Skip to content

காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு

வைர முதுகுப் பூச்சியானது புளூடெல்லிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது.  இந்த பூச்சியானது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு வந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இப்பூச்சியானது ஐரேப்பாவை தாயகமாகக் கொண்டது. மேலும் இது காலிஃபிளவா் மற்றும் முட்டை கோஸ் போன்ற குரூசிபெரஸ் குடும்பத்தை சார்ந்த அனைத்து காய்கறிகளையும் உண்ணக் கூடியது. இப்பூச்சியானது ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற அனைத்து பகுதிகளிலும் பரவி தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த பூச்சியினால் 50 சதவிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.

தாக்குதலின்அறிகுறிகள்:-

  • வைர முதுகுப் பூச்சியின் இளம்புழுவானது, இலையில் உள்ள அனைத்து பசுமையான பகுதிகளையும் சுரண்டி சாப்பிட்டு அதிக சேதத்தை ஏற்படுத்தும். இதனால் இலையானது வாடிய நிலையில் மற்றும் வெள்ளை திட்டுகளுடனும் காணப்படும்.
  • முதிர்ந்த புழுவின் தாக்கத்தினால் இலை முழுவதுமாக உண்ணப்பட்ட நிலையில் சிறிய ஜன்னல்கள் போன்ற துளைகளுடன் காணப்படும்.

பொருளாதார சேதநிலை:-  ஒரு செடிக்கு 2 புழுக்கள்

வாழ்க்கைசுழற்சி :-

முட்டை :- மாலை நேரங்களில், இலைக்கு அடிப்பகுதியில் உள்ள இலை நரம்புகளில், மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்துடன், பச்சை நிற சாயல் பூசப்பட்ட முட்டைகளை தனித் தனியாக தாய் அந்து பூச்சி வைக்கும். முட்டையின் காலம் 3-6 நாட்கள் ஆகும்.

புழு:- புழுவானது வெளிர் பச்சை நிறத்துடன் சிறிய அளவில் காணப்படும். மேலும் சிறிய மருக்கள் போன்ற அமைப்பும் காணப்படும்.  புழுவின் காலம் 14-21 நாட்கள் ஆகும்.

கூட்டுப்புழு:- கூட்டுப் புழுவானது மெல்லிய துணி போன்ற கூட்டை இலைப் பகுதியில் கட்டும். கூட்டுப் புழுவின் காலம் 10-13 நாட்கள் ஆகும்.

அந்துப்பூச்சி:- அந்துப் பூச்சியானது பழுப்பு கலந்த காவி நிறத்தில் சிறிய அளவில் காணப்படும். குறுகிய இறக்கைகளுடனும் அதன் உட்பகுதி மஞ்சள் நிறமாகவும் காணப்படும். மூன்று வெளிரிய வெள்ளை நிற முக்கோண அடையாளங்கள் பின் இறக்கையில் காணப்படும். ஓய்வு நிலையில் அதன் மேற்புறத்தில்  3-வைர வடிவ மஞ்சள் கலந்த வெண்மை நிற திட்டுகள் காணப்படும். பின் இறக்கையானது விளிம்பு போன்ற அமைப்புடன் காணப்படும்.

மேலாண்மை வழிமுறைகள்:-

  • அறுவடை செய்த பின் வயலில் உள்ள பயிர் குப்பைகளை சேகரித்து அழிக்க வேண்டும். பின்னா் வயலை உழவு செய்ய வேண்டும்.
  • கடுகுச் செடியை ஊடு பயிராக (1:20) என்ற அளவில் பயிரிடுவதன் மூலம் தாய் அந்துப் பூச்சியை கவர்ந்து அளிக்கலாம்.
  • தாய் அந்துப் பூச்சியானது மாலை நேரங்களில் முட்டைகளை செடியின் மேற் புறத்தில் இடுகின்றது. எனவே, தெளிப்பான் முறை நீா் பாசனத்தை மாலை வேளைகளில் மேற் கொண்டால் முட்டை இடுவதை தவிர்க்கலாம்.
  • இனக் கவா்ச்சிப் பொறிகளை 5/ ஏக்கா் என்ற அளவில் வயலில் வைத்து தாய் அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • புழு ஒட்டுண்ணியான கொட்டீசியா புளுடெல்லே என்ற குளவி இனத்தை 40,000/ ஏக்கா் என்ற அளவில் சம வெளிப்பகுதிகளிலும், டைடெக்மா செமிக்க்ளாஸம் என்ற குளவி இனத்தை 8000/ ஏக்கா் என்ற அளவில் மலைப்பகுதிகளில் விடுவதினால், இப்பூச்சியின் தாக்கத்தை குறைக்கலாம். இக்குளவியினத்தை பயிர் நடவு செய்த 20-ம் நாளிலிருந்து வயலில் விடுவது நல்லது.
  • கார்டாப்ஹைட்ரோகுளோரைடு என்ற மருந்தினை 1 கிராம் / லிட்டா் (அ) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 2 கிராம் / லிட்டா் என்ற உயிர் பூச்சிக் கொல்லி மருந்தினை தெளித்து இதன் தாக்கத்தினை குறைக்கலாம்.
  • பூச்சியின் தீவிரத்தை பொறுத்து கார்டாப்ஹைட்ரோகுளோரைடு 0.05% (அ) குயினால்பாஸ் 0.05% என்ற அளவில் காய்பிடிக்கும் தருணத்தில் தெளிக்கலாம்.
  • ப்ளுபென்டையமைய்டு (Flubendiamide) மருந்தினை 7.5கி என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • குலொரன்ட்ரனலிபுரொல் 18. 5 EC – 150 மிலி/ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

கட்டுரையாள‌ர்கள்:

1. சூரியா. ச, முதுநிலை வேளாண் மாணவர், (பூச்சியியல் துறை), வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தூத்துக்குடி.

மின்னஞ்சல் : suriyaento23@gmail.com

  1. முனைவர் செ. சேகர், உதவிப் பேராசிரியர் (பூச்சியியல் துறை), ஆர். வி. ஏஸ் வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர்மின்னஞ்சல் : sekar92s@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news