Skip to content

தேனீ வளர்ப்பு பகுதி – 5

தேனீ கூடுகளைக் கையாளுதல் மற்றும் பராமரித்தல்

தேனீ வளர்ப்பின் வெற்றியானது பின்வரும் மூன்று முக்கியமான விஷயங்களில் உள்ளது:

 1. நல்ல தேனீ வளர்ப்புத் தளம்.
 2. நல்ல தேனீ.
 3. 3. சரியான மேலாண்மை.

. நல்ல தேனீ வளர்ப்பு தளத்தின் தேர்வு:

 • தேனீ வளர்ப்புத் தளமானது பெரும்பாலும் நிறைய பூ பூக்கும் தாவரங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும், இது ஆண்டு முழுவதும் தேவையான உணவினை வழங்கக்கூடிய பகுதியாக இருக்க வேண்டும். 20 கிலோ தேன் சேகரிக்க, ஒரு கூடுக்கு 100 பூக்கும் மரங்கள் அல்லது 2-4 ஏக்கர் பயிரிடப்பட்ட பூக்கும் தாவரம் தேவை.
 • தேனீ வளர்ப்புத் தளத்தை எளிதில் அடையும்படி மற்றும் ஓடும் நீர் ஆதாரம் நிறைந்த்தாகவும் இருத்தல் வேண்டும்.
 • தேனீக்களை வலுவான மற்றும் குளிர்ந்த காற்றிலிருந்து பாதுகாக்க தளத்தை சுற்றி இயற்கை அல்லது செயற்கை காற்று வேலிகள் அமைத்தல் வேண்டும்.
 • தளமானது காலை மற்றும் பிற்பகல் சூரிய ஒளியைப் பெறும் வகையில் இருத்தல் வேண்டும். கோடைகாலங்களில் செயற்கை கட்டமைப்புகள் அல்லது மரங்களின் மூலம் நிழலைப் பெறும்படி அமைக்க வேண்டும்.

ஆ. நல்ல தேனீயின் தேர்வு:

நாட்டின் கால நிலைகளுக்கு ஏற்றவாறு செயற்கைத் தேனீ வளர்க்கப்பானது முக்கியமான இரண்டு தேனீ இனங்களில் மேற்கொள்ளபடுகிறது. இருப்பினும், குளிர்ந்த பகுதிகளில் எ.கா. உயர்ந்த மலைகளில், ஏ. செரானா (A. cerana indica) ஆனது   ஏ. மெல்லிஃபெராவை (A. mellifera) விட சிறப்பாக செயல்படுகிறது. மேலும் இந்த தேனீ, தேனீ மூலம் அதிகம் இல்லாத பகுதிகளில் கூட நன்றாக செயல்படுகிறது. தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஏ. செரனாவை பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் இதற்கு குறைந்த முதலீடு தேவைப்படுகிறது.

தேனீ வளர்ப்பின் வெற்றி என்பது தேனீக்களின் பழக்கவழக்கங்கள் பற்றிய சரியான புரிதலையும் அதற்கேற்ப கூடுகளை கையாளுவதையும் பொறுத்தது ஆகும்.

 

. தேனீ கூடுகளைக் கையாளுதல்:

தேனீகூடுகளை ஆய்வு செய்வது என்பது நவீன தேனீ வளர்ப்பில், ஒரு முக்கிய அம்சமாகும். ஆனால், தேனீ கூடுகளைப் பரிசோதிப்பது பற்றி நாம் பேசும்போதெல்லாம், தேனீக்களின் கொட்டுப் பற்றிய பயம் பொதுவாக இருக்கிறது. தேனீக்களின் பழக்கவழக்கங்கள் பற்றி நாம் அறிந்திருந்தால், கொட்டுவதைத் தடுக்க முடியும் என்பதை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். தேனீக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக மட்டுமே கொட்டுகின்றன மற்றும் கொட்டிய பின்பு அவை இறந்துவிடுகின்றன. கூடுகளை ஆய்வு செய்வதற்கு முன்னர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டால், தேனீக்கள் கொட்டுவதைத் தவிர்க்கலாம்.

தேனீ கூடுகளை ஆய்வு செய்யும் நோக்கம்:

ஒரு தேனீ கூட்டின் வாழ்க்கை சுழற்சி ஒரு வருடத்தில் வெவ்வேறு காலங்களில் மாறுபடுவதால், தேனீயின் வேலையைச் சரிபார்க்கவும், அதன் தேவைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தீர்மானிக்கவும் தேனீ கூடுகள் ஆராயப்படுகின்றன. ஒரு தேனீ கூடு திறக்கப்படும் போது, பின்வருவனவற்றை கவனிக்க வேண்டும்.

 • ஒரு தேனீ கூடுக்கு போதுமான உணவு இருக்கிறதா அல்லது அதற்கு செயற்கை உணவு தேவையா என்பது. ஒவ்வொரு கூடும், அதன் வலிமையைப் பொறுத்து, எல்லா நேரத்திலும் குறைந்தது 2-5 கிலோ உணவு இருப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
 • ராணி தேனீ இருக்கிறதா இல்லையா? இருந்தால் திருப்திகரமாக வேலை செய்கிறதா? ராணி இல்லாத கூட்டுக்கு ஒரு புதிய ராணித் தேனீயை இடமாற்றம் செய்ய வேண்டும்.
 • ராணியால் முட்டையிடுவதற்கும், தேன் சேமித்து வைப்பதற்கும் போதுமான அடைகள் உள்ளதா இல்லையா. இல்லையெனில் புதியனவற்றை வைக்க வேண்டும்.
 • கூட்டில் எதிரிகள் அல்லது நோய்கள் ஏதேனும் உள்ளதா. ஆம் எனில், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

பொதுவாக தேனீக்களுக்கு குறுக்கீடு அதிகம் பிடிக்காது, ஏனெனில் அது தேனீக்களின் சாதாரண வேலையை பாதிக்கும் என்பதால். எனவே, கூடுகளை முடிந்தவரை தொந்தரவு செய்யாமல் இருத்தல் வேண்டும். அடை கட்டும் காலகட்டத்தில் வாரத்திற்கு ஒரு முறை, அதே சமயம் கோடைகாலங்களில் மாதம் இருமுறை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.

தற்காப்பு நடவடிக்கைகள்:

 • தேனீ கூடுகளைக் கையாளும் முன் பாதுகாப்பு உடை அணிவது நல்லது.
 • தேனீக்களை கொட்டுவதற்கு தூண்டும் எந்த வகையான வாசனை திரவியங்கள் அல்லது வலுவான மணம் கொண்ட முடி எண்ணெய்கள் அல்லது மோதிரம், வாட்ச் போன்ற உலோகங்கள் கருப்பு அல்லது இருண்ட ஆடைகளை, தேனீக்களைக் கையாளும் போது தவிர்க்கப்பட வேண்டும்.
 • தேனீக்களைக் கையாளும் போது நடுக்கம், வேகம், உதறல் மற்றும் தேனீக்களை நசுக்கல்களைத் தவிர்க்க வேண்டும்.
 • ஒரு தேனீ கொட்டினால் பதட்டப்பட வேண்டாம். நகத்தால் மெதுவாக முள்ளினை வெளியே இழுக்கவும் மற்றும் அலாரம் பெரோமோனின் வாசனையை மறைக்க கொட்டிய பகுதியில் சில புற்களைத் தேய்க்கவும், இல்லையெனில் மற்ற தேனீக்கள் அந்த பகுதியில் கொட்ட நேரிடும்.
 • ராணியைப் பற்றி கவனமாக இருங்கள், அதை நசுக்குவதைத் தவிர்க்கவும்.
 • காற்று வேகமாக வீசும் போதோ மற்றும் குளிர்ந்த நேரங்களில் அல்லது தேனீக்கள் கூட்டினுள் இருக்கும் காலகட்டத்தில் கூடு திறக்கப்படக்கூடாது.

 

…..தொடரும்

 

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

editor news

error: Content is protected !!