Skip to content

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் துவரை அதிகமாகப் பயிரிடப்படும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் நோய்த் தாக்கினால் அந்தச் செடிகளில் பிஞ்சுகளோ, காய்களோ தோன்றாமல் பூக்கள் எல்லாமே மலடாக மாறிவிடும். துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி

இந்நோய் துவரை மலட்டுத் தேமல் நச்சுயிரியினால் தோற்றுவிக்கப் படுகிறது.

நோயின் அறிகுறிகள்

நோய் தாக்கிய செடிகளிலுள்ள இலைகள் சிறுத்தும் உருமாறியும் சுருக்கங்களுடனும் தென்படும். இலைகள் நெருக்கமாகவும் மொட்டுகள் ஊக்குவிக்கப்பட்டு வளர்ந்து ஒரே இலைக்கொத்துப் போன்ற தோற்றத்தை அளிக்கும். செடியின் வளர்ச்சிக் குன்றியும் கணுவிடைப்பகுதிக் குட்டையாகவும் காணப்படும். இலைகளின் நரம்புகளைச் சுற்றி வெளிரி, மஞ்சளாகத் தென்படும். இலைகள் அடர்ப்பச்சை மற்றும் மஞ்சள் நிறமாக மாறிமாறித் தோன்றி தேமல் போன்ற அறிகுறித் தென்படும். நோய்த் தாக்கியச் செடிகள் எல்லாமே மலட்டுத் தன்மையுடன் காணப்படும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்த நச்சுயிரி நோயானது அசரியா கஜானி எனப்படும் இரியோஃபைட் பயிர்ச் சிலந்தியால் பரப்பப்படுகிறது. சில நூற்புழுக்களும் இந்த நச்சுயிரியைப் பரப்பக் கூடியவை. பயிர்ச் சிலந்திகள் இலைகளின் அடிப்பரப்பில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். அவை மிகவும் நுண்ணியவைகளாகவும், இளம் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். இளம் பூச்சிகளும் வளர்ந்த பூச்சிகளும், நச்சுயிரியைப் பரப்பக் கூடியவை. காற்றின் மூலமும் வேறு பூச்சிகளின் மூலமும் ஒரு செடிகளிலிருந்து, வேறு செடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் சிலந்திப் பூச்சிகள், நச்சுயிரியையும், பரப்பிப் புதிதாக நோயைத் தோற்றுவிக்கிறது.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்  : (i) பயிர்ச் சிலந்திகள் வாழக்கூடிய அட்டிலோசியா இனச் செடிகளையும், தானாகவேக் கீழே விழுந்த விதைகளிலிருந்து முளைக்கக்கூடியத் துவரைச் செடிகளையும் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். (ii) அதிகமாக நோய் தாக்கிய துவரைச் செடிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். (iii) பயிர்ச் சிலந்திகள் நிரந்தரமாக வாழக்கூடியப் பல ஆண்டுகள் இருக்ககூடியத் துவரச் செடிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.

மருந்து சிகிச்சை :

(i) கந்தகத் தூளை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் தூவ வேண்டும் அல்லது நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து இலைகளின் அடிப்பரப்பு நன்கு நனையுமாறுத் தெளிக்க வேண்டும்.

(ii) டைக்கோஃபால் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி மருந்து என்ற விகிதத்தில் கலந்துத் தெளிக்க வேண்டும்.

(iii) கார்போஃபியூரான் – 3 சத குருணையை ஏக்கருக்கு 12 கிலோ அல்லது ஃபோரேட் – 10 சத குருணையை ஏக்கருக்கு கிலோ வீதம் கிலோ மணலுடன் கலந்து செடிகளின் தண்டுப் பாகத்தைச் சுற்றித் தூவிப் பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும்.

மருந்து சிகிச்சை மூலம், நோய்ப் பரப்பக் கூடிய பயிர்ச் சிலந்திகளைக் கட்டுப்படுத்தி நோய்ப் பரவுவதைத் தடுக்கலாம்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்

            ஐ.சி.பி.7035 , வி.ஆர்.3 , புர்ப்லே 1 , டி.ஏ.11 , டி.ஏ.32 , ஐ.சி.பி.7198, பி. ஆர். 5149, பவானிசாகர் 1, பஹார் போன்ற இரகங்களை இந்நோய் அதிகம் தாக்குவதில்லை.

கட்டுரையாளர்: கு.விக்னேஷ், முதுநிலை வேளாண் மாணவர், தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்– 608002. தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news