Skip to content

பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை

(Conservation agriculture)

கடந்த நாற்பது வருடங்களாக நம்முடைய தேசிய விவசாய கொள்கைகள், உத்திகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதிலேயே செயல்பட்டு கொண்டு இருக்கிறது.  இதில் நாம் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் கூட இயற்கைவள சீர்கேடு, பெருகிவரும் மக்கட்தொகைக்கேற்ற உணவு உற்பத்தி மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவை பெரும் சவாலாக விளங்குகின்றன. எனவே நம்முடைய விவசாய உத்திகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை புதிய திசையை நோக்கி முன்னெடுத்து செல்ல கூடிய கட்டாய சூழலுக்கு வந்து விட்டாதாகவே நாம் உணர்கிறோம்.  முன்னெடுத்து செல்லகூடிய சூழல் என்றால் 1960 ஆம் ஆண்டு காலங்களில் கடைப்பிடிக்கபட்ட பசுமை புரட்சி உத்திகள் போல் அல்லாமல் புதிய கோணத்தில் நம்முடைய விவசாயத்தை செயல்படுத்த வேண்டும்.

நம் முன்னே முக்கியமான இரண்டு பிரச்சனைகள் இப்பொழுது உள்ளன.  ஒன்று உணவு உற்பத்தியினை குறைந்த பட்சம் மூன்று மடங்கு பெருக்குதல், மற்றொன்று இயற்கை வளங்களை பாதுகாத்து நீடித்த நிலையான விவசாயத்திற்கு வழி வகுத்தல்.  மேற்கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பாதுகாப்பு வேளாண்மையின் பங்கு இன்றியமையாததாகும்.

பாதுகாப்பு வேளாண்மையின்  மூலம் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமின்றி குறைந்த வேலையாட்கள் தேவை, குறைந்த செலவினத்தைக் கொண்டு அதிக விளைச்சல் பெற முடியும். மேலும், பசுமைக் குடில் வாயு வெளிப்படுத்துவதும் குறையும். பாதுகாப்பு வேளாண்மையில் கீழ்காணும் மூன்று முக்கிய கோட்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

 • குறைந்த உழவு
 • பயிர்த்தாள்கள் மற்றும் கழிவுகளை கொண்டு நிரந்தரமாக மண் மேற்பரப்பில் நிலப்போர்வை அமைத்தல்
 • பயறு வகைப்பயிர்களை பயிர்சுழற்சி முறையில் சாகுபடி செய்தல்.

குறைந்த உழவு

 • உழவற்ற நிலையே பூஜ்ய உழவு என அழைக்கப்படுகிறது. குறைவான உழவு முறையின் குறைந்தப்பட்ச நிலையே பூஜ்ய உழவு ஆகும். முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல் விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.
 • குறைந்த உழவின் மூலம் மேல் மண் மற்றும் அடி மண் இறுக்கம் தடுக்கப்படுவதோடு மட்டுமின்றி மண்ணின் கட்டமைப்பும் மேம்படுத்தப்படுகிறது.
 • மண்ணில் அங்கக பொருட்களில் வீணாவது பெருமளவு குறைக்கப்படுகிறது.
 • நீர் பிடிமானம் மற்றும் நீர்த்தேக்கி வைக்கும் தன்மை அதிகரித்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகறது.
 • மண்ணில் உறங்கும் நிலையில் உள்ள களை விதைகளின் முளைப்புத்திறனை குறைக்கச் செய்து களைகளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது.

நிலப்போர்வை

பாத்திகளில் பயிர் கழிவுகளை நிலப்போர்வையாக பயன்படுத்துவதால் நிலத்திலுள்ள நீர் ஆவியாக வெளியேறுவது தடுக்கப்படுகின்றது. சோளத்தட்டை, கம்புத்தட்டை, சூரியகாந்தித் தட்டை, நிலக்கடலைத்தோல், தென்னை நார்க்கழிவு ஆகியன மண் ஈரம் காக்கப் பயன்படும் பொருட்களாகும். இதனால் மண் ஈரம் காக்கப்படுவதுடன் இக்கழிவுகள் அங்கக உரங்களாக மாறி பயிருக்குப் பயன்படுத்தியதில் பயிர் விளைச்சல் 10 முதல் 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், மண் மூட்டமிடுவதால் மழைநீர் நேரடியாக மண்ணைத் தாக்காமல் இருப்பதால் அண் அரிப்பு ஏற்படுவததைத் தடுக்கலாம்.

தற்போது நிலவிவரும் குறைந்த பயிர் உற்பத்திக்கு மண்ணின் அங்கக பொருள்களின் அளவு, மண்ணின் வளம் மற்றும் மண்ணில் உள்ள சத்துக்கள்  மிகபெரும் காரணிகளாக விளங்குகின்றன. ஆனால் குறைந்து வரும் கால்நடைகளின் எண்ணிக்கை,  இயற்கை உரங்களின் பற்றாக்குறை மற்றும் முறையற்ற பயிர்கழிவு        நிர்வாகம்  ஆகியவை  இதற்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. இச்சூழலில் அதிக சத்துக்களை கொண்ட பயிர்கழிவுகளை நாம் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். பொதுவாக விவசாயிகள் பயிர் கழிவுகள் மற்றும் பயிர்த்தாள்களை தீவனமாகவும், கால்நடை மற்றும் கோழியினங்களுக்கு படுக்கைகளாகவும், காளாண் உற்பத்திக்கும் சிலர் சாண எரிவாயு உற்பத்திக்கும் பயன்படுத்துகின்றனர்.  சிலர் வயல் வரப்புகளில்  அப்படியே குவித்தும், மண்ணில் மடக்கி உழுதும், வயல்களிலேயே எரித்தும் மக்கிய குப்பைகளாக மாற்றி பல்வேறு முறைகளில் நிர்வகிக்கின்றனர். ஆனால் பாதுகாப்பு வேளாண்மையில் பெரும்பான்மையான பயிர் கழிவுகளை மண் மூடாக்கு மூலம் திரும்ப பயன்படுத்துவதால் கீழ்கண்ட பயன்களை அடையலாம்.

 • சாகுபடிக்கு முந்தைய பயிர் கழிவுகள் மற்றும் பயிர்த்தாள்களை கொண்டு நிலப்போர்வை அமைப்பதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதோடு மட்டுமின்றி மண் அரிமானத்தை தடுத்து மண்ணின் வளம் மற்றும் சத்துக்கள் விரயமாவது தடுக்கப்படுகிறது.
 • மண்ணில் உள்ள சத்துக்கள் சுலபமாகவும், சீராகவும் பயிர்களுக்கு கிடைக்க வழி வகை செய்கிறது.
 • மண்ணில் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்கி மண் வளத்தை பெருக்குகின்றது.
 • மழை மற்றும் வெயில் காலத்தில் மண்ணின் வளத்தை பாதுகாக்கிறது.
 • களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

பயறு வகைப் பயிர்களை பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்தல்

சம்பா நெல் அறுவடைக்கு பிறகு கோடை பருவத்தில் நெல்லையே சாகுபடி செய்கின்றனர். மேலும்; குறைந்த வயதுடைய காய்கறிகள், மக்காச்சோளம், எள், நிலக்கடலை மற்றும் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது.  சம்பா நெல்லுக்கு பிறகு குறைந்த வயதுடைய பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயறு, துவரை, தட்டைப்பயறு, கடலை மற்றும் சோயா ஆகியவற்றை சாகுபடி செய்யும்பொழுது மண்ணின் வளம், அங்ககப்பொருள்களின் அளவு மற்றும் சத்துக்கள் மேம்படுவது மட்டுமின்றி களைகளின் தாக்கத்தையும் வெகுவாக குறைக்கின்றது.

ஆழச்சால் அகலப்பாத்தி

மானாவாரியில் மண் ஈரம் காக்க, ஆழச்சால் அகலப்பாத்தி அமைப்பது நல்ல பலனை அளிக்கிறது. 1.5 முதல் மீட்டர் இடைவெளியில் சரிவிற்குக் குறுக்கே 30 செ.மீ. ஆழச்சால் அமைப்பதன் மூலம், மழைநீர் சால்களில் தேக்கப்பட்டு நிலத்தடியில் ஈரம் காக்கப்படுகிறது. தற்போது முன் பருவ விதைப்பையும் இந்த அகலப்பாத்தியில் செய்ய முடியும். ஆழச்சால் அகலப்பாத்தி அமைக்கும் கருவியும், நவீன பலநோக்கு விதைக்கும் கருவியும்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செலவினங்களைக் கணிசமாக குறைக்க இயலும்.  இயந்திரங்களை கொண்டு ஆழச்சால் அகல பாத்தியை ஒரு மீட்டர் அளவு என்ற வீதத்தில் அமைத்து படுக்கையில் பயிர்களை விதைக்கும் முறையானது தற்போது வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பமாகும்.

 • குறைந்த வேலையாட்களை கொண்டு மேட்டு பாத்தி மற்றும் வாய்க்கால்களை அமைக்கலாம்.
 • படுக்கையில் விதைப்பு செய்யும் பொழுது; குறைந்த விதையளவு மட்டுமே தேவைப்படும்.
 • படுக்கை விதைப்பில் களைக்கொல்லிகளின் திறன் அதிகரிப்பதோடு மட்டுமின்றி களைகளை இயந்திரங்களை கொண்டு மிக சுலபமாக கட்டுப்படுத்திட வழிவகுக்கிறது.
 • கடுமையான வறட்சி காலத்தில் பயிர்களை காப்பதோடு மட்டுமில்லாமல் மழை காலங்களில் அதிகப்படியான நீரினை வெளியேற்ற வழிவகை செய்கிறது.
 • அடியுரம் மற்றும் மேல் உரத்தை சரியான அளவில் சரியான இடத்தில் பயிர்களுக்கு இட ஏதுவாக அமைகிறது.
 • அதிகப்படியான சூரிய ஒளியை பயிர்களுக்கு கிடைக்கச் செய்து திரட்சியான பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.
 • பயிர்களின் வேர் பிடிமானம் அதிகரித்து மழைக்காலங்களில் பயிர்கள் சாய்ந்து விழும் தன்மையை கட்டுப்படுத்துகிறது.

மேற்கண்ட பாதுகாப்பு வேளாண்மை வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிப்பதில் மூலம் மண்ணின் வளத்தை காத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர்சாகுபடி இழப்பை தவிர்த்து உற்பத்தியில் தன்னிறைவை அடையலாம்.

கட்டுரையாளர்கள்: வை.ஹரிஹரசுதன், பூ.மு.சண்முகம் மற்றும் ஆ. விஜயபிரபாகர். வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி. மின்னஞ்சல்: pms73@tnau.ac.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news