Skip to content

நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-2)

கரையும் உரங்களின் பயன்கள்:

  • திட வடிவ கரையும் உரங்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைப்பதற்கும் வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கும் ஏற்றதாகும்.
  • சீரான அளவில் இடப்படும் உரங்கள் வீணாகாமல் செடிகளுக்குப் பயன்படுகிறது.
  • உரத்தோடு பூச்சி மருந்து மற்றும் பூஞ்சாண மருந்துகளையும் கலந்து அளிக்க முடியும்.
  • உரப்பயன்பாட்டு அளவு
அ. சாதாரண உரங்கள் மூலம் 30.50 % 20 % 50 %
ஆ. கரையும் திட உரங்கள் மூலம் 95 % 45 % 85 %
  • மண்ணையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தாது.

கரைதிறன் கொண்ட இரசாயன உரத்திற்கும் சாதாரண உரத்திற்கும் உள்ள வேறுபாடுகள்                       

வ.எண் பொருள் கரையும் உரங்கள் சாதாரண உரங்கள்
01. கரையும்திறன் நீரில் உடனடியாக கரையும் எளிதில் கரையாது
02. அடர் திரவ கரைசல் 10-17 சத கரைசல் வரை தயார் செய்யலாம். வடிகட்டத் தேவையில்லை கரைசல் தயார் செய்ய அதிக நாள் தேவைப்படும். அடிக்கடி வடிகட்ட வேண்டும்.
03. சத்துத் துகள்களின் விகிதம் சத்துத் துகள்கள் சீராகப்பரவி இருக்கும் சத்துத் துகள்கள் சீராக பரவி இருக்காது மணிச்சத்தானது, உரத்தின் கலவையிலுள்ள மற்ற வேதிப்பொருட்களோடு சேர்ந்து ஒன்றிவிடும்.
04. கரைய எடுத்துக் கொள்ளும் நேரம்; 5-7 நிமிடங்கள் 12-24 மணிகள் (20.25) சென்டிகிரேடு வெப்பநிலையில்)
05. வடித்தல் தேவையில்லை 3-4 முறை வடிக்க வேண்டும்
06. 1 சத கரைசலின் கார அமிலத்தன்மை 3.5-5.5 அமிலத்தன்மை 5-8 சமநிலை காரத்தன்மை
07. உப்புக் குறியீடு 40-50 75-95 பொட்டாஷ் தன்மையைப் பொறுத்து மாறும்
08. சத்து இழப்பு மிகச் சொற்பம் அதிகம்
09. வேலையாள் தேவை குறைவு அதிகம்
10. தவறு நேர்வதற்கான சாத்தியம் இல்லை அதிகம்
11. தெளிக்க தேவையான சக்தி குறைவு அதிகம்
12. உரமிடுதல் மற்றும் செடிக்கு உரம் சென்றடையும் நேரம் குறைவு அதிகம்
13. செடியின் பருவத்திற்கேற்ப அளிக்க இயலும் இயலாது

திரவ உரங்களை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் செலுத்த பயன்படும் உபகரணங்கள்

நீரில் கரையும் உரங்களை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் செலுத்துவதற்கு பொதுவாக மூன்று உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவையாவன

உரத்தொட்டி

இதில் 60 லிட்டர் முதல் 90 லிட்டர் வரை கொள்ளளவு உள்ள தொட்டிகள் உண்டு. பொதுவாக, சொட்டுநீர் உரப்பாசனத்தில் மிகவும் அதிகமாக உரத்தொட்டி மூலம் உரம் செலுத்தப்படுகிறது. உரத்தொட்டியானது சொட்டு நீர்ப்பாசன அமைப்பின் பிரதான குழாய்களுக்கு முன்பு வடிகட்டிக்கு, முன் இணைக்கப்பட்டிருக்கும். நீர்ப்பாசன நீரின் ஒரு பகுதி மட்டும் உரத்தொட்டியினுள் சென்று உரக்கரைசலுடன் வெளியேறி பிரதான குழாய்கள் மூலம் செடிகளுக்கு எடுத்துச் செல்கிறது. இம்முறையில் நீரில் கரையும் திட உரங்களைக் கரைக்க அதிகப்படியான நீர் பயன்படுத்தப்பட வேண்டும். நீரின் அழுத்தம் 1.00 கிலோ கிராம் செ.மீ அளவு குறைந்தாலும் சீராக உரத்தினைக் கலந்து அளிக்கவல்லது. திரவ உரம் செல்லும்போது சுமார் 0.2 கிலோ அழுத்தத்தைக் குறைக்கும்.

வென்சுரி

பாசன நீர் வென்சுரி கருவி மூலம் செல்லும் போது அழுத்தக் குறைவு ஏற்படுவதன் மூலம் உரக்கரைசலை உறிஞ்சி குழாய் மூலம் செலுத்துகிறது. இது மற்ற உபகரணங்களைக் காட்டிலும் விலை குறைவு (சுமார் ரூ.1000). ஆனால், உரம் செலுத்த பொதுவாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதுடன் அழுத்தக் குறைவு (சுமார் 1 கிலோ, செ.மீ வரை) அதிகமாகக் காணப்படும்.

உரம் செலுத்தும் கருவி

உரம் செலுத்தும் கருவி, உரக்கரைசலை தொட்டியிலிருந்து உறிஞ்சி பிரதான குழாயினுள் அழுத்தத்துடன் செலுத்துகிறது. உரக்கரைசலை செலுத்தும் அளவு பாசன நீரின் விகிதத்திற்கு ஏற்றவாறு அமைகின்றது. எனவே நீர் மற்றும் உரக்கரைசலின் விகிதாச்சாரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். மற்ற உபகரணங்களைக் காட்டிலும் விலை அதிகமாக இருப்பதுடன் பயன்படுத்துவதும் சற்று கடினம்.

நீர்வழி உரங்களை நீரில் கரைக்கும்போது கவனிக்க வேண்டியவை

  • நைட்ரேட் உரங்களை தழைச்சத்தாக பயன்படுத்தும்போது வேர் மூலம் நைட்ரேட் சத்து தண்டு மற்றும் இலைக்குச் செல்கிறது. அங்கு நைட்ரேட் ரிடக்டேஸ் என்சைம்களின் உதவியுடன் நைட்ரேட் சத்து அமோனியாவாக மாறி பின் செடிக்கு பயன்படுகிறது. இளஞ்செடிகள் ஒரு மாதத்திற்கு குறைவாக இருக்கும்போது அவற்றில் நைட்ரேட் ரிடக்டேஸ் என்சைம் இருக்காது. எனவே நடவு செய்த ஒரு மாதம் வரை உள்ள இளஞ்செடிகளுக்கு தழைச்சத்தினை அமோனியம் வடிவில் உள்ள உரமாக இடவேண்டும்.
  • செடி வளரும் போது, நைட்ரேட் சத்து விரைவில் செடி எடுத்துக்கொள்வதுடன் செடியின் உள்ளேயும் விரைவில் நகரும் தன்மை கொண்டது என்பதால் வேர் எளிதாக உறிஞ்சுக் கொள்ளும். எனவே தழைச்சத்தினை அமோனியம் மற்றும் நைட்ரேட் வடிவில் 40 மற்றும் 60 சதவீதம் என்ற அளவில் பயன்படுத்தலாம். தழைச்சத்தினை யூரியாவாக பயன்படுத்தும் போது யூரியா, அமோனியம் கார்போனேட்டாக சில மணி நேரங்களிலேயே மாறி அமோனியம் வடிவில் செடிக்கு கிடைக்கிறது.
  • உரங்களை கொஞ்சம் கொஞ்சமாக நீரில் விட்டு கரைக்க வேண்டும். நீரை உரத்தில் ஊற்றி கரைக்கக் கூடாது. குறிப்பாக அமில திரவ உரங்களை நீரில் ஊற்றிக் கரைக்க வேண்டும். எ.கா. பாஸ்பாரிக் அமிலம்.
  • சல்பேட் உள்ள நீரில் கரையும் உரங்களை கால்சியம் உள்ள உரங்களுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கால்சியம் சல்பேட் எனப்படும் ஜிப்சம் உருவாகி அடியில் தங்கிவிடும்.
  • கடினத் தன்மையுள்ள நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்தும் போது சல்பேட், பாஸ்பேட் போன்றவை உள்ள உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கடின நீரில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை நீரிலுள்ள சல்பேட் மற்றும் மக்னீசியம் போன்றவற்றுடன் இணைந்து ஜிப்சம், மற்றும் எப்சம் போன்ற உப்புக்களாக படிந்து விடும்.
  • மணிச்சத்து உரங்களான மோனோ அமோனியம் பாஸ்பேட் (12-61-0), டை அமோனியம் பாஸ்பேட், மோனோபேசிக் பொட்டாசியம் பாஸ்பேட் (0-52-34), பாஸ்பாரிக் அமிலம் மற்றும் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை அதிகமான அளவில் கடின நீரில் கரைக்கும்போது நீரில் கரையாமல் அடியில் தங்கும் வாய்ப்பு உண்டு.
  • பாசன நீரின் அமில காரத்தன்மை (pH) குறைவாக இருக்கும்போது மட்டுமே பாஸ்பாரிக் அமிலத்தை மணிச் சத்துக்காக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நீரின் அமில காரத்தன்மை (pH) அதிகமாக இருக்கும்போதும் ஜிப்சம் மற்றும் எப்சம் உப்புக்களாக மாறி அடியில் தங்கி விடும்.
  • பொட்டாசியம் உரங்கள் பொதுவாக நீரில் எளிதாகக் கரையக் கூடியவை. ஆனால் பொட்டாசியம் சல்பேட் பயன்படுத்தும்போது, நீரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் உப்புக்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் பொட்டாசியம் சல்பேட் உரத்தின் கரைதிறன் மிகவும் குறைவு. அதிலும் கடின நீரின் கால்சியம் மக்னீசியம் ஆகியவற்றுடன் இணைந்து கரையாமல் அடியில் தங்கி விடும்.

 இலைவழி மூலம் தரப்படும் தெளிப்பு உரங்கள்

கரைதிறன் கொண்ட உரங்களை சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் கொடுக்கும் போது சத்துக்கள் வீணாகாமல் செடிக்குக் கிடைப்பதுடன், செடியும் முழுமையாக உறிஞ்ச முடிகிறது. ஆனால் மண்ணின் அமில காரத்தன்மை (pH) அதிகமாக இருந்தால் மண்ணில் சத்துக்கள் இருந்தாலும் செடியினால் சரியாக உறிஞ்ச இயலாது. பெரும்பான்மையான விவசாய நிலங்கள் கார மண்ணாகவே இருப்பதனால் சத்துக்கள் பற்றாக்குறையானது செடியில் அதிகமாகக் காணப்படும். குறிப்பாக, நுண்ணூட்டச் சத்துக்கள் போரான், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, காப்பர் மற்றும் கால்சியம் போன்றவை காரமண்ணில் இருந்தாலும், அவற்றை செடியால் உறிஞ்ச முடியாது. இத்தகைய நிலையில், செடியின் நுண்ணூட்டச் சத்து பற்றாக் குறையினை போக்க இலைவழி மூலம் தெளிப்பது அவசியமாகிறது. இவ்வாறு தெளிப்பதன் மூலம் பயிருக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாக இலைகளின் மூலம் செடிக்குக் கிடைக்கிறது.        நுண்ணூட்டச் சத்துக்கள் மட்டுமின்றி, முதன்மை உரங்களும் கூட சில சமயங்களில் இலைவழி மூலம் தெளிப்பதனால் செடியின் சத்துக்களின் தேவை சரிசெய்யப்படுகிறது.

கட்டுரையாளர்கள்: ஹரிஹரசுதன், வை., சண்முகம், பூ. மு. மற்றும் விஜயபிரபாகர், ஆ.

வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளுர் – 621 712, திருச்சி. மின்னஞ்சல்: tnauhari@gmail.com

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news