மாம்பழங்களில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை கட்டுப்பாடு

0
1190

அறிமுகம்

மாம்பழம் இந்தியாவின் தேசியப் பழமாகும். உலகின் மாம்பழங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படுகின்றது. மேலும், 2017 ஆம் வருடத்தில் மாம்பழங்களின் உலகளாவிய உற்பத்தி  50.6 மில்லியன் டன்கள் ஆகும், மாம்பழபழங்கள் அதிகம்  உற்பத்தி  செய்யும் நாடாக இந்தியா உள்ளது (19.5 மில்லியன் டன்). இந்தியாவிற்கு அடுத்ததாக பெரிய உற்பத்தியாளர்களாக சீனா மற்றும் தாய்லாந்து உள்ளது. பொதுவாக மாம்பழம் இனிமையானது, இருப்பினும் மாம்பழச்சதைப்பகுதி, அதன் சுவை மற்றும் அமைப்புக்கு ஏற்ப வகைகள் மாறுபடுகின்றன. அல்போன்சோ போன்ற மாம்பழ வகைககள் அதிக சுவை உள்ளதாகும். மாம்பழங்கள் பலவகை  நோய்களால் தாக்கப்படுகின்றன. அவற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஆந்த்ராக்னோஸ் நோய் மேலாண்மை முறைகளை கீழே காண்போம்.

ஆந்த்ராக்னோஸ் (Colletotrichum gloeosporoides) பூஞ்சை நோய்

ஆந்த்ராக்னோஸ் என்ற சொல்லுக்கு “எரியும் நிலக்கரி ” என்று பொருள். எனவே முதலில் கரும்புள்ளிகள் உருவாக்கும் பூஞ்சைகளுக்கு பெரும்பாலும் இந்த பெயர் சூட்டப்படுகின்றது. மாம்பழத்தின் மிக முக்கியமான நோய்களில் ஆந்த்ராக்னோஸ் நோயும் ஒன்றாகும். இந்நோய் ஈரப்பதம் அதிகமான இடங்களில் தோன்றும். மேலும் பழத்தோட்டங்கள் மற்றும் பழ சேமிப்பு கிடங்குகள் ஆகிய இரண்டிலும் இந்நோய் கடுமையாகத்  தாக்கும். மேலும் இந்நோய் இந்தியாவில் உள்ள பீகார், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாபில் பரவலாக காணப்படுகின்றது.

ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை தாக்கும் பல்வேறு தாவரங்கள்

மாம்பழம், வெண்ணெய் பழம், குடைமிளகாய், காபி, கத்திரிக்காய், பப்பாளி, தக்காளி மற்றும் சேனை கிழங்கு உள்ளிட்ட பல பயிர்களை இந்த பூஞ்சை தாக்குகின்றது. மேலும் இந்த பூஞ்சை விளைபயிர்கள் மற்றும் களைகளை பாதிக்கின்றது.

ஆந்த்ராக்னோஸ் நோயின் அறிகுறிகள்

பூஞ்சையின் விதைகள் மாமரத்தில் உள்ள பிற இலைகள் மற்றும் பூக்கள் மற்றும் இளந்தளிர்கள் மீது மழையால்  துாவப்பட்டு பரவுகின்றது. அவை முளைத்து, நோய்த் தொற்று ஏற்பட்டு மா இலைகளில் அதிக  கரும்புள்ளிகள் மற்றும் எரிந்த தோற்றத்தை உருவாக்குகின்றன. இளந்தளிர்கள் தொற்றுநோயால் பெரிதும்  பாதிக்கப்படுகின்றன. முதலில் இலைகளில் சிறிய கரும்புள்ளிகள் தோன்றும். பிறகு கரும்புள்ளிகள் ஒழுங்கற்ற தோற்றமடைந்து, பெரும்பாலும் அவை மாமர இலைகளில் விரிவடைந்து, பின்னர் உலர்ந்து, வீழ்ந்துவிடுகின்றன.

ஆந்த்ராக்னோஸ் நோய் தொற்று ஏற்படும் காலம் 

இந்த நோயை முக்கியமாக பிப்ரவரி முதல் மே மாதம் வரை காணலாம். குறிப்பாக பழம் முதிர்ச்சியடையும் போது, இந்த பூஞ்சை இறந்த கிளைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இலைகள் வழியாக பரவுகின்றது. மேலும் மழை தூறல் மற்றும் பனி வழியாகவும், காற்று மூலமாகவும் ஆந்த்ராக்னோஸ் பரவுகின்றது.

மாந்தளிர்கள் மற்றும் பூக்கள் மற்றும் மாம்பழங்களின் வளர்ச்சியின் போது மாறுபட்ட ஈரப்பதம் மற்றும் மூடுபனி நிலை மற்றும் 24-32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை  தொற்றுநோய்க்கு மிகவும் சாதகமானதாக உள்ளது. இந்த நிலை ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் வட இந்தியாவில் நிலவுகின்றது. இதனால் நோய்த்தொற்று மிக வேகமாக பரவுகிறது.

மா பூக்கும் போது தொடர்ந்து ஈரமான வானிலை இருக்குமானால் அதன் பூக்கும் திறன் கடுமையான பாதிக்கப்படுகின்றது பழத்தொற்றுக்கு ஈரப்பதம் தொண்ணுற்று ஐந்து சதவீதம் (95%) பன்னிரண்டு (12) மணி நேரம் நீடிப்பது மிக அவசியம். மேலும் இந்த ஈரப்பதம் கிடைக்கும்போது பூஞ்சை மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது,

மாம்பழ ஆந்த்ராக்னோஸ் நோய் மேலாண்மை 

ஆந்த்ராக்னோஸ் நோய்  கட்டுப்படுத்த  மரங்களை கத்தரித்தல்  வேண்டும். ஆந்த்ராக்னோஸ் நோய் கடுமையான பயிர் இழப்புக்கு வழிவகுக்கின்றது (10-90%). ஈரப்பதத்தைக் குறைக்க மற்றும் சுதந்திரமாக காற்று வீச மாமரங்களை  கத்தரிக்க வேண்டியது அவசியம். எளிதான மேலாண்மை மற்றும் அறுவடைக்கு மரங்கள்  நான்கு  மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும். நோயுற்ற கிளைகளை அகற்றி, விழுந்த இலைகளுடன் எரிக்க வேண்டும். மேலும் பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடுகளும் தேவைப்படுகின்றது.  .

ஆந்த்ராக்னோஸ் நோய் வேதியியல் கட்டுப்பாடு

இலை மற்றும் மலர் கருகலை  கட்டுப்படுத்த இரசாயனங்கள் காப்பர் ஆக்ஸிகுளோரைடு (copper oxy chloride) அல்லது மேன்கோசெப் (Mancozeb) சரியான நேரத்தில் பயன்படுத்துவது அவசியம். பூக்கள் முதலில் தோன்றும்போது தொடங்கி, அறுவடைக்கு முந்தைய காத்திருப்பு காலம் வரை பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடுகளும்  தொடர வேண்டும்

அறுவடைக்கு பின் ஆந்த்ராக்னோஸ் நோய் வேதியியல் கட்டுப்பாடு

அறுவடைக்கு பிந்திய பூஞ்சைக் கொல்லி (கார்பென்டாசிம்) மற்றும் சூடான நீரில் (இரண்டு சிகிச்சையும் ஐந்து நிமிடங்களுக்கு ஐம்பத்தி ரெண்டு டிகிரி செல்சியஸ் (52°C) வைத்தால் பழநோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்தும். சேமிப்பக பழ அழுகலையும் தடுக்கின்றது.

ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை மா இலைகளில் உண்டாக்கும் கரும்புள்ளிகள்.

ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை உண்டாக்கும் கரும்புள்ளிகள் மற்றும் மாம்பழ அழுகல் நோய்.

கட்டுரையாளர்:

டாக்டர். ஜெ. வசந்தி, உதவிப் பேராசிரியர், பாண்டிச்சேரி  வேளாண்  அறிவியல் கல்லூரி,  புதுச்சேரி.  தொடர்பு எண்: 8754519740

மின்னஞ்சல்: vasres01@gmail.com   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here