fbpx
Skip to content

மாடித் தோட்டமும் கொரோனாவும்

மாடித் தோட்டமும் கொரோனாவும்

கொரோனா தொற்று பரவிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில்,  அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை வாங்குவதற்காக அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். இந்த கொரோனாவின் அச்சத்தைத் தவிர்க்க, சத்தான தரம் வாய்ந்த உணவுப் பொருட்களை வீட்டிலே விளைவிப்பதே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது ஆகும். கிராமங்களில் வயல்வெளி, வீட்டுத் தோட்டம் போன்ற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நகரங்களிலோ இட நெருக்கடியால் மாடித் தோட்டமே சிறந்த முறையாகும்.

மாடித் தோட்டப் பயிர்களை குறைந்த அளவில் எந்த பருவத்திலும் வளர்க்கலாம். எனினும் காய்கறிகளுக்கு ஜூன் – ஜூலை மற்றும் டிசம்பர் – ஜனவரி பருவங்களே சிறந்தவை. கீரைகளை ஆண்டு முழுவதுவும் குளிர் பருவ காய்கறிகளான கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை அக்டோபர் – ஜனவரி மாதங்களிலும் வளர்க்கலாம். பயிருக்கு ஏற்ற வளர்ப்புத் தொட்டிகளை அல்லது பைகளை தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் காய்கறிகளை 10 – 20 லிட்டர் பைகளிலும் கொடி வகை காய்கறிகளை 30 – 40 லிட்டர் பைகளிலும் மற்றும் மர வகைகளை 100 – 200 லிட்டர் பைகளிலும் வளர்க்கவும். பைகளில் வளர் ஊடகமாக 1:1 விகித நிலையில் மண்புழு உரம் மற்றும் தென்னை நார்க் கழிவை பயன்படுத்துவதே சிறந்தது. இது எடை குறைவு மற்றும் நீண்ட நாட்கள் ஈரத்தை தாங்கும் தன்மை உடையது. அதனுடன் உயிரி இடுபொருட்களைச் சேர்த்துக் கொள்வதால் வளர் ஊடகம் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப் படுகிறது. பைகள் அல்லது வளர்ப்புத் தொட்டிகளிள் வடிகால் துளைகள் இட்டு அடியில் ஒரு அடுக்கு மணலும் அதன் மேல் வளர் ஊடகத்தை கொண்டு நிரப்பிக் கொள்ளவும்.

விதைப்பில் தக்காளி, மிளகாய், கத்தரி, காலிஃப்ளவர், முட்டைக் கோஸ், கேப்சிகம் போன்றவை நாற்று நடவுப் பயிர்கள், மற்ற காய்கறிகள் பெரும்பாலும் நேரடி விதைப்பு பயிர்கள். நாற்று நடவுப் பயிர்களுக்கு குழித்தட்டு நாற்றங்கால் கொண்டு நாற்று உற்பத்தி செய்து 25-30 நாள் நாற்றை வளர்ப்புப் பைக்கு மாற்றவும். நேரடி விதைப்பு பயிர் விதைகளை பைகளில் 1-2 அங்குல ஆழத்தில் போட்டு வளர் ஊடகம் கொண்டு மூடவும். பின்னர் பூவாளியைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் கொடுக்கவும்.  மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடிய துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி, இன்சுலின் செடி, சோற்றுக் காற்றாலை போன்ற மருத்துவச் செடிகளை வீட்டில் வளர்க்கலாம்.

நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நீரில் லிட்டருக்கு 3 கிராம் ட்ரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் கலந்து தெளிப்பதன் மூலம் வேர் அழுகல் போன்ற பல நோய்களைத் தவிர்க்கலாம். பூச்சிகளை விரட்ட வாரம் ஒரு முறை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்கவும். இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முறையே 25 கிராம் எடுத்து அரைத்து அந்த சாற்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப் படுத்தலாம். தாவரங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் புழுக்களை எளிதில் சேகரித்து அளித்து விடலாம். வீட்டுப் பயன்பாட்டிற்கு என்பதால் பெரும்பாலும் இரசாயண உரம் மற்றும் மருந்துகளை தவிர்த்து இயற்கை முறையையே பின்பற்றவும். மாடித் தோட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களைத் தனிமைப் படுத்துவதை போலவே பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட பைகளைத் தனிமைப் படுத்தி மற்றப் பயிர்களுக்கு பரவாமல் பாதுகாக்காலம். இவ்வாறு தனிமைப் படுத்துவதன் மூலம் கொரோனாவில் மட்டுமின்றி மாடித் தோட்டத்திலும் நோய் பரவுவதைத் தடுத்து வெற்றி காணுவதோடு நம் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை நாமே உற்பத்தி செய்து தன் நிறைவு அடைவதோடு வீட்டுச் செலவையும் வெகுவாக குறைக்கலாம். மேலும் வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் பொழுது போக்குவதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் உடல் ஆரோக்கியம் மற்றும் மன மகிழ்ச்சியையும் பெறலாம்.

கட்டுரையாளர்கள் :

திரு. . அரவிந்த்,

தொழில்நுட்ப திட்ட உதவியாளர் (வேளாண்மை),

தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம்-606301. மினன்னஞ்சல்: aravinth30attur@gmail.com

முனைவர் . பழனிசாமி

தொழில் நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை), தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம்-606301. மினன்னஞ்சல்: palanihort@gmail.com

Leave a Reply

Your email address will not be published.

nv-author-image

editor news