fbpx
Skip to content

கண்வலிக்கிழங்கு சாகுபடி

கண்வலிக்கிழங்கு என்னும் கிழங்கு வகை செங்காந்தள் மலர்ச் செடியிலுருந்து பெறப்படுகிறது. இச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இது கலப்பைக்கிழங்கு, கார்த்திகைக்கிழங்கு, வெண்தோன்றிகிழங்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் கிழங்குகள் உழவுக்கலப்பை போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் கலப்பைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கொடி வகை மருத்துவப்பயிராகும். இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திக்காக பயன்படுகின்றன. வாதம், மூட்டுவலி, தொழுநோய் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றன. குடற்ப்புழுக்கள், வயிற்று உபாதைக்கும் விஷக்கடிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. செங்காந்தள் மலர் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. விதைகளில் அதிகளவு கோல்சிசின் காணப்படுவதால் மிகுந்த ஏற்றுமதி மதிப்பினைக் கொண்டுள்ளது. செங்காந்தள் மலர்  தமிழ்நாட்டின்  மாநில மலராகப் போற்றப்படுகிறது.

தட்பவெப்பநிலை மற்றும் மண்வளம்:

 • வறட்சியான தட்பவெப்பநிலைக்கு ஏற்றது.
 • காற்றில் ஓரளவு ஈரப்பதம் தேவை.
 • வருடத்திற்கு 700 மிமீ மழையளவு தேவை.
 • கடல்மட்டதிலிருந்து 600மீ உயரத்தில் வளரக்கூடியது.
 • வடிகால் வசதியினைக் கொண்ட செம்மண் மற்றும் பொறைமண் ஏற்றது.
 • மண்ணின் கார அமிலத் தன்மை 6.0 – 7.0 இருத்தல் வேண்டும்.

 

விதையும் விதைப்பும்:

 • கண்வலிக்கிழங்கானது கிழங்கு மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகிறது.
 • 50 – 6௦ கிராம் எடையுள்ள கிழங்குகள் விதைப்பதற்கு ஏற்றவை.
 • எக்டர்ருக்கு 2000 கிலோ கிழங்குகள் தேவை.

விதைப்பு பருவம்:

ஜூன் – ஜூலை (மழைக்காலத்தின் தொடக்கம்)

நிலம் தயாரித்தல்:

 • நிலத்தினை 2 முதல் 3 முறை உழுதல் வேண்டும்.
 • கடைசி உழவிற்கு முன்பாக எக்டருக்கு 10 டன் தொழு எரு இடுதல் வேண்டும்.

நடவு:

60 செமீ இடைவெளியில், 15 செமீ ஆழம் மற்றும் அகலம் உள்ள வாய்க்கால் எடுத்து, அதில் மண், தொழு எரு மற்றும் மணல் கலந்த ஊடகத்தை கொண்டு நிரப்ப வேண்டும். கிழங்குகளை 30 – 45 செமீ இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

வேலி அமைத்தல்:

 • பார்களின் பக்கவாட்டின் இருபுறமும் கிளுவை வேலி குச்சிகளை நட்டு கண்வலிக்கிழங்கின் கொடிகளை அவற்றின் மீது படர விடலாம்.
 • நீண்ட காலம் பராமரிக்க வேண்டுமானால், கம்பி வேலியினை அமைத்து கொடிகளைப் படர விடலாம்.

உர நிர்வாகம்:

எக்டருக்கு 120கிலோ நைட்ரஜன், 50கிலோ பாஸ்பேட் மற்றும் 75கிலோ பொட்டாசியம் என்ற அளவில் உரமிடுதல் வேண்டும்.

இதில் பாதியளவு தழைச்ச்சத்தையும், முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். மீதியுள்ள தழைச்சத்தை இரு சம பாகங்களாக பிரித்து கிழங்குகளை விதைத்த 30 மற்றும் 60 நாட்களில் இட வேண்டும்.

நீர் நிர்வாகம்:

கிழங்கினை விதைத்தவுடனும், பிறகு ஐந்து நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்சவேண்டும். பூக்கும் பருவத்தில் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். முதிர்ச்சி அடையும் தருணத்தில் பாசனம் அவசியமில்லை.

பின்செய் நேர்த்தி:

கொடியின் நுனிப்பகுதி சேதமடையாத வண்ணம் சாகுபடி முறைகளை கையாள வேண்டும்.

கிளுவை வேலி அமைக்கின்ற போது கிழங்கு பகுதிக்கு சேதம் ஏற்ப்படாதவாறு நட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை அதிகமாக வளர்ச்சி அடைந்த கிளுவைக் குச்சிகளை வெட்டி விடவேண்டும்.

மகரந்தச்சேர்க்கை:

தினமும் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை, பூக்கள் விரிந்து மகரந்தம் வெளிப்படும் சமயத்தில் அவற்றை எடுத்து பூக்களின் சூல் பகுதியின் மீது தொட்டு அயல் மகரந்தச்சேர்க்கையை ஏற்ப்படுத்தலாம். ஒரு கொடியில் 75 – 150 பூக்கள் விரிகின்ற சமயத்தில் தன் மகரந்தச்சேர்க்கையனது மிகவும் குறைவாக இருப்பதால் அயல் மகரந்தச்சேர்க்கை செய்து அதிக காய் மகசூலைப் பெறலாம்.

அறுவடை:

கிழங்குகள் முளைத்த 160 – 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்கள் பழுப்பு நிறமாக மாறி தோல் சுருங்கி இருப்பது பயிர் முதிர்ச்சியின் அறிகுறியாகும். காய்களை பறித்து 10 – 15 நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். காய்கள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திற்கு மாறும்போது விதைகளை பிரித்தெடுக்க வேண்டும். 10 – 15 நாட்களுக்கு தரையில் பரப்பி, உலர்த்தி, மண் மற்றும் கற்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து சாக்குப்பையில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

மகசூல் (எக்டர்/ வருடம்):

விதைகள் 200 – 250 கிலோ
கிழங்குகள் 300 கிலோ
காய்களின் தோல் 150 – 200 கிலோ

ஒரு கிலோ செங்காந்தளின் விதைகள் சராசரியாக 3000 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

 

கட்டுரையாளர்: நீ. வெங்கட்ராஜ், முதுநிலை வேளாண் மாணவர் – தோட்டக்கலைத் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். தொடர்பு எண்: 9585672169

மின்னஞ்சல் : venkatrajelangovan@gmail.com

Leave a Reply

Your email address will not be published.

nv-author-image

editor news