சம்பங்கிப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்

0
552

வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்யப்படும் வணிக மலர்களில் சம்பங்கி முக்கியமான மலர்ப்பயிராகும். இம்மலர்கள் கவர்ச்சியான வெண்மை மற்றும் வண்ண நிறங்களாலும் மெல்லிய நறுமணத்துடனும், கொய்மலர் மற்றும் உதிரி மலராகவும், நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன.  மேலும் தோட்டங்களில் அழகுக்காக தொட்டிகளிலும், படுக்கைகளிலும், வரப்புகளிலும் வளர்க்கப்படுகின்றன. வட மாநிலங்களில் இவை பெரும்பாலும் கொய்  மலருக்காகவும், தென்னிந்தியாவில் உதிரி மலருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றது. இதனை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இலைப்பேன்

இலைகள், மலர் காம்புகள், மலர் மொட்டுகள் மற்றும் மலர்களில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் முழு செடியும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. டைமித்தோயேட் 2 மி.லி அல்லது ரோகர் 1 மி.லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அசுவினி

இவை செடியின் வளர் நுனி மற்றும் மலர் மொட்டுகளில் கூட்டம் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சி குடிப்பதன் மூலம் சேதம் உண்டுபண்ணுகின்றன. மாலதியான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை 0.1 சதம் வீரியத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

வேர்முடிச்சு நூற்புழூ

தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து காய்ந்துவிடும். செடிகளின் வளர்ச்சி குன்றிவிடும். கடுமையாக தாக்கப்பட்ட செடிகளில் இருந்து பூங்கொத்து வெளிவருவது இல்லை. இதனால் பூ மகசூல் பாதிக்கப்படுகிறது. கிழங்கிலிருந்து பக்கக்கன்றுகள் தோன்றுவதுடன் பாதிக்கப்பட்ட செடிகளில் வேர்களின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும்.

மேலாண்மை   முறைகள்

கார்போபியூரான் குருணை மருந்தை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் இட்டு நடவு செய்ய வேண்டும்.

இலை நூற்புழுக்கள்

இவை இலை, தண்டு மற்றும் பூக்களை தாக்குகின்றன. தாக்கப்பட்ட மலர் தண்டுகள் கடினமாகவும் உருகுலைந்தும், மொட்டுகள் மலராமலும் காணப்படுகின்றன. அதிகமாக பாதிக்கப்பட்ட மலர்கள் அழுகி காய்ந்து விடுகின்றன. கல்கத்தா டபுள் என்ற இரகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படும்.

மேலாண்மை முறைகள்

விதை கிழங்குகளை நடும் முன்னர் 4 சதவீதம்  வேப்பங்கொட்டை சாறில் ஊறவைத்து நட வேண்டும். கிழங்குகள் முளைத்து வந்த பின்னர் 3 முதல் 4 முறை மோனோ குரோட்டோபாஸ் என்னும் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி  என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். இந்த நூற்புழுவிற்கு எதிர்ப்பு சக்தி உடைய இரகங்களாகிய ப்ரஜிவால், ஸ்ரீங்கார் ஆகியவற்றை நடவு செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்கள்:

  1. முனைவர் கா.கயல்விழி, உதவி பயிற்றுநர் (தோட்டக்கலை), வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி. மின்னஞ்சல் : kkayal.flori@gmail.com

 

  1. முனைவர் அ. சங்கரி. இணைப் பேராசிரியர் (தோட்டக்கலை), காய்கறிகள் துறை, தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்பத்தூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here