Skip to content

உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றிலை வள்ளி கிழங்கிற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள்

பெரு வெற்றிலை வள்ளி (டயோஸ்கோரியா அலேட்டா) ஒரு வணிகப்பயிராக சுமார் 27,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, சுமார் 7.5 லட்சம் டன் உற்பத்தியோடு, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 28 டன் மகசூல் பெறப்படுகிறது.  இது இந்தியாவில் ஆந்திரா, ஒடிசா, கேரளா, அசாம், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா போன்ற 13 மாநிலங்களில், பரவலாக பயிரிடப்படுகிறது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் பெரு வெற்றிலை வள்ளி சாகுபடி

பெரு வெற்றிலை வள்ளி பல ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளைக் கொண்ட பயிராகும். இது மாவுச்சத்து நிறைந்ததாகவும், பொட்டாசியம், வைட்டமின் பி6, மாங்கனீசு, தியாமின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் மதிப்புமிக்க ஊட்டச்சத்து உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. உலகின் 10 முக்கிய உணவு வகைகளில் பெரு வெற்றிலை வள்ளி மிக உயர்ந்த பொட்டாசியம் அளவைக் கொண்டுள்ளது.

பெரு வெற்றிலை வள்ளி கிழங்கின் ஊட்டச்சத்து விவரம்

ஊட்டச்சத்து அளவு
உலர் பொருள் (% FW) 20-35
மாவுச்சத்து (% FW) 18-25
மொத்த சர்க்கரை (% FW) 0.5-1.0
புரதம் (% FW) 2.5
நார்ச் சத்து (% FW) 0.6
லிப்பிடுகள் (% FW) 0.2
வைட்டமின் ஏ (மில்லி கிராம் /100 கிராம்) 0-0.18
வைட்டமின் சி (மில்லி கிராம் /100 கிராம்) 5-27.6

அறிவியல் சாகுபடி நடைமுறைகள்

மேம்படுத்தப்பட்ட இரகங்கள்: நம் நாட்டில் விவசாயிகளால் பல வகையான பெரு வெற்றிலை வள்ளி கிழங்குகள் பயிரிடப்பட்டாலும், கேரள விவசாயிகளிடையே பெரு வெற்றிலை வள்ளி கிழங்கு மிகவும் பிரபலமானது.  ஐ. சி. ஏ. ஆர்- மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், திருவனந்தபுரம், கேரளா, பத்து வெவ்வேறு வகையான பெரு வெற்றிலை வள்ளி இரகங்களை வெளியிட்டுள்ளது, சமீபத்தில் வெளியான பெரு வெற்றிலை வள்ளி இரகங்களான, ஸ்ரீ நீலிமா, பூ ஸ்வர் மற்றும் ஸ்ரீ நிதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ நீலிமா

வெளியான ஆண்டு: 2015

பயிரின் வயது: 9 மாதங்கள்

மகசூல்: 35 டன்/ஹெக்டேர்

மாவுச்சத்து (%): 18.1

அதிக ஆந்தோசயினின் அளவு

 

பூ ஸ்வர்

வெளியான ஆண்டு: 2017

பயிரின் வயது: 6-7 மாதங்கள்

மகசூல்: 20-25 டன்/ஹெக்டேர்

மாவுச்சத்து (%): 18-20

நல்ல சமையல் தரம், குறுகியகால இரகம்

ஸ்ரீ நிதி

வெளியான ஆண்டு: 2018

பயிரின் வயது: 8-9 மாதங்கள்

மகசூல்: 35 டன்/ஹெக்டேர்

மாவுச்சத்து (%): 23.2

நல்ல சமையல் தரம், இலை கருகல் நோய்க்கு சகிப்புத்தன்மை

 

கேரளாவில், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பெரு வெற்றிலை வள்ளி நடப்படுகிறது, இது பெரும்பாலும் மானாவாரி பயிராக பயிரிடப்படுகிறது. பெரு வெற்றிலை வள்ளி சாகுபடிக்கு பின்பற்ற வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது போதுமான சூரிய ஒளியைக் கொண்ட தென்னை தோட்டங்களில் ஒரு சிறந்த ஊடுபயிர் ஆகும்.  மஞ்சள், மக்காச்சோளம், துவரம் பருப்பு போன்றவற்றுடன் இது ஒரு ஊடுபயிராக வளர்க்கப்படுவதால் இது பல்பயிர் சாகுபடி முறைகளில் நன்றாக பயிரிடப்படுகிறது.

 

நடும் பருவம் மார்ச்- ஏப்ரல்
விதைப்பொருள் செட்: 250-300 கிராம்
நிலம் தயாரிக்கும் முறை

மற்றும் நடவு

குழி எடுத்தல் மற்றும் மண் குவியல்
இடைவெளி (செ.மீ) 90 x 90
தொழுவுரம் (டன்/ஹெக்டேர்) 10
தலை:மணி:சாம்பல் சத்து (கிலோ/ஹெக்டேர்) 80:60:80
பின்செய் நேர்த்தி முளைத்த 15 நாட்களுக்குப் பிறகு தாவரங்களை தென்னையிலோ அல்லது குச்சியிலோ ஏற்றி விடுதல்; முளைத்த ஒரு வாரத்திற்குள் மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு களையெடுத்தல் மற்றும் மண் அணைத்தல்
பயிரின் வயது 8-10 மாதங்கள்
சராசரி மகசூல் (டன்/ஹெக்டேர்) 25-30

 

உரங்கள் சார்ந்த சிறந்த மேலாண்மை நடைமுறைகள்

ஐ. சி. ஏ. ஆர்- மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் நாட்டின் முக்கிய பெரு வெற்றிலை வள்ளி வளர்ந்து வரும் பகுதிகளுக்கு பிரத்தியேகமாக சிறப்பு உர கலவைகளை உருவாக்கியுள்ளது.  பெரு வெற்றிலை வள்ளி மற்றும் பிற வகை கிழங்கு பயிர்களுக்கான மைக்ரோஃபுட் (மைக்ரோனோல்) என்னும் நுண்ணூட்டக் கலவையை மதுரையில் உள்ள M/s லிங்கா கெமிக்கல்ஸ் (தொலைபேசி எண் 9994093178) நிறுவனத்திற்கு வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்காக சந்தையில் பெரிய அளவில் விற்பனை செய்யப்படுகிறது. கிழங்கு பயிர் விவசாயிகள் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், மண்/பயிர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பயிர் விளைச்சலை 10-15% வரை அதிகரிக்கவும் செய்கிறது. புதிய உரக் கலவை மற்றும் மைக்ரோஃபுட் ஆகியவற்றின் செயல்திறன் குறித்து விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இது கிழங்குகளின் விளைச்சல் மற்றும் தரத்தை அதிகரிப்பதோடு, பெரு வெற்றிலை வள்ளி கிழங்கு விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

பயிர் பாதுகாப்பு:

இலை கருகல்: இந்த நோய் கொல்லிட்டோடிரைக்கம் குலோயிஸ்போரியாய்டஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது.  இந்த நோய் இலைகள் மற்றும் தண்டுகளில் புள்ளிகள் போன்ற பழுப்பு நிற புண்கள் போல தோன்றுகிறது.  இலைகள் முழு அளவை நெருங்குவதால் இந்த புள்ளிகள் பெரிதாகி அவை வெளிர் மஞ்சள் விளிம்புகளை உருவாக்கி பின்னர் ஒழுங்கற்ற கறைகளுக்கு வழிவகுக்கும்.  பாதிக்கப்பட்ட இலைகள் பொதுவாக உதிர்ந்து விடும். இது ஒளிச்சேர்க்கை செயல்திறனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், இறுதியில் விளைச்சலைக் குறைக்கிறது.

நோயை கட்டுப்படுத்தும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 • நோய் இல்லாத மற்றும் தரமான நடவுப் பொருளைப் பயன்படுத்துதல்
 • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றுதல்
 • அறுவடை முடிந்த உடனே உழுவது பூஞ்சாண உயிரியை குறைக்க உதவுகிறது
 • சரியான வடிகால் வசதிகள் மற்றும் வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துதல்
 • நடவு செய்வதற்கு முன் ட்ரைக்கோடெர்மா கலந்த மாட்டு சாணம் கலவையில் விதை கிழங்கில் முலாம் பூசுதல்
 • பூஞ்சாணக்கொல்லி கார்பென்டாசிம் தெளிப்பு @ 0.05%பெரு வெற்றிலை வள்ளியில் இலை கருகல் நோய்

  அறுவடை: நடவு செய்த சுமார் 9-10 மாதங்களில் பயிர் அறுவடைக்கு தயாராகிறது மற்றும் சராசரி மகசூல் ஒரு ஹெக்டேருக்கு 25-30 டன் ஆகும்.  அறுவடையின் போது, ​​கிழங்குகளில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  எந்தவொரு சேதமும் இல்லாத கிழங்குகள் சந்தைப்படுத்துவதற்கு ஏற்றவை.

  சேமிப்பு முறை: முழுமையாக முதிர்ச்சியடைந்த, மற்றும் தரப்படுத்தப்பட்ட கிழங்குகளை நடவுப்பொருளாக பயன்படுத்துவதற்கு அவற்றை சேமிக்க வேண்டும்.  சேமிப்பு இடம் நல்ல காற்றோட்டமாகவும் மற்றும் குளிராகவும் இருக்க வேண்டும்.  கிழங்குகளை ஒற்றை அடுக்கில் சேமிப்பது நல்லது, ஆனால் சேமிப்பு இடம் போதுமானதாக இல்லாவிட்டால், அவற்றை இரண்டு அடுக்குகளில் சேமிக்கலாம்.

  சந்தைப்படுத்துதல்: கிழங்குகள் உள்ளூர் இடங்களிலும், நாட்டின் பல்வேறு இடங்களான சென்னை, மும்பை மற்றும் பெங்களூருவிலும் விற்பனை செய்யப்படுகின்றன.  மேலும் சிறிய அளவில் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

  கட்டுரையாளர்கள்: முனைவர்கள் ஜி. பைஜு, து. ஜெகநாதன், க. மு. செந்தில்குமார், பி. பிரகாஷ் மற்றும் ஏ. வி. வி. கவுண்டின்யா. ஐ. சி. ஏ. ஆர்- மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீகாரியம், திருவனந்தபுரம் 695017, கேரளா. மின்னஞ்சல்: byju.g@icar.gov.in

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news