Skip to content

கழனியும் செயலியும் (பகுதி – 4)

வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு செயல்களும், தொழில்களும், பொருட்களும் மாற்றத்தினை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விவசாயம் சார்ந்த செயல்களும் மேம்படுத்தப் படுகின்றன. அவற்றில் ஒன்றே வேளாண் செயலிகள். வேளாண் செயலிகள் வேலைகளை எளிமைப்படுத்துவதோடு நேரம், இடுபொருட்கள், உழைப்பு என அனைத்தினையும் சரியாக கணக்கிட்டு தீர்மானிக்க உதவி செய்கின்றன. சென்ற கட்டுரையின் தொடா்ச்சியாக மேலும் சில வேளாண் செயலிகளும் அவற்றின் பயன்களும்….

Amma e-service of land records:

நிலம் சார்ந்த ஆவணங்களுக்காக அறிமுகப்பத்தப்பட்டதே இந்த செயலி. AMMA (Access and manage through mobile from anywhere e-service of land records) அதாவது இருந்த இடத்திலிருந்தே கைபேசி மூலம் நில ஆவணங்கள் குறித்த இணையவழி சேவைகளை பெற்றிடலாம். விரைவான மறுமொழி குறியீடு (QR code) மூலம் பட்டா மற்றும் சிட்டாகளை தரவிறக்கம் செய்து அவற்றின் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் தங்கள் நிலம் குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது. இவற்றோடு அரசு மற்றும் தனியார் நிலங்களை அடையாளம் கண்டு கொள்ளும் சேவையும் உள்ளது. இச்செயலி மூலம் வேளாண் வருவாய், சிறு மற்றும் குறு விவசாயிகள், இடம் பெயர்வு, குடியிருப்பு போன்ற சான்றிதழ்களுக்கும் சேவைகளானது செய்யப்படுகிறது. இவை குறித்த தகவல்களை பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இச்செயலியானது நிலம் குறித்த ஆவணங்கள் மேலும் இதர பிற ஆவணங்கள் குறித்த சேவைகளை மக்கள் விரைவாக பெற்றிட வழிவகை செய்கிறது.

இ – அடங்கல் (e-Adangal):

விவசாய நிலங்கள் மற்றும் அவற்றில் பயிரிடப்படும் பயிர்கள் குறித்த தகவல்களை கொண்டிருப்பதே அடங்கல். விவசாய கடன், மானியங்கள், பயிர் காப்பீடு போன்ற பல்வேறு சேவைகளை பெறுவதற்கு அடங்கல் முக்கியமான சான்றாகும். இந்த செயலி நிலம் சார்ந்த ஆவணங்களுக்காக அறிமுகப்பத்தப்பட்டது. இந்த செயலி மூலம் அடங்கலுக்கு தேவைபடும் தகவல்களான பயிர்கள், மகசூல் போன்றவற்றை அவற்றின் புகைப்படத்துடன் விவசாயிகளே பதிவேற்றம் செய்திடலாம். இதுவரை கிராம நிர்வாக அலுவலா் வைத்திருக்கும் பயிர்கள், மகசூல் குறித்த தகவல்களின் அடிப்படையிலேயே அடங்கல் அளிக்கப்பட்டது. இனி விவசாயிகள் தாங்களாகவே தாங்கள் பயிரிடும் பயிர்கள் மற்றும் மகசூலை இச்செயலியில்  பதிவு செய்யலாம். கிராம நிர்வாக அலுவலா் மற்றும் விவசாயிகள் அளித்த தகவல்களில் ஏதேனும் வேறுபாடு இருப்பின் அவை மேலதிகாரியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இவை தொடர்பான குறைகளை விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு தெரியப்படுத்தலாம். இஅடங்கல் மூலம் பெறப்பட்ட வேளாண் தகவல்களானது வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் பெரிதும் உறுதுணை செய்கின்றன. அந்த தகவல்களை பயன்படுத்தி விவசாயிகள் அவர்களுக்கு தேவையான சேவைகளையும் விரைவில் பெற்றிடலாம். விவசாயிகள் தங்கள் பயிர்கள் குறித்த தகவல்களை முப்பருவ காலங்களிலும் பதிவு செய்யலாம். மறுவிதைப்பு மேற்கொண்டிருந்தால் அந்த தகவல்களையும் பதிவிடலாம். இணைய சேவையானது விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி வேளாண் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுப்பதற்கும் உபயோகமாக உள்ளது.

மேகதுாத் (Meghdoot):

வானிலை எனும் அச்சாணியில் சுழல்வதே வேளாண்மை எனும் சக்கரம். வானிலை தகவல்களை பொறுத்தே பெரும்பாலான உழவு செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வானிலை குறித்த தகவல்களுக்காக, இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் (IMD) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் (ICAR) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதே மேகதுாத் செயலி. இதன் மூலம் வானிலை சார்ந்த வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்த முடிவுகளை மேற்கொள்வது சுலபமாகிறது. அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகள், மழை காரணிகள், வெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வேகம், ஈரப்பதம் போன்ற பல்வேறு தகவல்களை உள்ளுா் மொழிகளில் தெரிந்து கொள்ளலாம். இச்செயலியானது வாட்ஸ் அப் மற்றும் முகநுால் மூலம் இணைக்கப்பெற்றதால், விவசாயிகள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். ஒவ்வொறு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தகவல்களானது புதுப்பிக்கப்படும்.

  • தொடரும்…

கட்டுரையாளர்: ச. ஹரிணி ஸ்ரீ, முதுநிலை வேளாண் மாணவி, உழவியல் துறை, வேளாண்புலம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: agriharini@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news