மியாவாக்கியும் நகரமயமாக்கலும்

0
1298

உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தாலும் மக்கள் நகரங்களை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்காக வருகின்றனர். ஆதலால் நகரங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள் நெருக்கமாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

வாகனப்பெருக்கத்தால் காற்று மாசுபாடு ஓர் முதன்மை பிரச்சனையாக எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 16.7 லட்சம் மக்கள் காற்று மாசுப்பாட்டால் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் காற்று மாசை கட்டுப்படுத்த பல சட்டங்கள் விதிகள் இயற்றப்பட்டாலும். 100 சதவீதம் தடுக்க முடியாத சூழலே உள்ளது. ஆதலால் மரங்களே ஓர் நிரந்தர தீர்வாக உள்ளன. நகரமயமாதலால் திடக்கழிவும் பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முதன்மையாக தேவைப்படுகிறது. எனவே திடக்கழிவு மேலாண்மை, காற்று மாசு குறைக்க, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஓர் சிறந்த வழியாக மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு முறை உள்ளது.

மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு முறையில் ஒரு சதுர அடிப்பரப்பளவில் 8 முதல் 10 மர / தாவர வகைகள் நடவு செய்து வளர்க்கப்படுகிறது. குறிப்பாக உள்நாட்டு மர வகைகள்  ( Native Tree Species)  மட்டும் நடவு செய்யப்படுகிறது. இந்த மியாவாக்கி முறை குறுங்காடு வளர்ப்பு நகரங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். தற்போதைய சூழலில் குறைந்த இடத்தில் அதிக மரங்களை நடவு செய்து பராமரிக்க ஏற்றமுறை. இந்த முறையில் பரப்பளவு அதிகம் தேவையில்லை. குறைந்த இடத்தில் அதிக மரங்கள் நடவு செய்யப்படுகிறது. இந்த முறையில் மரம் நடவுசெய்ய நிலத்தில் உள்ள மேற்பகுதியில் 2 முதல் 3 அடி உயரம் வரை உள்ள மண்ணை அகற்றிவிட்டு எளிதில் மட்கக்கூடிய இலைகள், மர துண்டுகள், மரத்தூள் மற்றும் எளிதில் மட்கக்கூடிய பொருட்களால் 75% குழியை நிரப்பிவிட்டு மீதமுள்ள 25% குழியை மரத்தூள் அல்லது இலை தழைகள் கலந்த மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். முழுமையாக நிரப்பிவிட்டு ஒரு சதுர அடி பரப்பளவில் 8 முதல் 10 மர/ செடி நாற்றுக்கள் நடவு செய்ய வேண்டும். இதில் உயரமாக வளரக்கூடிய மரங்கள், மூலிகை செடிகள், புதர் செடிகள்,  உயரம் குறைவாக வளரும் மர வகைகள் என அனைத்தும் கலந்து நடவுச்செய்ய வேண்டும். மியாவாக்கி முறையில் அனைத்து மரங்களும் கலந்து நடவுச்செய்ய வேண்டும். மியாவாக்கி முறையில் அனைத்து மரங்களும் கலந்து நடவுச்செய்தால் 2 முதல் 3 ஆண்டுகளிலேயே மனிதர்கள் நுழைய முடியாத அளவுக்கு அடர்ந்த காடு போல் வளர்ந்துவிடும். மூன்றாண்டுக்கு மேல் பராமரிப்பு தேவையில்லை. 10 ஆண்டுகள் வளர்ச்சியை இந்த முறை நடவு மூலம் 2 முதல் 3 ஆண்டுகளில் பலனை கண்கூடாக காணலாம்.

மியாவாக்கி என்னும் குறுங்காடு மர நடவு முறையில் மரங்களின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. மண் வளம் மற்றும் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகமாக உள்ளது. அதே சமயம் மண்புழுக்கள் வளர ஏதுவாக உள்ளது. மியாவாக்கி எனும் குறுங்காடு மர நடவு முறை ஓர் ஆக்சிஜன் பூங்காவாக வேலை செய்கிறது.

 

பூ வகை மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் கலந்து நடப்படும் போது மக்கள் நடைப்பயிற்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மியாவாக்கி என்னும் குறுங்காடு மர நடவு முறையானது பட்டாம்பூச்சி மற்றும் பல வகை பறவைகளை அதிகம் ஈர்கின்றது. இந்த முறைக்கு மண் தயார்படுத்துதல் மழைக்காலங்களில் மழைநீர் பூமிக்குள் செலுத்த ஓர் அருமையான முறையாக மியாவாக்கி முறை செயல்படுகிறது.

நகரப்பகுதிகளில் பசுமைப் பரப்பை பராமரிக்க மியாவாக்கி முறை ஓர் சிறந்த மரம் நடவும் முறையாகும். அதேபோல் பசுமைப் பரப்பை அதிகரிக்க மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்த புங்கன், பூவரசு, அரசு, நீலத்திருவத்தி, தாந்தோன்றி, நீர்மருது ஆகியவை கலந்த மியாவாக்கி முறையிலான மர நடவு முறை நகர்ப்புறப் பகுதிகளில் மிகவும் பொருத்தமாக இருக்கும் மரம் நடும் முறை. நகர்ப்புறப் பகுதிகளில் மிகவும் நல்ல முறையில் பலன் தரும். ஒளி மாசு குறைக்க ஒரு சிறந்த நடமாடவும் முறையாக இந்த மியாவாக்கி முறை அமைந்துள்ளது.

 

முனைவர்.அ.ச.கோவேந்தன்,

சுற்றுச்சூழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை- 641 003

 

திரு.ஆ.ரமேஷ்,

முதுநிலை ஆராய்ச்சியாளர்,

சுற்றுச்சூழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை- 641 003

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here