Skip to content

பாலைவனக் காடுகள்

ஸ்பெய்ன், திபெத், மத்தியகிழக்கு நாடுகள், சிலே…..இப்படி பல நாடுகளின் பாலைவனங்களை காடுகள் ஆக்கிவருகிறது ஒரு புதிய தொழில்நுட்பம். அதன்பெயர் க்ரோஆசிஸ் (groasis)
இயற்கையில் விதைகள் மரமாவது எப்படி எனில்  ஒரு பறவை பழத்தை உண்டு கொட்டையை கழிவுடன் சேர்த்து கழிக்கும். பறவையின் கழிவின் ஈரப்பதம் விதையை வெப்பத்தில் இருந்து காக்கும். வேர்கள் நீரை தேடி மெதுவாக பூமியில் வளர ஆரம்பிக்கும்.
க்ரோஆசிஸ் என்பது ஒரு காம்போஸ்ட் ஆகக்கூடிய ஒரு பெட்டி.
அதனுள் மரத்தின் நாற்றை நட்டு பூமியில் குழிதோண்டி புதைப்பார்கள். அதன்பின் அப்பெட்டியில் 10 லிட்டர் நீரை ஊற்றுவார்கள். நீர் பூமிக்கு கீழே போக அடியில் ஒரு சிறு ஓட்டையும் திரியும் உண்டு. திரி மூலம் ஒரு நாளைக்கு 50 மிலி நீர் மட்டுமே பூமியில் இறங்கும். பெட்டியில் நாற்றை சுற்றியும் நீர் இருப்பதால் பாலைவன வெயிலில் இருந்து நாற்றுக்கு ஜில் என பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த 10 லிட்டர் நீரும் தீர 200 நாள் ஆகும். அதற்குள் மரம் வளர்ந்துவிடும். பாலைவன மணலில் வளர்க்கூடிய வகை மரங்களாக வளர்ப்பதால் வரட்சியை அவை நன்றாக தாக்குபிடிக்கும்.ஸ்பெய்னில் இந்த தொழில்நுட்பம் மூலம் பல பாலைவனப்பகுதிகள் காடுகளாகியுள்ளன. சிலே, திபெத், மத்தியகிழக்கு நாடுகளிலிலும் இப்பெட்டியை பயன்படுத்தி சாலையோரங்களில் மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
இதில் வெற்றி விகிதம் 95% எனும் அளவுக்கு உள்ளது. விரைவில் இந்த டச்சு தொழில்நுட்பம் மூலம் உலகின் பாலைவனங்கள் பலவும் சோலைவனமாகும் என கருதப்படுகிறது.பாலைவனம் இருப்பது நல்லதுதானே என சொல்லவேண்டாம். காரணம் உலகின் பாலைவனங்கள் பெருகும் விகிதம் அதிகரித்து வருவதால் அதை கட்டுபடுத்த இம்மாதிரி தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.
விவசாயம், தொழில்துறை வளர்ச்சியால் அழிந்த பகுதிகளும், மரங்களை வெட்டியதால் மண் சரிவு உண்டாகும் திபெத்திய மலைச்சரிவு பகுதிகளையும் இப்பெட்டிகள் பசுமையாக்கி வருகின்றன
~ நியாண்டர் செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Neander Selvan

Neander Selvan