fbpx
Skip to content

“தென்மேற்கு பருவமழையும் விவசாயமும்”

தென்மேற்கு பருவமழை என்பது தெற்கே அல்லது தெற்கு திசையிலிருந்து அதிவேகமாக வீசப்படும் காற்றினால், கோடைகாலத்தின் முடிவில் தெற்காசிய பகுதியான இந்தியாவில் அதிக மழையைப் பொழிவதகும். இந்தியப் பெருங்கடலின் கரையோரங்களில் குறிப்பாக அரேபியக் கடலில் காற்றின் திசையை பருவ காலமாக மாற்றி மழைப் பொழிவதை தென்மேற்கு பருவமழை என்று இந்திய வானிலை ஆய்வு துறை (Indian Meteorological Department) குறிப்பிடுகிறது.

காற்று வீசும் திசையை பொருத்தும், இந்திய பெருங்கடலில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவும், பருவமழை யானது

1.தென்மேற்கு பருவமழை (june – sep)

2.வடகிழக்கு பருவமழை(oct-dec) என்று வகைப்படுத்தப்படுகிறது. தென்மேற்கு பருவமழையானது ஜூன் 1-ஆம் தேதியன்று கேரளத்தில் தொடங்கும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பருவமழையை ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் 7 நாட்கள் பின்னடைவில் ஜூன் 8ஆம் தேதி தொடங்கி யுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, மே 29ஆம் தேதியன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவ காலநிலை மாற்றங்களால் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு ஆண்டுகளில் சரியாக மழை பொழியவில்லை. இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி அன்று தொடங்கியுள்ளதால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரையில் இந்தியாவிற்கு 80 முதல் 90 % வரை அதிகமான மழையை தருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் குறைந்த பட்சமாக  32% மட்டுமே மழை பொழிகிறது. எனவே இந்த இரண்டு பருவ மழையை ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு அதிகப்படியான மழையை தென்மேற்கு பருவமழையும் தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழையை வடகிழக்கு பருவமழையும் தருகிறது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

 

இந்திய வானிலை ஆய்வுத் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப கீழ்கண்ட வண்ணங்கள் சார்ந்த வானிலை எச்சரிக்கைகளை விடுகின்றது.

  1. தேசிய வானிலை எச்சரிக்கைகளில் ஒரு மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் அந்த மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும் என்பதல்ல. மாநிலத்தில் குறிப்பாக எந்த இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்பதை மண்டல மற்றும் மாநில அறிக்கைகளில் கூறப்படும் .

 

  1. எனவே தேசிய வானிலை அறிக்கையில் சிவப்பு எச்சரிக்கை இருந்தால் மாநிலத்திற்கே எச்சரிக்கை என்று அச்சப்பட தேவையில்லை

தற்போதைய சூழலில் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை, இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் வேளாண் அமைச்சகம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. அதை பின்வருமாறு காணலாம்.

  1. காவிரி டெல்டா மண்டலத்தில், நெற்பயிர் நாற்றுக்களை தாக்கும் இலைப்பேன்களை கட்டுப்படுத்த தயாமெதோக்ஸாம் (Thiamethoxam 25WG) பூச்சிக் கொல்லியை ஒரு ஏக்கருக்கு 40 கிராம் என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.
  2. மேற்கு மண்டலத்தில் தக்காளி, நாற்றுகளை உயர்த்தப்பட்ட நாற்றங்கால் படுக்கைகளில் (Raised bed nursery) விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் நோய்களையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். (விதை நேர்த்தி: டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம்/கிலோ அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம்/ கிலோ என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.)
  3. தெற்கு மண்டலத்தில், குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழையால் நிகழும் வானிலை மாற்றங்கள் காரணமாக பயிர்களில் இலை பிணைக்கும் புழு (leaf webber) பரவலாக காணப்படும். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு லிட்டருக்கு 3 மி.லி. என்ற விகிதத்தில் வேப்ப எண்ணையை தெளிப்பதன் மூலம் இலை பிணைக்கும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
  4.  ஊட்டி போன்ற உயர்ந்த குளிர் மண்டலங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் உருளைக் கிழங்கு சாகுபடியில் அதிகமாக நோய் தாக்கம் ஏற்படும். இதனை கட்டுப்படுத்தும் வகையில் நோயெதிர்ப்பு உருளைக்கிழங்கு வகையான குஃப்ரி கிர்தாரி (Kufri Giridhari) பயிரிடுவதன் மூலம் நல்ல மகசூலையும் பெற முடியும் என்று தேசிய வேளாண் ஆலோசனை சேவை மையம் ( National Agromet Advisory Service) தெரிவித்துள்ளது.

கட்டுரையாளர்:

1. சு. கீர்த்தனா,  உதவிப் பேராசிரியர், உழவியல் துறை, அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அத்திமுகம், கிருஷ்ணகிரி. மின்னஞ்சல்: keerthu.agri24@gmail.com

2. மூ. சத்தியசிவாநந்தமூர்த்தி, உதவிப் பேராசிரியர், தாவர நோயியல் துறை, RVS வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூர். மின்னஞ்சல்: kailasanathajsr@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

editor news