Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)

அமில மழையில் அழியும் கலை!

2018 ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது அது என்னவென்றால் “ஒன்று தாஜ்மஹாலை காப்பாற்றுங்கள் இல்லையேல் அதனை அழித்து விடுங்கள்” என்பதுதான். இதற்கு என்ன காரணமாக இருக்கும் வேறு ஒன்றுமல்ல அமில மழை. 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 1990களில் சல்பர் டைஆக்ஸைடு அளவு காற்றில் 4400 கிலோ டன்கள் இருந்ததாகவும் இவை 10 ஆண்டுகளில் அதிகரித்த வண்ணத்தில் (2000ஆம் ஆண்டு) 6500 கிலோ டன்களையும்  2010இல் 10900 டன்கள் ஆகவும் 2020இல் 18,500 டன்களாக இருக்கும் என்று கணிக்கிறோம். சல்பர் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பது அந்த குறிப்பிட்ட இடத்தின் கார – அமிலத் தன்மையை மாற்றும் இயல்புடையது. அமில மழையின் அளவிலும் சல்பர்-டை-ஆக்சைடு தான் பிரதானப் பங்கினை வகிக்கிறது.

அமில மழை பொழிகின்ற இடங்களிலெல்லாம் அவ்விடத்தின் தட்பவெப்ப சூழல் மாறுவதோடு வேளாண்மையில் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றது. அமில மழை பொழியும் இடங்களில் பயிர்களுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் அந்த அமில  மழையோடு வேதியியல் வினை மாற்றம் புரிந்து சத்துக்கள் பயிர்களுக்கு எட்டாத கிட்டாத நிலைகளுக்கு சென்று விடுகிறது.  இதனால் பெரும் வனப்பகுதிகள் அமில மழைக்கு இரையாகி இருக்கின்றன.

மண்ணில் இருக்கும் அலுமினிய தாதுக்களை இவை எடுத்து விடுகின்றன. இவற்றில் இருக்கும் சல்டோரிக் ஆக்சைடு மண்ணில் மற்றும் பயிரில் இருக்கும் சத்துக்களோடு வினைபுரிந்து அவற்றை கரைத்து விடுகிறது.  இதனால் மண் மற்றும் பயிர்கள் பல நாடுகளில் அமில மழைக்கு சேதமாகி இருக்கின்றன.

சரி காடுகள் மட்டும்தான் இதனால் அழிக்கப்படுகின்றனவா என்றால் இல்லை. சுண்ணாம்பால் கட்டப்பட்ட பல நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள் அமில மழையால் வீணாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அது இப்பொழுது இந்தியா போன்ற தேசங்களிலும் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் மேற்கண்ட தாஜ்மஹால் பிரச்சனை. வெள்ளை மார்பிள் என்னும் சுண்ணாம்புக் கல்லினால் கட்டப்பட்ட தாஜ்மஹால் தன்னுடைய பொலிவையும் நிறத்தையும் அழகையும்  இழந்து வருகிறது.  காலையில் செம்பழுப்பு நிறத்திலும் மதியம் வெள்ளை நிறத்திலும் இரவில் தங்கத்தின் நிறத்திலும் ஜொலிக்கும் அழகிய நினைவு சின்னம் தாஜ்மஹால். ஆனால் இன்று அவை சிறிது சிறிதாய் மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகின்றது  என்கின்றனர் அறிவியலாளர்கள். அதற்கு காரணம் அதைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் என்று குறிப்பிடுகின்றனர். காற்றிலே கலந்து தாஜ்மஹாலின் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றது இதனால் ஏற்பட்ட விரக்தியில் உச்ச நீதிமன்றம் அவ்வாறு கூறியது.  அரசும் தாஜ்மஹாலை பாதுகாக்கும் வண்ணம் Taj tarpezium என்னும் திட்டத்தை அமல்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இது இங்கு என்றால் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் வருடாவருடம் அங்கிருக்கும் சீன சுண்ணாம்பு கற்களால் ஆன சிலை ஒன்றை படத்தில் காட்டுவது போல் மூடி வைப்பர். காரணம் அங்கு பொழியும் பனி அமில மழை பனியாய் இருக்கும் என்பதனால் அவை சிலைகளை சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அதுமட்டுமின்றி அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையும் அமில மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் முகம்  உருவம் மாறி கரும் புள்ளிகள் விழுந்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அது சரி செய்யப்பட்டாலும் இவை அமில மழை அதிகரிப்பதற்கான சான்று தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மார்பில் என்பது ஒருவகை சுண்ணாம்புக்கல் தான். அது  இந்த அமில மலையோடு வினைபுரிந்து கால்சியம் கார்பனேட் ஆக மாறி இறுதியில் நீரில் கரைந்து இந்த சிலைகளை உருவ மாற்றவும் அழிக்கவும் செய்கின்றது.

போலந்து நாட்டின் கார்கோ மாகாணத்தில் உள்ள கோவில்கள், எகிப்தின்  உள்ள பண்டைய புராதான கோவில்கள் ரோமில் மிகவும் பிரசித்தி பெற்ற colliseum என்னும் அரங்கம் போக இன்னும் எத்தனையோ நினைவுச்சின்னங்கள். இவையெல்லாம் அமில மழை தின்று செறித்த ஒருசில கலை கட்டிடங்கள் ஆகும்.

ஏன் அது மட்டுமின்றி லண்டனின் புனித பால் கேதீட்ரல் (St paul cathedral) என்னும் தேவாலயமும் குறிப்பிடக்கூடியது. ஆனால் இன்று அங்கு தொடுக்கப்பட்ட சீறிய நடவடிக்கையின் காரணமாக அதன் அரிமானம்  இன்னும் 300 ஆண்டுகள் நீடித்து நிற்கும் அளவுக்கு குறைந்துள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

இந்தியாவில் செங்கோட்டையில் ஜூம்மா மசூதி என பல கலை கட்டிடங்கள் இன்னும் அமில மழைக்கு ஆளாகிக் கொண்டு தான் இருக்கின்றன. நாம் இருக்கும் பொழுதும் மறைந்த பிறகும் நம் மண்ணில் வரலாற்றை வீரத்தை நம் வாழ்ந்த வாழ்வியலை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம்முடைய நினைவு சின்னங்களும் கலை பொருட்களும் தான். அமில மழை என்னும் தொடரை பயன்படுத்திய ராபர்ட் அங்குஸ் இப்படி கூறுகிறார் “அமில மழையால் நிச்சயம் நம் கலை பொருட்கள் சேதம் அடையும் அவை பொறுமையாய் நிகழும் நம் கலை அழிவதில் அதற்கு நிச்சயம் பங்கு இருக்கும்”.

-தொடரும்….

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news