Skip to content

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6

உலகத்தில் நாம் செய்யும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதற்கு நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் கட்டாயம் இருப்பதுதான் உலக நியதி. அப்படித்தான் பசுமைப்புரட்சிக்கும். பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதற்கு வந்த வரவேற்புகளுக்கு ஈடாக எதிர்ப்புகளும் வந்தன.

மனிதனுக்கும் வேளாண்மைக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளோ இரண்டாயிரம் ஆண்டுகளோ கொண்டது கிடையாது. பத்தாயிரம் ஆண்டுகளாக, அதாவது காடு மேடுகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன் விவசாயத்தைக் கற்றுக்கொண்ட பின்னர் ஒரே இடத்தில் குழுக்களாகத் தங்கி உறவாட ஆரம்பித்தான். அதன்பின் தான் மனிதர்களுக்கு இடையே குடும்பக் கட்டமைப்பும் அதைச் சார்ந்த ஒரு சமூகக் கட்டமைப்பும் உருவானது. கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் நாகரீகத்தைக் கற்றுக்கொண்டு இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறான். இந்த நீண்ட நெடிய பயணத்தின் தொடக்கம் வேளாண்மையில் இருத்தே தொடங்குகிறது. அதனால் வேளாண்மையை ஒரு தொழிலாகவோ காலத்தின் கட்டாயத்தில் கற்றுக்கொண்ட ஒரு பழக்கமாகவோ நாம் எடுத்துக்கொள்ள முடியாது. வேளாண்மை மக்களின் கலாச்சாரத்தில் ஒரு பகுதி. அதனாலேயே அதில் மனிதர்கள் அவர்கள் தேவைக்காக மாற்றும் பசுமைப் புரட்சி போன்ற யுக்திகளைப் பல இயற்கை ஆர்வலர்கள் எதிர்கின்றனர்.

எப்படி பல உயரினங்கள் பல காலக் கட்டங்களில் உணவு பற்றாக்குறைக் காரணமாக அழிந்துவிட்டிருக்கிறதோ, அதேபோல மனிதனும் என்றோ அழிந்திருக்க வேண்டியவன். ஆறாம் அறிவை வைத்துக்கொண்டு அழிவில் விளிம்பில் இருந்து தப்பித்துக்கொண்டு விட்டான்.

அதாவது பல காலமாக விவசாயிகளின் கையில் இருந்த விவசாயம் வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. விவசாயி அவனுக்கான விதைகளைத் தன்னுடைய நிலத்திலே உற்பத்தி செய்துக்கொள்ளும் முறை மாறி அரசு தரும் விதைகள் பயன்படுத்தும் முறைக்கு மாறியது இந்திய விவசாயம்.

நார்மன் போர்லாக் உருவாக்கிய HIGH YIELDING VARIETIES உண்மையாக அந்தப் பெயருக்கு ஏற்றதே கிடையாது என்று சூழலியலாளர் வந்தனா சிவா. அவரது The Violence of the Green Revolution புத்தகத்தில் காட்டமாக எழுதுகிறார். அவை உண்மையிலேயே High Yielding Varieties (HYV) கிடையாது. அதிக உற்பத்தித் தரக்கூடிய விதை என்றால் அது ஒரு சாதாரணமான இயற்கை சூழ்நிலையில் அப்படிப்பட்ட உற்பத்தியை தர வேண்டும். ஆனால் இந்த விதைகளின் உற்பத்திக்காக அதன் சூழல் மாற்றப்படுகிறது. எவ்வளவு சத்து மண்ணில் இருக்க வேண்டும் என்று ஆரம்பித்து எவ்வளவு நீர் பாய்ச்ச வேண்டும் என்று வரை அந்த விதைக்காக நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாற்றப்படும் அந்தச் சூழல் இயற்கைக்கு முரணாக மாறிப்போகிறது. எனவே இது High Responsive Varieties, அதாவது நாம் கட்டமைக்கும் ரசாயன சூழலுக்கு ஏற்ப விளைச்சல் தரும் விதைகள் என்கிறார் வந்தனா சிவா.

மேலும் இந்த விதைகள் உருவாக்கப்பட்ட காரணங்கள் நமக்கே தெரியும். உற்பத்தியை பெருக்குவது மட்டுமே முதல் நோக்கமாக இருந்திருக்கிறது. இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் பற்றிப் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. இதனால் இந்த விதைகளில் இருந்து விளையும் பயிர்கள் பெரும் நோய் மற்றும் பூச்சி தொற்றுக்கு ஆளாகின. இது ஒட்டுமொத்த உணவு சங்கிலியிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

கரும்புள்ளி செவ்வண்டு, பச்சை கொம்புப் புழு, தத்துப்பூச்சி உட்பட 56 வகையான நெல் பயிரை தாக்கும் பூச்சிகள் அனைத்தும் பசுமைப் புரட்சிக்குப் பின்னர்ப் பரவ ஆரம்பித்ததே. அதாவது இந்தப் பூச்சிகள் நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் அந்த வகைகள் தங்களைத் தகவமைத்து உறுதியாக இருந்தன. ஆனால் இப்போது இந்தப் பூச்சிகளின் வீரியத்தைப் பயிர்களால் தாங்க முடியாத சூழ்நிலையில் அந்தப் பூச்சிகளை விரட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அதிகமாக ஆகிறது. இத்தனை ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த வடிவத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

இப்படி மண்ணில் தெளிக்கப்படும் ரசாயனங்கள் அப்படி மண்ணை என்னதான் செய்துவிடப்போகிறது. அடுத்தத் தொடரில் பார்ப்போம்…

-தொடரும்…

கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news