Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-10)

சிலிர்க்காத சிரப்புஞ்சி
என் தேவைக்கு இந்த உலகில் எல்லாம் உண்டு என் பேராசைக்குத் தான் இந்த உலகம் போதவில்லை என்பார் அண்ணல் காந்தியடிகள். அப்படி நம் பேராசையினால் அதிகம் இருந்தும் போதாமல் போனவை ஏராளம். அதன் வரிசையில் ஒன்றுதான் சிரப்புஞ்சி. 1974 ஆம் ஆண்டு உலகிலேயே அதிகமான மழை பொழிவான 24555 மில்லி மீட்டர் மழை பதிவானது சிரபுஞ்சியில் எப்படி, ஒவ்வொரு முறையும் தன் சாதனைகளை தானே முறியடிப்பாரோ சச்சின். அப்படித்தான் 1861 ம் ஆண்டு பெய்த 22987 மில்லி மீட்டர் மழையை விட அதிகமாக அன்று பெய்தது. சிரப்புஞ்சி இருக்கும் மாநிலத்தின் பெயர் மேகாலயா. இந்தியில் மேகங்களின் வீடு என்பது இதன் பொருளாகும். இப்படிப்பட்ட நீர் ஆதாரம் அதிகம் இருக்கும் இடத்தில்தான் குளிர்காலத்தில் குறிப்பாய் நவம்பர், மார்ச் போன்ற மாதங்களில் தண்ணீர் பஞ்சம் அங்கே நிலவுகிறது என்றால் நம்மால் நிச்சயம் நம்பத்தான் முடியாது ஆனால் அதுதான் உண்மை.
1974இல் பொழிந்த 24555 மில்லிமீட்டர், அவ்வளவு மழை பொழிந்த இடத்தின் தற்பொழுது சராசரி எவ்வளவு தெரியுமா வெறும் 8000 மில்லி மீட்டர் முதல் 9000 மில்லி மீட்டர் தான் இது 1970 மழைப் பொழிவில் மூன்றில் ஒரு பங்காகும். அதிகபட்ச மழை அளவாக 11430 மில்லிமீட்டர் தான். இது 1974 மழைப்பொழிவில் பாதிக்கும் குறைவு. இதனால் உலகில் முதல் அதிக மழை பொழியும் இடம் என்ற சிறப்பைப் பெற்ற சிரப்புஞ்சி இரண்டாம் இடத்திற்கு நகர்ந்து விட்டது. முதலிடத்தில் சிரப்புஞ்சியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மவுஸின்ராம் எனும் பகுதி தான் இருக்கிறது. ஆனால் அதனுடைய மழைப் பொழிவும் 11787 மில்லிமீட்டர். இதுவும் இதற்கு முன்பு சிரப்புஞ்சியில் பெய்த மழையின் பாதி அளவுதான் என்பது வருத்தத்திற்குரியது .
இப்படி மழைபெய்த அதிக நீராதாரம் கொண்ட சிரப்புஞ்சியில் ஏன் இன்று நீருக்கு பெரும்பாடு படுகிறது. இப்படிப்பட்ட நிலைக்கு என்னதான் காரணம்? சிரப்புஞ்சி மலைகள் அதிகம் சூழ்ந்த காட்டுப் பகுதி. எனவே இது ஒரு சுற்றுலாத் தலமாக உருவானது. இதற்கான கட்டுமானம் குடியேற்றம் என அங்கிருந்த காட்டுப்பகுதி பெரிதும் சூரையாடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தோராயமாக 640 மில்லியன் டன் நிலக்கரியும் 5000 மில்லியன் டன் சுண்ணாம்பு கல்லும் இப்பகுதியில் இருப்பதால் அவை சிமெண்ட் தொழிற்சாலைகள் தொடங்க ஏதுவாக இருந்தன. இதனாலும் குடியேற்றம் அதிகரித்திருக்கின்றன எவ்வாறு என்றால் 1961இல் வெறும் ஏழாயிரம் ஆக இருந்த இந்த கிராமத்தின் மக்கள் தொகை வெறும் 60 வருடத்தில் பத்து மடங்கிற்கும் மேலாக கூடிவிட்டது. ஆனால் காடுகள் அழிக்கப் பட்டதாலும், நீர் தேக்கத்திற்கான அமைப்புகளாகிய குளம், ஏரி இல்லாததால் பெயும் மழை நீரும் அருகில் உள்ள வங்காளதேசத்தின் சமவெளிகளுக்குச் சென்று விடுகின்றது.
இங்கு இருக்கும் பொது சுகாதாரத் துறையும் வெறும் 15 லிருந்து 20 ஆயிரம் பேருக்குத் தான் தினமும் தண்ணீர் வழங்க முடியும் என்று கைகளைப் பிசைகின்றது. மீதமுள்ள மக்கள் 10 கிலோ மீட்டருக்கு அடுத்துள்ள சமவெளிகளில் இருக்கும் ஓடைகளில் தான் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். ஓர் அறிக்கையில் “அம்மக்கள் தன் வாழ்நாளில் பெரும் நேரத்தை தண்ணீருக்காக செலவு செய்கின்றனர்” என்று குறிப்பிடுகின்றன. அப்படி இல்லை எனில் ஆயிரம் லிட்டர் நீருக்கு 300 ரூபாய் அவர்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். இதனால் துவைப்பதற்கும் குளிப்பதற்கும் இன்ன பிற தேவைகளுக்கும் மக்கள் அங்கேயே சென்று அந்த செயல்களை செய்து விடுகின்றனர். மீதம் அவர்கள் கொண்டு வரும் அத்தனை நீரும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிலும் ஒருவர் கூறுகிறார் “மழைநீர் சேகரிப்பு பற்றி நாங்கள் இதுவரை அறிந்ததே இல்லை, ஏனெனில் எங்களுக்கு தேவை இல்லை என்று நினைத்திருந்தோம். ஆனால் இனி அதுதான் எங்களுக்கு பயனளிக்கும் போலும்” என்று கூறுகிறார். இது மட்டும் இன்றி தட்பவெட்ப சூழல் காரணமாக அவ்விடத்தின் வெப்ப நிலையும் 1இல் இருந்து 2°c உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இப்படி உலகின் அதிக மழை பொழியும் இடத்திற்கே இந்த நிலை என்றால் நமக்கெல்லாம்……….
-தொடரும்….

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news