கால்நடை தீவனத்தில் யூரியாவின் பயன்பாடு

0
887

விவசாயத்தில் பயிர்களுக்கு உரமாகப் பயன்படும் யூரியாவில் 46 சதவிகிதம் தழைச்சத்து உள்ளது. இந்த யூரியா உரத்தினை பயிர்களுக்கு இடுவதுடன் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் கலந்து பக்குவப்படுத்திக் கொடுக்கும் போது கால்நடைகளுக்கு புரதச்சத்து கூடுதலாக கிடைக்கிறது.

அடர்தீவனத்துடன் யூரியாவை கலந்து கொடுத்தல்:

கால்நடைகளுக்கு வழங்கப்படும் அடர்தீவனத்துடன் 3 சதவிகிதம் வரை யூரியாவை கலந்து கொடுத்தால் புரதச்சத்து அளவு கூடும். இந்தக் கலவையை ஆறு மாதத்திற்கு குறைவான வயதுடைய  கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனென்றால், சோயாவில் உள்ள யூரியேஸ் என்ற நொதியுடன் யூரியா கலந்தால் அவை அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு தீங்கினை விளைவிக்கும்.

வெல்லப்பாகுடன் யூரியாவை கலந்து கொடுத்தல்:

திரவ வெல்லப்பாகுடன் யூரியா தாதுக்கள் மற்றும் வைட்டமின்களையும்  கலந்து கொடுக்கலாம். இதற்கு 92 பங்கு வெல்லப்பாகு கரைசல் தயார் செய்து  அதனுடன் 2.5 பங்கு யூரியா,  2.5 பங்கு தண்ணீர், 2 பங்கு தாதுக்கலவை மற்றும்  1 பங்கு சாதாரண உப்பு கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வெல்லப்பாகுடன் யூரியாவை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்கும் போது குறைந்தது 15 நாட்களாவது அவகாசக் காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது முதல் மூன்று நாட்களுக்கு 1/4 பங்கு அடர்தீவனத்திற்கு பதிலாக 500 மி.லி யூரியா வெல்லப்பாகு கலவை கொடுக்க வேண்டும்.

அடுத்த மூன்று நாட்களுக்கு 1/2 பங்கு அடர்தீவனத்திற்கு பதிலாக யூரியா வெல்லப்பாகு கலவை கொடுக்க வேண்டும். ஏழாவது நாளிலிருந்து அடர்தீவனத்திற்கு பதிலாக யூரியா வெல்லப்பாகு கலவையை மட்டும் கொடுக்கலாம். யூரியா கலந்த தீவனத்தை கால்நடைகளுக்கு கொடுக்கும் போது நல்ல குடிநீரை அதிக அளவில் கொடுக்க வேண்டும்.

யூரியா ஊறுகாய்ப்புல் கலவை:

பால் கறக்கும் பசுக்களுக்கு ஊறுகாய்ப்புல் கொடுக்கும் போது அத்துடன் யூரியாவை கலந்து கொடுக்கலாம். இதற்கு யூரியாவை 0.5 சதவிகிதம் அளவிற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் ஊறுகாய்ப்புல்லின்  புரதச் சத்து அளவும் கூடுகிறது.

ஊட்டமேற்றிய வைக்கோல்:

 யூரியாவை வைக்கோலுடன் கலந்து ஊட்டமேற்றிய வைக்கோலாக வழங்குவதால் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்தினை வைக்கோல் மூலம் பெற முடிகிறது. அதாவது 100 கிலோ வைக்கோலுக்கு 50 லிட்டர் தண்ணீரில் 4 கிலோ யூரியாவை கரைத்து அதனை வைக்கோலின் மேல் தெளித்து தார்ப்பாய் அல்லது சாதாரண வைக்கோல் கொண்டு வெளிக்காற்று உள்ளே போகாமல் 3 வாரங்களுக்கு மூடி வைக்க வேண்டும். மூன்று வாரத்திற்குப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பசுந்தீவன கலவையுடன் தேவையான அளவு ஊட்டமேற்றிய வைக்கோல் துண்டுகளையும் கலந்து கொடுத்தால் கறவை மாடுகள் விரும்பி சாப்பிடும், பால் உற்பத்தியும் அதிகரிக்கும்.

ஊட்டமேற்றிய வைக்கோல் கொடுக்க வேண்டிய அளவு:

பால் கறக்கும் பசுக்களுக்கு பசுந்தீவனத்துடன் 4 முதல் 5 கிலோ ஊட்டமேற்றிய வைக்கோல் கொடுக்கலாம். இதனால் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 லிட்டர் கூடுதலாக கிடைக்கும்.

யூரியா கலந்த தீவனத்தை பயன்படுத்தும்  அளவு:

  1. பால் கறக்கும் பசுக்களுக்கு (20 லிட்டரை விட குறைவான அளவு) பால் கறக்கும் போது அடர்தீவனத்தில் 2 சதவிகிதம் வரை யூரியா சேர்த்துக் கொள்ளலாம்.
  2. 20 லிட்டரை விட அதிகமாக பால் கறக்கும் பசுக்களுக்கு யூரியா கலந்து கொடுக்கத் தேவையில்லை.

யூரியாவை தீவனத்துடன் கலக்கும் போது கவனிக்க வேண்டியவை:

  1. யூரியாவை தீவனத்துடன் நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
  2. யூரியாவை படிப்படியாக சேர்த்து கொள்ள வேண்டும்.

3.யூரியாவுடன் தேவையான அளவு தாதுக்கள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றையும் கலந்து கொடுக்க வேண்டும்.

4.யூரியா கலந்த தீவனத்தை 6 மாதத்திற்கு குறைவான வயதுடைய இளங்கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது.

5.யூரியா கலக்கும் போது மொத்தமாக கலக்காமல் படிப்படியாக கலக்க வேண்டும்.

6.யூரியா கலந்த தீவனத்தை பன்றி, குதிரை போன்ற ஒரு வயிறுள்ள கால்நடைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

யூரியா நச்சுத்தன்மை ஏற்படாமல் தடுக்கும் வழிகள்:

  1. 1. யூரியாவை தீவனத்துடன் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும்.
  2. 2. யூரியாவை கலந்த பின்னர் போதிய அவகாச காலம் கொடுத்து பின்னர் தீவனமாக பயன்படுத்த வேண்டும்.
  3. நல்ல குடிநீரை அதிகமான அளவில் கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.
  4. நல்ல தரமான உலர் தீவனங்களை பயன்படுத்த வேண்டும்.

யூரியா நச்சுத்தன்மையின் அறிகுறிகள்:

          அதிகப்படியான உமிழ்நீர் சுரத்தல், தள்ளாடுதல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல், தசை வலிப்பு.

எளிய சிகிச்சை முறை:

          யூரியா நச்சுத்தன்மை அறிகுறி தென்பட்டால் 20 முதல் 40 லிட்டர் நல்ல குளிர்ந்த நீரை கொடுக்க வேண்டும்.

யூரியாவை தீவனத்துடன் கலப்பதன் பயன்கள்:

          யூரியாவை தீவனத்துடன் 3 சதவிகிதம் வரை கலந்து கொடுக்கும் போது புரதச்சத்தின் அளவு 12 முதல் 14 சதவிகிதம் வரை கூடுதலாகி கால்நடைகளுக்கு பயன்படுகிறது.

எனவே யூரியாவை பல்வேறு முறைகளில் பக்குவப்படுத்தி கால்நடைகளுக்கு வழங்கும் போது கால்நடை தீவனத்தில் புரதச்சத்து அளவு கூடுவதுடன் பால் உற்பத்தியும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கட்டுரையாளர்கள்:

1ஜெ.சுபாஷினி, 2சௌ.சபிதா, 3வை.ஹரிஹரசுதன் மற்றும் 4இரா.வினோத்

1,3,4 உதவிப் பயிற்றுனர், வேளாண்மைக் கல்வி நிறுவனம், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், குமுளூர், திருச்சி.

2கால்நடை உதவி மருத்துவர், கால்நடை மருந்தகம், சத்தியமங்கலம், புதுக்கோட்டை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here