இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய பக்ஹார்ன் பழ சாகுபடி

0
425

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (Defence Research and Development Organisation) இணைந்து இமாச்சல பிரதேச பெண்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மதிப்புக்கூட்டு முறைகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய மதிப்புக்கூட்டு முறை வாயிலாக அங்கு சாகுபடி செய்யப்படும் கடல் பக்ஹார்ன் சாகுபடி வாயிலாக வருடம் முழுவதும் வருமானம் பெறும் வகையில் மதிப்புக்கூட்டிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு அங்கு மிகவும் பிரபலமான குளிர்பானம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய இப்புதிய மதிப்புக்கூட்டு முறை காரணமாக ஆண்டு முழுவதம் கடல் பக்ஹார்ன் சாகுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு வருடத்திற்கு ஆறு மாத காலம் மட்டுமே சாகுபடி என்ற நிலை மாறி, தற்போது வருடம் முழுவதும் விற்பனை செய்யப்படுவதால் பெண்களுக்கு ஒரு புதிய வளங்குன்றா வாழ்வுரிமைக்கான வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்டிட்டி பள்ளத்தாக்கு பகுதிகளில் காட்டு புதர்கள் போன்று வளர்ந்த கடல் பக்ஹார்ன் இன்று இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்விற்கான உலக வாசலை திறந்து விட்டுள்ளது. முன்பு கடல் பக்ஹார்ன் பாரம்பரிய மருத்துவர்களால் மூலிகைகளாக பயன்படுத்தும் வழக்கம் காணப்பட்டாலும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்பாடுகள் சக்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோய்களை கட்டுப்படுத்துவதால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிகளவு விற்பனை வாய்ப்புகளை பெற்றுள்ளது. நமது நாட்டின் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் பிரிவான அதிக உயர ஆராய்ச்சிக்கான பாதுகாப்பு  ஆராய்ச்சி (Defence Institute of High Attitude Research) வாயிலாக மேற்கொள்ளப்பட்டு விஞ்ஞான புதுமைகள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சிகளின் பயனாக உருவாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் அழுத்த நோய்களுக்கான தொழில்நுட்பங்கள் இமாச்சல பிரதேச பெண்கள் வாழ்வில் பொருளாதார அதிகாரம் பெற வழிவகை செய்துள்ளது.

கடந்த பத்து வருடங்களில் கடல் பக்ஹார்ன் பழங்கள் அறுவடை இரண்டு மடங்காகவும் அவற்றின் மூலம் பெறும் வருமானம் நான்கு மடங்கும் உயர்ந்துள்ளது. மேலும் இவற்றின் காய்ந்த இலைகள் கூட சந்தையில் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு இமாச்சல பிரதேச பெண்கள் கடல் பக்ஹார்ன் பழங்கள் விற்பனை, குளிர்பான விற்பனை, காய்ந்த இலைகள் விற்பனை வாயிலாக வருடம் முழுவதும் தொடர்ச்சியான வருமானத்தை பெறவும் இயற்கை சீதோஷ்ண சூழலை சமாளித்து அதிக லாபம் பெறவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் உயர் ஆராய்ச்சி அமைப்புகள் பெரிதும் உதவியுள்ளதே காரணம்.

இதன் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள வளங்களைக் கொண்டு ஆய்வுகள் வாயிலாக புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருவதன் மூலமாக நம்மால் நம்முடைய இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன் நமது கிராமப்புற சமுதாய மக்களின் வாழ்வுரிமை நலன்களையும் பாதுகாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here