Skip to content

கருப்பு சேன்டெரல் காளான்

மிகவும் சுவையான காட்டு காளான் வகையான இவை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்காசியாவின் காடுகளில் பரவலாக காணப்படுகின்றன. மிக அதிக அளவு சுண்ணாம்பு சத்துள்ள மண்ணில் இந்த கருப்பு சேன்டெரல் காளான்கள் (Black Chanterelle Mushroom) வளர்கின்றன. பெரும்பாலும் பெரிய இலைகளைக் கொண்ட மரங்களான பீச், ஒக் போன்றவற்றின் அடியில் இவற்றை காணலாம்.

சிறப்பு பெயர்கள்

அழகிய கருநிற பூக்கள் போன்று தோற்றமளிக்கும், இக்காளானை பல பெயர்களில் அழைக்கின்றனர்.

1. பார்ப்பதற்கு கருநிற எக்காளம் போன்றிருப்பதால், இவற்றை கருப்பு எக்காளக் காளான் (Black Trumpet Mushroom) என்று அழைக்கின்றனர்.

2. கிரேக்கர்கள் தங்களின் பெண் கடவுள் அமல்த்தியாவுடைய ஆட்டின் கொம்புகளே,  இக்காளான்கள் என்று கூறுகின்றனர். அமுதசுரபி போல இந்த கொம்பினில் ஊற்றப்படும் உணவும், நீரும் அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருக்கும் என்று கருதுகின்றனர். எனவே அமுதசுரபி கொம்பு என்னும் பொருளில் இக்காளானை Horn of plenty என்று அழைக்கின்றனர்.

3. மண்ணிற்குள் இருக்கும் இறந்தவர்கள் வாசிக்கும் எக்காளம் தான் இந்த காளான் என்று கூறி, பல ஐரோப்பிய நாட்டினர் இதனை இறந்தவர்களின் எக்காளம் (Trumpet of the Dead) என்று அழைக்கின்றனர்.

இதன் அறிவியல் பெயர் கிரேட்டெரெல்லஸ் கார்னுகோபியாய்டெஸ் (Craterellus cornucopioides)

சேகரிக்கும் முறை

காட்டு காளானான இவற்றை வளர்ப்பது மிக கடினம். ஆனால் வசந்த காலம் மற்றும் கோடை காலங்களில், காடுகளில் இவற்றை சேகரிக்கலாம். சாம்பல் கலந்த கருநிறத்தின் காரணமாக, காடுகளில் உள்ள மக்கிய இலைகளுடன் ஒன்றி விடும் இவற்றை கண்டறிவது மிக கடினம். ஆனால் தரையில் சிறிய கருந்துளை போன்று காணப்படும் ஒற்றை காளானை கண்டறிந்து விட்டால் போதும், அதன்பின் அவ்விடத்தைச் சுற்றி தேடினால், கிட்டத்தட்ட 18 கிலோ காளானை அறுவடை செய்ய முடியுமென காளான் சேகரிப்பவர்கள் கூறுகின்றனர்.

சிறப்பு குணங்கள்

மிகவும் சுவையான இக்காளானின் சதைப்பகுதி மென்மையாகவும், மெல்லியதாகவும், சாம்பல் கலந்த வாசனையைக் கொண்டதாகவும் உள்ளது. எனவே சூப், பாஸ்தா, சாஸ், கடல் உணவுகள் போன்றவற்றை நறுமணமூட்டவும், சுவையூட்டவும் இக்காளானை பயன்படுத்துகின்றனர்.

100 கிராம் காய்ந்த காளானில் 69.45 கி புரோட்டின், 13.44 கி கார்போஹைட்ரேட், 4.88 கி கொழுப்பு மற்றும் 87 மி. கி வைட்டமின்களும் அடங்கியுள்ளன.

கருப்பு சேன்டெரல்  காளானில் மிக அதிக அளவு வைட்டமின் பி12 மற்றும் சி உள்ளது. தோலை பளபளப்பாக வைத்திருக்கவும், எடை குறைப்புக்கும், கொழுப்பை குறைப்பதற்கும், மார்பு மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் இக்காளான் உதவுவதாக தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ காளான் 3,350 ரூபாய் முதல் 4,400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

முனைவர். வானதி பைசல், விலங்கியலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author