Skip to content

நிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும்

அமெரிக்கா, வெனிசுலா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய் 1971- ம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. சமீபக் காலமாகக் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரைப் போன்ற மாவட்டங்களில் மிகுதியாகத் தோன்றி அதிக சேதத்தை விளைவிக்கிறது.

நோய்க்காரணி

இந்நோய் பச்சினியா அராக்கிடிஸ்  என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இப்பூசணம் பெரும்பாலும் யூரிடோ வித்துக்களை மாத்திரமே தோற்றுவிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இப்பூசணம் டீலியோ வித்துக் கூடுகளையும், டீலியோ வித்துக்களையும் தோற்றுவிக்கிறது என்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் பயிர் விதைத்த சுமார் 6 வாரங்களுக்குப் பின்னரேத் தோன்றும். இலைகளின் அடிப்பரப்பில் சிறிய வட்ட வடிவ, பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் யூரிடோ வித்துக்கூடுகள், பருக்களைப் போல் தோன்றும். இலைகளின் புறத்தோலைப் பெயர்த்துக் கொண்டு பழுப்பு நிற யூரிடோ வித்துக்கள் வெளிவரும். அதிகளவில் வித்துக் கூடுகள் தோன்றி, அதிகளவில் வித்துக்கள் வெளிவரும் போது, இலைப்பரப்பின் மேல் பழுப்பு நிறத்தில் பொடித் தூவியது போன்றத் தோற்றத்தை அளிக்கும் யூரிடோ வித்துக் கூடுகளுக்கு நேர் எதிரான இலையின் மேற்ப்பரப்பில் சிறியப் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.

நோயின் தீவிரம் அதிகமாகக் காணப்படும் போது, இலைப்பரப்பு முழுவதும் துருக் கூடுகளால் நிரப்பப் படுவதால், இலைகள் கரிந்து மடிந்து விடும். இளம் இலைகளை விட, முதிர்ந்த இலைகள் அதிகமாகத் தாக்கப்படும். நோய்த் தாக்கியச் செடிகளிலிருந்து உண்டாகும் காய்கள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படுவதோடு, பருப்பும் சரிவர முற்றாமல், சிறுத்தும், சுருங்கியும் காணப்படுவதால், எடையும் எண்ணைச் சத்தும் குறைவாகக் காணப்படும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்த நோய்க் காரணியின் வாழ்க்கைச் சுழல் யூரிடோ வித்துக்களின் மூலம் மாத்திரமே தொடருகிறது. இந்நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது.

 

நோய்க்கட்டுப்பாடு

மருந்து சிகிச்சை

            ஏக்கருக்கு 10 கிலோக் கந்தகத் தூளைக் காலை வேளையில் பனிப்பதத்தில் தூவ வேண்டும் அல்லது ஏக்கருக்கு நனையும் கந்தகம் – 1000 கிராம் அல்லது மான்கோசெப் – 500 கிராம் வீதம் 250 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். நோயின் அறிகுறி தென்பட்டவுடன் ஒரு முறையும், அதைத் தொடர்ந்து 10 – 15 நாள் இடைவெளியில் மறுபடி ஒரு முறையும் மருந்து உபயோகிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: கு.விக்னேஷ், முதுநிலை வேளாண் மாணவர், தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்– 608002. தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news