Skip to content

“மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம்

“பழங்களின் ராஜா” என்று அழைக்கப்படும் மா சாகுபடியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மா, பலா, வாழை போன்ற முக்கனிகளில் ஒன்றான மா எப்போதும் தன் தனித்தன்மையுடன் விளங்குகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 65 சதவீதம் இந்தியாவில் தான் விளைகிறது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தேனீ, திண்டுக்கல் மற்றும்  செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக விளைகிறது. “மாதா ஊட்டாத சோத்தை மாங்காய் ஊட்டும்” என்று கிராமங்களில் பெருமையாக கூறுவார்கள். இத்தகைய மகத்துவம் வாய்ந்த மா, காயாக பழமாக  சாப்பிடுவது மட்டுமின்றி மதிப்புக்கூட்டப்பட்டு ஊறுகாய், பழச்சாறு, ஜாம் என பல பரிமாணங்களில் பயன்படுத்துவதால் இதன் மவுசு எப்போதும் குறைவதே இல்லை. ஆனால், மா சாகுபடியில் பூச்சி மேலாண்மை என்பது கவனிக்க வேண்டிய அம்சம். மா – வின் இலை, தண்டு, பூ, காய், பழம் என அனைத்து பகுதிகளையும் பூச்சிகள் பதம் பார்த்து விடுகின்றன. இதனால் அதன் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு மிகுந்த வருமான இழப்பை ஏற்படுத்துகிறது.

மா தத்துப்பூச்சி – வாழ்க்கை சுழற்சி

மா பயிரை தாக்கும் பூச்சிகளில் மிகுந்த இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளில் ஒன்று மா தத்துப்பூச்சி. இந்த மா தத்துப்பூச்சியில் மூன்று வகையான இனங்கள் உள்ளன. அவை இடியோஸ்கோப்பஸ் கிளைப்பியலிஸ், இடியோஸ்கோப்பஸ் நிவியோஸ்பார்சஸ், அம்ரிடோடஸ் அட்கின்ஸனி. முட்டையிடும் காலம் 2 முதல் 3 நாட்கள்  ஆகும்.

இளம் குஞ்சுகள்

இளம் குஞ்சுகள் பச்சை கலந்த கருமை நிறம் அல்லது பழுப்புநிற அடையாளங்களுடன் காணப்படும். அவைகளால் பறக்கவோ அல்லது வேகமாகவோ நகரவோ முடியாது. பூ பூக்கும் பருவம் மற்றும் பிஞ்சு உருவாகும் பருவங்களில் இளம்குஞ்சுகள் அதிகமாக வளர்ச்சியடைகின்றன. கோடைகாலங்களில் இளம்குஞ்சுகளின் மொத்த வாழ்நாள் 2 முதல் 3 வாரங்கள் ஆகும்.

முதிர்ந்த பூச்சிகள்

முதிர்ந்த பூச்சிகள் ஆப்பு வடிவில் காணப்படும். அதை தொடும்போது ‘கிளிக்’ என்ற ஒலி எழுப்பிக் கொண்டு ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு தாவும்.

இடியோஸ்கோப்பஸ் கிளைப்பியலிஸ்

இந்த இனம் தத்துப்பூச்சிகள் அடர்பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன்  தலைப்பகுதி அகன்றும் உடற்பகுதி சிறுத்தும் காணப்படும். முதுகு பட்டையில் இரண்டு புள்ளிகளும் தலைப்பகுதியில் இரண்டு புள்ளிகளும் காணப்படும். இதன் நீளம் 3.5 மிமீ.

இடியோஸ்கோப்பஸ் நிவியோஸ்பார்சஸ்

நடுத்தர பருமனுடையது. இதன் நீளம் 4.2 முதல் 4.8 மிமீ ஆகும். முதுகு பகுதியில் மூன்று கரும்புள்ளிகளும், தலைப்பகுதியில் வெண்ணிற பட்டைக்கோடு காணப்படும்.

அம்ரிடோடஸ் அட்கின்ஸனி

இதன் நீளம் 4.2 முதல் 5 மிமீ ஆகும். இந்த மூன்று இனங்களில், இது சற்றே பெரியது. தலையை அடுத்துள்ள மார்பு பகுதியில் இரண்டு கரும்புள்ளிகள் காணப்படும்.

எப்படி கண்டறிவது?

இலைகள், பூங்கொத்துகளில் திரவம் வெளியேறுவது போல் பிசுபிசுப்புடன் காணப்படும். அந்த திரவத்தினால் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு இலைகள் மற்றும் பூங்கொத்துகள் கருமை நிறத்துடன் காணப்படும்.

தாக்கம் எப்போது அதிகமாக இருக்கும்?

தத்துப்பூச்சிகளின்  பாதிப்பு   வருடம் முழுவதும் காணப்படும். பிப்ரவரி – ஏப்ரல் மற்றும் ஜூன் – ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இதனுடைய பாதிப்பு    மிகுதியாக காணப்படும். பெண் தத்துப்பூச்சிகள்  பிப்ரவரி – மார்ச் மாதங்களில் முட்டையிடுகின்றன. நிழல் மற்றும் அதிக  ஈரப்பதம் இதன் இனப்பெருக்கத்திற்கு சாதகமானது. நெருக்கமாக நடப்பட்ட மாந்தோட்டங்களில் தத்துப்பூச்சி பாதிப்பு அதிகமாக இருக்கும்.

சேத அறிகுறிகள் :

தத்துப்பூச்சிகள் சாறு உறிஞ்சும் தன்மையுடையவை. அவைகள் துளைகளை உருவாக்கி இலைகள், பூக்கள், மஞ்சரிகள், பழங்கள் மற்றும் புதிய கிளைகளின் மென்மையான திசுக்களில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்.

தத்துப்பூச்சிகளின் வயிறு பகுதியில் இருந்து ஒரு விதமான இனிப்பு திரவம் வெளியேறும் அந்த இனிப்பு திரவம் இல்லை மற்றும் பூக்களில் அதிக நாட்கள் ஒன்று சேர்வதால் கருப்பு நிற பூஞ்சை படலமாக மாறுகிறது.

இந்த கரும்படலம் ஒளிச்சேர்க்கையை பாதிக்கிறது. இதனால் தாவரத்தின் வலிமை குறைந்து கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் சுருண்டு, உலர்ந்து விழுந்து விடுகின்றன. இளம் மரங்கள் தத்துப்பூச்சிகளால் பாதிக்கப்பட்டால், அதன் வளர்ச்சி குன்றி சேதமாகிறது. முதிர்ந்த மரங்கள் பாதிக்கப்பட்டால், மகசூல் இழப்பு மிகுதியாகிறது.

தத்துப்பூச்சிகள் மரத்தின் பட்டைகளில் விரிச்சல் மற்றும் பிளவுகளில் தங்குகின்றன.     தத்துப்பூச்சிகளால் பாதிக்கப்பட்ட பழங்கள் முதிர்ச்சியடையும் முன்பே விழுந்து விடுகின்றன. பூவிலிருந்து காயாக மாறுதல் மிகவும் குறைகிறது. இதன் மூலம் 60 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

மேலாண்மை :

  • நெருக்கமாக நடவு முறைகளை தவிர்க்க வேண்டும்.
  • செடிகளுக்கு நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கிடைக்கும் வகையில், அடர்ந்த கிளைகளை கவாத்து செய்து விட வேண்டும். கவாத்து ஆண்டுக்கு இருமுறை செய்ய வேண்டும். அதாவது செப்டம்பர் மாதத்தில் பழம் அறுவடை செய்த பின்பும் மற்றும் பூ பூக்கும் பருவம் தொடங்கும்முன் டிசம்பர் – ஜனவரி மாதம் செய்ய வேண்டும்.
  • மாந்தோட்டத்தை நல்ல உழவு செய்து களைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.ஒரு தாவரத்தின் கிளைகள் மற்றொரு தாவரத்தின் கிளையில் ஒட்டாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • வேப்ப எண்ணெய் மூன்று சதவீதம் தெளிப்பதன் மூலம் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
  • அதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். மஞ்சரி உருவாகும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 1 மி.லி இமிடாக்ளோப்ரிட் மருந்து கலந்து தெளிக்கவும்.
  • இரண்டாவது தெளிப்பு, பழத்தொகுப்பு உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 கிராம் தாயோமீதோக்சம் அல்லது 1.5 கிராம் அசிப்பேட் கலந்து தெளிக்கவும் (பூச்சிக்கொல்லி மருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே தெளிக்க வேண்டும். தெளிக்கும்போது கையுறை, முகவுறை அணிந்து கொள்ள வேண்டும்).

கட்டுரையாளர்கள்: ரா.முத்து, ர.திவ்யா, கே. இலக்கியா மற்றும் கா. பாலாஜி. முனைவர் பட்டப்படிப்பு மாணவவர்கள்  (பூச்சியியல் துறை), தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். தொடர்பு எண் – 9786970200. மின்னஞ்சல்: muthucatagri@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news