Skip to content

மானாவாரி கேழ்வரகும் பழங்கால விதை விதைப்புமுறையும்

உலகின் வறண்ட மற்றும் மானாவாரி சாகுபடியில் கேழ்வரகு, குறிப்பாக சிறுதானியங்களில் முதல் நிலை வகிக்கிறது. ஏனெனில் தற்போது காணப்படும் மோசமான காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சுழல் மற்றும் வேறுபட்ட கலாச்சார நிலைக்கு தகுந்த தன்மையை இப்பயிர் அடிப்படையாகவே பெற்றிருக்கின்றன. அதனால் இப்பகுதி மக்களின் உடல், ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியும் இதனை சார்ந்தே அமைகின்றன. குறிப்பாக ஏழை, எளிய மக்களின் வாழ்வில் கேழ்வரகு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இப்பயிர் மிகவும் கடுமையான வறட்சி, வெப்பம், உவர், களர் மற்றும் வளமற்ற நிலப்பரப்பிலும் சாகுபடி செய்யகூடியதாகவும் உணவு மற்றும் கால்நடை தீவனப் பயிராகவும் காணப்படுகிறது, அதுமட்டும் இன்றி மலைப்பகுதியில் வாழும் மக்களின் அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களையும், நார்ச் சத்துக்களையும் வழங்குகிறது மற்றும் மருத்துவ குணமிக்க உணவாகவும் கேழ்வரகு திகழ்கிறது.

தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, வேலூர்  மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை ஒட்டியுள்ள மோட்ராகி, குந்துக்கோட்டை, துர்கம் போன்ற மலைகுக்கிராம பகுதியில் மானாவாரி கேழ்வரகு சாகுபடியில் பழங்கால விதை விதைப்பு முறையை பிரத்தியேகமாக செய்து வருகின்றார்கள். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் நாம் அறிந்தது மானாவரியில் நேரடி விதைப்பு முறை ஒன்று தான் ஆனால் அதற்க்கு மாற்றாக “கூர்க்கி” முறையை பெரும்பாலானோர்  இன்று வரையிலும் பயன்படுத்துகின்றனர்.

கூர்க்கி என்றால் சமமான இடைவெளியில் விதை  விதைப்பு. என பொருள். இந்த விதைப்பு முறை முழுவதும் பலுக்கு கலைப்பையின்  அடிப்படை பாகத்தோடு இணைந்ததே.

தேவைப்படும் பாகங்கள்:

  1. மூங்கில் குச்சி (2)
  2. நுகத்தடி
  3. (3-5) துளையுடன் கூடிய மரச்சட்டம்
  4. 2 பலுக்கு சிறிய கலப்பை
  5. கைப்பிடி
  6. 6. மூங்கில் அல்லது இரும்பு விதைக் குழாய் (4-6)

பயன்படுத்தும் முறை:

விதைக்கும் கருவியில் ஒரு மரச்சட்டத்தில் 3 முதல் 6 கொழு முனைகள் இணைக்கப்பட்டிருக்கும். இக்கொழுமுனைகள் விதைப்பதற்கு ஏற்றவாறு சால்களை அமைக்கின்றன. கொழுமுனைகளுக்கு அருகில் துளைகள் இருக்கும். இத்துளைகளில், மூங்கில் அல்லது இரும்பாலான சிறு விதைக் குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். இச்சிறு விதைக் குழாய்கள் மேல் பகுதியில் ஒரு மரத்தாலான விதைக் கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். விதைக்குங்கருவிக்கு பின் நடந்து வரும், திறமை பெற்ற தொழிலாளி, ஒரே சீராக விதையையும்  அடியுரத்தை  சேர்த்து, விதைக் கலனுள் போட்டுக் கொண்டே வருவார்.

இவ்விதைப்பு முறையில் ஏற்படும் சவால்கள் மற்றும் சரிசெய்யும் வழிமுறைகள்:

  1. இவ்விதைப்பு முறையை பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த நபர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். விதை போடும் நபர் சீராக விதையை போடாவிடில், விதை முளைப்பு கொத்து கொத்தாக ஒரே இடத்தில் வந்துவிடும்.
  2. அதன் பின்னர் பயிர் களைதல் மிகவும் சிரமமான விஷயம்
  3. விதை விதைத்தது மட்டும் இல்லாமல் இரண்டு முறை பலுக்கு குறுக்கும் நெடுக்குமாக ஓட்ட வேண்டும் இல்லையெனில் பயிர் வளர்ச்சி அடையாது. பயிர் அடர்த்தி அதிகமாக இருப்பின் வளர்ச்சி குன்றிவிடும்.
  4. பலுக்கு 15 நாட்களுக்குள் ஒட்டி விடவேண்டும்.
  5. இவ்வாறாக அனுபவம் வாய்ந்த தொழிலாளியை வைத்து நேர்பட சரியான நேரத்தில் செய்தால், ஏற்படும் சவாலை வெல்லலாம்.

விதைப்பு முறையின் நன்மைகள்:

  1. விதை: விதையளவு ஏக்கருக்கு 2-3 கிலோ மட்டும் தேவைப்படுகிறது. மற்ற விதைப்பு முறை காட்டிலும் 10 கிலோ சேமிக்கிறது .
  2. உர நிர்வாகம்: முதலில் விதையோடு கலந்து விதைத்த அடியுரம் மட்டுமே போதுமானது.
  3. களை நிர்வாகம்: விதைத்த 15, 30 ஆம் நாட்களில் ஒரு முறை மட்டும் எடுத்தால் போதுமானது.
  4. வேலை பளு மிக குறைவு
  5. மகசூல்: பாசனமுறைமற்றும் மழைக்கு தகுந்தாற் போல் ஏக்கருக்கு 15-20 மூட்டை கிடைக்கிறது.

விவசாயத்தில் நாள்தோறும் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுதினால் மட்டும் வளர்ச்சியை எட்டி விட முடியாது. அந்த தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துபவர்கள் மட்டுமே விவசாயத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைகிறார்கள். வளர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் இதுபோன்ற பழங்கால விதைப்பு முறையை அனைவரும் பயன்படுத்தினால், மானாவாரி சாகுபடியில் ஒரு புரட்சி கண்டிப்பாக ஏற்படுத்த முடியும். மாறிவரும் இந்த சூழ்நிலையில், சிறு தானியங்களின் பயன்பாடு அதிகரிக்கும் வேலையில், தண்ணீர் பற்றாக்குறை காணக்கூடிய நிலையில், விவசாயிகள் சற்று சிந்தித்தால் கண்டிப்பாக பாசானவசதி வைத்தோர் மட்டுமின்றி அனைவரும் இந்த மானாவாரி உழவு முறையில் அதிக மகசூல் பெறலாம் என்பதில் ஐயமில்லை. பழங்கால உழவுமுறைக்கும்  உயிரூட்டுவோம் .

கட்டுரையாளர்:

திரு. து. சத்தியராஜ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர், பயிர் சூலாக்கவியல் மற்றும் மரபியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: sathyarajagri17@gmail.com

தொலைபேசி எண்: 8667072033.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news