Skip to content

நோயுற்ற கால்நடைகளை கண்டறிதல் மற்றும் பராமரிக்கும் முறைகள்

மனிதர்களை போல் இல்லாமல் கால்நடைகளுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிதல்  சற்று சிரமமாகும். நோயுற்ற கால்நடைகள் மற்ற கால்நடைகளைக் காட்டிலும் சற்றே சோர்ந்து காணப்படும். சரியாக தீவனம் உட்கொள்ளாமல் இருத்தல்,  கழிச்சல் அல்லது சாணம் வெளி வராமல் இருத்தல், அதிக உடல் வெப்பநிலை, சுவாசிப்பதில் சிரமம்  ஏற்படுதல் போன்றவை கால்நடைகள் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்படின் அறிகுறிகள் ஆகும். அவ்வாறு நோயுற்ற கால்நடைகளை கண்டறிந்து அவற்றிற்கு தகுந்த சிகிச்சை அளித்தால் கால்நடைகளை  நோய் தாக்கத்திலிருந்து குணப்படுத்தலாம்.

கால்நடைகளின் நலனை பாதிக்கும் காரணிகள்

கால்நடைகளின் நலனை பாதிக்கும் காரணிகள் சில. அவை காயங்கள், சிராய்ப்புகள், அதிகமாக விலகிய மூட்டுகள், எலும்பு முறிவு, அடிபடுதல் ஆகியவை. அதிக வெப்பம் மற்றும் குளிர், கால்நடைகளின் மேற்புறத்தை  தாக்குதல், விஷம் சாப்பிடுதல், மரபு வழி நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, நுண்ணுயிரி, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள்.

கால்நடைகளின் நாடித்துடிப்பு அறிதல்

கால்நடைகளின் இதயத் துடிப்பு சீராக உள்ளதா என்று கண்டறிய நாடித் துடிப்பை பதிவு செய்ய வேண்டும். நாடியின் அழுத்தத்தை உணர்வதன் மூலம் இரத்த அழுத்த நிலையைக் கண்டறிய முடியும். மேலும் நாடித் துடிப்பு குறைவாகக் காணப்பட்டால் உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைவாக இருக்கக் கூடும். நாடித் துடிப்பை சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் நீர்ச் சத்து ஏற்றும் போதும் அளவிட்டுப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கால்நடைகளில் நாடித்துடிப்பை உணர்வது என்பது மனிதர்களைக் காட்டிலும் சற்று சிரமமான காரியமாகும். மாடுகளில் வாலின் அடிப்பகுதியை நமது விரல்களின் நுனிப்பகுதியால் தொட்டு உணர்ந்து நாடித் துடிப்பை அறியலாம் அல்லது கீழ்த்தாடை விளிம்பில் வரும் இரத்தக் குழாய் மீது விரல்களை வைத்தும் உணரலாம்.

கால்நடைகளில் சுவாச எண்ணிக்கையை அறிதல்

கால்நடைகளின் சுவாச எண்ணிக்கையை அறிவதன் மூலம் கால்நடைகளின் சுவாச இயக்க வேலைப்பாடு மூச்சுத் திணறல், மூச்சடைத்தல் போன்றவற்றை அறியலாம். கால்நடைகளின் மூச்சுத்துவாரம் அருகே கை விரல்களைக் கொண்டு செல்லும் போது சுவாசக் காற்று வீசுதலை உணரலாம். ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசக் காற்று நம் கையை தொடுகிறது என்பதை வைத்து சுவாச எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும்.

சுவாச எண்ணிக்கையை கணக்கிடும் போது மூச்சுத்துவாரத்தில் சளி அல்லது இரத்தம் ஏதும் வடிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். பொதுவாக கோடை காலங்களில் மூச்சிறைப்பு இருக்கும். அதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நெடுந்தொலைவிலிருந்து நடந்து வரும் கால்நடைகளுக்கு சிறிது ஒய்வு அளித்த பின்னரே சுவாச எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும்.

பராமரிப்பு  முறைகள்

மந்தமான இளைத்த கால்நடைகளை மந்தையிலிருந்து பிரித்து தனியாக கொட்டகையில் அதிக கவனத்துடன் பராமரித்துக் கொள்ள வேண்டும். உரிய சிகிச்சையும் மருந்தும் உணவும் நீரும் மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகள் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும். தூய்மையான நீர் இடம் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு வேளை நோயுற்ற கால்நடைகளால் தீவனம் உட்கொள்ள முடியாமல் போனால் குழல் மூலம் அவற்றிற்கு ஆகாரம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். கால்நடைகள் உள்ள கொட்டகைகள் நல்ல காற்றோட்டத்துடனும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். கொட்டகையில் போதுமான அளவு இடவசதியை அளித்து படுக்கையும் அளிக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளுக்கு தனித்தனி தீவனம்  மற்றும் தண்ணீர் தொட்டியும் உபகரணங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். உடல் வெப்பநிலை, சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு ஆகியவற்றை முறைப்படி அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். நோயினால் இறந்த  கால்நடைகளை  முறைப்படி எடுத்து நோய் பரவாமல் இருக்கும் வகையில் அடக்கம் செய்ய வேண்டும்.

நோயுற்ற கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கும் முறைகள்

கால்நடைகளுக்கு நுண்ணுயிரிகள் மூலமும் ஒட்டுண்ணிகள் மூலமும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் நோய்கள்  உண்டாகக் கூடும். இதனால் அதன் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் உடல் எடை குறைபாடு ஏற்பட்டு கண்காணிக்கப்படாமல் இருந்தால் உயிர் இழப்பு ஏற்படும். ஆகவே நோயுற்ற கால்நடைகளின் உடல் நலன் பேணும் பொருட்டு நோயால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு மற்றும் நோய் அறிகுறிகள் வைத்து உணவு அளிக்க வேண்டும்.

நோயுற்ற கால்நடைகளுக்கு உணவு அளிக்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை

நோயுற்ற கால்நடைகள் குறைந்த அளவே தீவனம் உட்கொள்ளும். ஆகவே சத்து மிக்க தீவனத்தை அளிக்க வேண்டும். சுவை தன்மை மிக்க தீவனமாக இருப்பதோடு அனைத்து ஊட்டச் சத்துக்களும் கலந்ததாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அதற்குண்டான தேவையான ஊட்டச்சத்தை வாய் மூலமாகவோ அல்லது ரத்தக் குழாய் மூலமாகவோ கொடுத்து நோயை குணப்படுத்த வேண்டும். உணவுக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்களாக இருந்தால் நீர் ஆதாரம் கொண்ட உணவாகவும் உடலின் கார அமிலத் தன்மையை சரி செய்யும் உணவாகவும் இருக்க வேண்டும். எளிதில் செரிக்கக் கூடிய உணவாக இருக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு தேவைப்படும் உணவை சிறிது சிறிதாக பிரித்து கொடுக்க வேண்டும். சிறுநீரகம் தொடர்பான நோய்களாக இருந்தால் புரதச் சத்து மற்றும் உப்புச் சத்து குறைந்த உணவாக இருக்க வேண்டும். கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு எளிதில் ஜீரணமாகும் எரிசக்தி மிக்க தீவனங்கள் கொடுக்க வேண்டும்.  நச்சுத் தன்மை உடைய தீவனம் உண்டதால் ஏற்பட்ட வியாதியாக இருந்தால் உடனடியாக அந்த தீவனத்தை தவிர்த்து நச்சு முறிவு வழி முறைகளை மேற்கொள்ள வேண்டும். இளம் கால்நடைகளுக்கு ஜீரண நொதிகளையும் உயிர் சத்து கொண்ட பொருட்களையும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கால்நடைகளில் நோய் தாக்கம் உள்ளதை விரைவில் கண்டறிந்து அவற்றிற்கு தகுந்த சிகிச்சை மற்றும் தீவனம் அளிப்பதன் மூலமும் சிறந்த  பராமரிப்பு  முறைகள் மூலமும் கால்நடைகளை நோயின் தாக்கத்திலிருந்து குணப்படுத்தலாம்.

கட்டுரையாளர்கள்:

மரு. ஜெ. சுபாஷினி

மற்றும்  முனைவர் இரா. வினோத்

உதவி பயிற்றுநர்கள், வேளாண்மைக் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news