்கின்றன. பூவிலிருந்து பழமாக மாறுவதற்கு 140 முதல் 160 நாட்கள் வரை ஆகின்றது. பழங்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காயாக பறித்தால் அவை பழுப்பதில்லை.

யானை ஆப்பிள் மரங்கள் 20-25 அடி உயரம் வரை வளரக்கூடியவை. இம்மரத்தின் பழங்களை யானைகள் மிகவும் விரும்பி உண்பதோடு, அவற்றின் விதைப்பரவலிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. யானைகளைத் தவிர குரங்குகள் மற்றும் மான்களும் விரும்பி உண்பதால் காடுகளில் யானை ஆப்பிள் பழங்களை சேகரிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

யானை ஆப்பிள் மரத்தின் பயன்கள்

விலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பலவிதத்திலும் பயன்படக்கூடியதாக யானை ஆப்பிள் மரம் உள்ளது. புளிப்பு சுவையுடைய இதன் பழங்கள் ஜாம், ஜெல்லி மற்றும் ஊறுகாய் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அசாம் மாநில மக்கள் இதனை மீன் குழம்பில் பயன்படுத்துகின்றனர். உத்தர பிரதேசத்தில் புகையிலையை சுற்றுவதற்கு யானை ஆப்பிள் மரத்தின் இலைகளை பயன்படுத்துகின்றனர்.

வடகிழக்கு இந்தியாவிலுள்ள பழங்குடி மக்கள் இதன் பழங்களை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர். யானை ஆப்பிள் பழங்கள் வயிற்று வலியை குணமாக்கவும், சிறுநீரக கல்லை நீக்குவதற்கும், ஆரோக்கியமான சிறுநீரகத்தை பெறுவதற்கும், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தை சரி செய்வதற்கும் உதவுவதாக கூறுகின்றனர்.

இம்மரத்தின் இலைச்சாறு தலை வழுக்கையை போக்குவதற்கும், பொடுகை நீக்குவதற்கும் உதவுகிறது. யானை ஆப்பிள் பழச் சாறுடன் சர்க்கரையை சேர்த்து அருந்தும் போது அது இருமலை குணமாக்குகிறது. இம்மரத்தின் பட்டையை அரைத்து நாய் கடித்த இடங்களில் பற்று போடுகின்றனர். மரப்பட்டைகள் வாய் புண்ணிற்கும் மருந்தாகிறது.

மிசோரம் மாநிலத்திலுள்ள பழங்குடி மக்கள் யானை ஆப்பிளின் இலை, பழம் மற்றும் மரப்பட்டையை சேர்த்து அரைத்து புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரழிவு நோய் வராமல் தடுக்கும் குணம் இப்பழங்களுக்கு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளும் தெரிவிக்கின்றன.

மலைவாழ் மக்கள் இவற்றின் காய்ந்த சுள்ளிகளை விறகாக பயன்படுத்துகின்றனர். முன்பு இம்மரங்களின் காய்ந்த இலைகளை, யானை தந்தங்களை பளபளப்பாக்க பயன்படுத்தி இருக்கின்றனர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த யானை ஆப்பிள் மரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. பங்களாதேஷில் தனியார் தோட்டங்களிலும், வீடுகளிலும் வணிக ரீதியாக யானை ஆப்பிளை வளர்த்து வருகின்றனர். நம் நாட்டிலும் இம்மரத்தை காடுகளில் வளர்ப்பதற்கும், தனியார் தோட்டங்களில் வளர்ப்பதற்கும் ஊக்குவிக்க வேண்டும்.

முனைவர். வானதி பைசல்,
விலங்கியலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author