fbpx
Skip to content

கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்நோய் குலை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியா, உகாண்டா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய் இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் வருடா வருடம் தோன்றி அதிக சேதம் விளைவிக்கிறது.

நோய்க்காரணி

இந்நோய் பைரிகுலேரியா கிரீசியே  என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இப்பூசணத்தின் இழைகள் குறுக்குச் சுவர்களைக் கொண்டும், முதலில் நிறமற்றும் பின்னர் இளம் ஆலிவ் பழுப்பு நிறத்திலும் தென்படும்.

நோயின் அறிகுறிகள்

பயிரின் எல்லா வளர்ச்சிப் பருவத்திலும் இந்நோய் தாக்கக் கூடியது. நாற்றங்காலிலும், நடவு செய்த வயலிலுள்ள இளம் செடிகளை, இந்நோய்த் தாக்கும் போது, எல்லா இலைகளும் கரிந்து, நாற்றுக்கள் மடிந்து விடும். வளர்ந்த செடிகளில் முதல் அறிகுறி இலைகளில் பரவலாக, நீண்டக் கண் வடிவப் புள்ளிகள் தோன்றும். புள்ளிகளின் விளிம்பு, மஞ்சள் கலந்தப் பழுப்பு நிறமாகவும், நடுப்பகுதி சாம்பல் கலந்தப் பச்சை நிறமாகவும் தென்படும். நாளடைவில் புள்ளிகள் விரிவடைந்து, நடுப்பாகம் வெளிறிய சாம்பல் நிறமாக மாறிவிடும். ஈரப்பதம் அதிகமாக உள்ள போது, புள்ளிகளின் நடுப்பகுதியில் சாம்பல் நிறத்தில் பூசணத்தின் வித்துத் தண்டுகளும், கொனிடியா வித்துக்களும் வெளிவந்திருப்பது நன்குத் தெரியும். புள்ளிகள் நடு நரம்புப் பகுதியில் தோன்றும் போது அந்த இடத்திலிருந்து இலைகள் முறிந்து தொங்கி விடும்.

இலைகளில் கண் போன்ற புள்ளிகள் தோன்றல்

செடிகளில் தண்டுப் பகுதியிலுள்ள கணுக்கள் தாக்கப்படும்போது கணுப்பகுதியின் மேலும், கீழுமாக 5-10 மி.மீ நீளத்திற்கு அடர் கருப்பு நிறமாக மாறிவிடும். தாக்கப்பட்ட கணுக்கள், சுருங்கியும், வலுவிழந்தும் எளிதில் முறிந்துவிடக் கூடியவைகளாகவும் தென்படும்.

இது  போன்று, கதிர் கணுக்களும், கதிரிலுள்ள விரல் காம்புகளும் கூடத்  தாக்கப்படும். கதிர் கணுக்கள் தாக்கப்படும் போது, கதிரிலுள்ளப்  பெரும்பாலான மணிகள் பதராகி விடும். அது போல விரல்களிலுள்ள அடிக்காம்புப் பகுதித் தாக்கப்படும் போது, அந்த விரல்களிலுள்ள மணிகள் எல்லாமே பதராகி விடும். மணிகள் தோன்றினாலும் அவை சரிவர முற்றாமல், சுருங்கியும், நிறம் கெட்டும் தென்படும். நோய்த் தாக்கும் பயிர் வளர்ச்சிப் பருவம் மற்றும் கால நிலைகளைப் பொறுத்து மகசூல் இழப்பு 90 சதவிகிதத்தையும் மிஞ்சக்கூடும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்நோய் பெரும்பாலும் காற்றின் மூலம் பரவுகிறது. கேழ்வரகைத் தவிர, கம்பு, கோதுமை, திணை, பார்லி, ஓட்ஸ், மக்காச்சோளம் போன்ற பல தானியப் பயிர்களையும், மந்தாங்கிப்புல், அரிசிப்புல் போன்ற புற்களையும் தாக்குகிறது. இது போன்ற இணை ஊண்வழங்கிகளிலிருந்து உற்பத்தியாகும், கொனிடியா வித்துக்கள், கேழ்வரகில் முதலில் நோயைத் தோற்றுவிக்கின்றன.

பயிர் அறுவடைக்குப் பின்னர் வயலில் காணப்படும் கட்டைகளிலும், தாக்கப் பட்ட கதிர்களிலுள்ள மணிகளிலும் கூட, பூசண இழைகள் உயிருடன் இருந்து நோயைத் தோற்றுவிக்கக்கூடும்.

நோய் அதிகளவில் பரவ 25-300 செ.கி. வெப்ப நிலையும் 90 சதவிகிதத்திற்கு அதிகமான ஈரப்பதமும், அடிக்கடி பெய்யும் மழைத்தூறலும் ஏற்றது. ஜூன் – ஜூலை மாதங்களில் விதைக்கப்படும் பயிர் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதால் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கிறது.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்  : நோய்த் தாக்காத வயலிலிருந்து, விதைப்பதற்கு விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்நோய்க்காரணி தாக்கக் கூடிய மற்றப் பயிர்களை, கேழ்வரகுப் பயிரிடும் வயலில் அடுத்துப் பயிரிடக்கூடாது. மேலும் இந்நோய்க்காரணி தாக்கக் கூடிய புல், பூண்டுகள், வயல் வெளிகளிலும், சுற்றுப் புறங்களிலும் இல்லாதவாறு சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகத் தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

விதைச் சிகிச்சை :

            ஒரு கிலோ விதைக்கு அக்ரசான் தூள் – 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் – 2 கிராம் வீதம் விதைப்பதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னரே நன்குக் கலந்து வைத்திருந்து, பின்னர் விதைக்க வேண்டும்.

மருந்து சிகிச்சை

வயலில் கதிர் வெளி வரும் முன்னரே கார்பன்டாசிம் – 200 கிராம் அல்லது தாமிர ஆக்ஸி குளோரைட் – 500 கிராம் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்                     

கே.3 , மொசாம்பிக் 359 போன்ற இரகங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் காணப்படுகிறது.

 

கட்டுரையாளர்கள்:

செ.மீனாட்சி,

முதுநிலை வேளாண் மாணவி –  நுண்ணியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

அண்ணாமலை நகர் – 608002

மின்னஞ்சல் – tamilmeena6151@gmail.com

கு.விக்னேஷ்,

முதுநிலை வேளாண் மாணவர் -தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

அண்ணாமலை நகர் – 608002

தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

editor news