Skip to content

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும்

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், தென்னையைத் தாக்கி அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். தென்னையில் இதன் தாக்குதல் முதன் முதலாக 2004ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர நாடான பெலிஸ் நாட்டில் மார்ட்டின் என்ற விஞ்ஞானியால் கண்டறியப்பட்டது அதன் பின் 2009ம் ஆண்டில் அமெரிக்காவின் தென் பிளோரிடா மாகாணத்தில் தென்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டில் இப்புதிய வகைப் பூச்சிகளின் பாதிப்பு தென்னையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (குறிப்பாக தமிழக கேரளா எல்லையோர பகுதிகளில்) அதிகப்படியாக காணப்படுகிறது. தமிழகத்தின் பிறபகுதிகளான ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் இப்பூச்சிகளின் தாக்குதல் தென்படுகிறது.

வாழ்க்கை சுழற்சி

இச்சுருள் வெள்ளை ஈக்களின் வாழ்க்கை சுழற்சி மொத்தம் 30 நாட்கள் ஆகும் (வெட்பநிலை 27°C ல்). இவை மொத்தம் ஐந்து வளர்ச்சி நிலைகளை கொண்டது.

முட்டைப் பருவம்

பெண் வெள்ளை ஈக்கள் இலைகளின் கீழ்ப்பரப்பில், சுருள் சுருளான வடிவமைப்பில் முட்டைகளை இட்டு வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் அவற்றை மூடி விடுகின்றது. முட்டைகள் நீள் வட்ட வடிவத்தில் வெளிர் (அ) அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. இப்பெண் பூச்சிகள் தாவர இலை பரப்புகள் மட்டுமின்றி, வாகனங்கள் மற்றும் இதர பொருள்களின் மீதும் முட்டையிடும் தன்மையுடையது.

இளம் பருவம்/ கூட்டுப்புழு பருவம்

இப்பூச்சிகள் இளம்பருவம் இரண்டு நிலைகளை கொண்டது. முட்டையிலிருந்து வெளிவந்த முதல் நிலை இளம்பருவப் பூச்சிகள் நகரும் தன்மை கொண்டது. ஊசி போன்ற வாய் அமைப்பைக் கொண்ட இப்பூச்சிகள் இலைப் பகுதியிலிருந்து சாறை உறிஞ்சி உயிர்வாழ்கின்றன. ஆரம்பத்தில் நீள்வட்ட வடிவத்தில் தட்டையாக காணப்படும். இவை அடுத்த நிலையில் சற்றே உருண்டை வடிவில் உருமாறுகின்றன. இந்த இரண்டாம் நிலை இளம்பருவ பூச்சிகள் 1.1- 1.5 மி.மீ நீளத்தில் தங்கநிறத்தில் காணப்படும் இவை அடர்ந்த பஞ்சு போன்ற வெண்ணிற இழைகளை உருவாக்குகின்றன. இவற்றின் அடுத்த நிலையான கூட்டுப்புழு பருவத்தை கொண்டே இதன் சிற்றினத்தை அடையாளம் காண இயலும்.

முதிர்ந்த பருவம்

இறக்கைகளைக் கொண்ட ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் முதிர்ந்த பருவம், சாதாரண வெள்ளை ஈக்களைவிட மூன்று மடங்கு அளவில் பெரியது (25 மி.மீ). இவை சுறுசுறுப்பற்று மந்த நிலையில் காணப்படும். தாய்ப்பூச்சிகளின் இறக்கைகளில் ஒழுங்கற்ற (வடிவமற்ற) ஒரு ஜோடி பழுப்புப் பட்டைகள் காணப்படும். ஆண் பூச்சிகளின் உடலின் பின் நுனியில் இடுக்கி போன்ற அமைப்பினை காணலாம்.

தாக்குதலுக்கான அறிகுறிகள்

இலைகளின் கீழ் பரப்பில் சுருள் சுருளாக இப்பூச்சிகளின் முட்டைகள் காணப்படும். முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகுபோன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும். இவற்றின் உடலிலிருந்து சுரக்கும் ஒரு வகை தேன் போன்ற இனிப்பு திரவத்தினால், கரும்பூஞ்சணம் பெருமளவில் அதன்மேல் வளர்ந்து இலைப்பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால் ஒளிச் சேர்க்கை தடைப்பட்டு தென்னையின் காய்ப்புத்திறன் பாதிக்கப்படுகின்றது. இவற்றால் பாதிக்கப்பட்ட இலைகளில், இப்பூச்சிகள் சுரக்கும் இனிப்பு திரவத்திற்காகக் கூடும் எறும்புகளைக் காணலாம். இப்பூச்சிகளினால் இலைகளின் சாறு உறிஞ்சப்பட்டு, தென்னை இலைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டாலும், தென்னை முழுவதுமாக இறந்துவிடுவதில்லை.

 

தாக்கப்படும் பிற பயிர்கள் மற்றும் செடிகள்

இப்பூச்சிகள் நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றது.  இவற்றுள் தென்னையைத் தவிர மா, வாழை, கொய்யா, சப்போட்டா, வெண்டை, ஜாதிக்காய், காட்டாமணக்கு, சீதாப்பழம், எலுமிச்சை, மற்றும் செம்பருத்தி போன்ற செடி வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

 

ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்

  • ரூகோஸ் வெள்ளை ஈ பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் சேதாரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் ஒட்டு பொறிகள் ஏக்கருக்கு 7-10 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும் இவற்றை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைக்கலாம்.
  • இப்பூச்சிகளின் நடமாட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருப்பதால், விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு இரண்டு என்ற அளவில் அமைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இலைகளின் கீழ்ப்பகுதியில் காணப்படும் முட்டைகள் இளம் பருவம் மற்றும் முதிர்ந்த பூச்சிகளை விசைத்தெளிப்பான் கொண்டு தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சி அடிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • இப்பூச்சி தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்சாண வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் மைதா மாவுப் பசையை தண்ணீரில் கரைத்து தென்னை இலைகளின் மேல் பகுதி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகும் போது கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • 5% வேப்பங்கொட்டை கரைசல் /10% வேப்ப இலைக் கரைசல்/ 0.5% வேப்ப எண்ணெய் கரைசல் / 0.3% மீன் எண்ணெய் ரெசின் சோப்புக் கரைசல்/ 3% தசகவ்ய கரைசல்/ 3% மூலிகை பூச்சி விரட்டி கரைசல் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 3-5 கிராம்/மில்லி அளவில் ஐசேரியா ஃபியூமோஸோரோசே என்ற பூஞ்சணத்தை ஒட்டும் திரவத்துடன் 5 கிராம் /லிட்டர் நிர்மா பவுடர் அல்லது காதி சோப் கலந்து தெளிக்க வேண்டும்.
  • நன்மை செய்யும் பூச்சிகளை வயல் சூழலில் அதிகப்படுத்த உயிரியல் ஆய்வகங்களிலிருந்து நன்மை செய்யும் பூச்சிகளான பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகளின் முட்டைகள், இளம்பருவ பூச்சிகளை ஏக்கருக்கு 20,000 எண்ணிக்கை என்ற அளவில் வயலில் விட வேண்டும்.
  • இப்பூச்சிகளுக்கு எதிராக இயற்கையிலேயே காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகள், பொறி வண்டுகள் மற்றும் என்கார்சியா குளவிகள் முதலியவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
  • ரூகோஸ் வெள்ளை ஈக்களைத் தாக்கி அழிக்கும் என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகளின் கூட்டுப்புழு பருவத்தை சேகரித்து புதிதாக சுருள் வெள்ளை ஈ தாக்கப்பட்ட தோப்புகளில் விடுவதின் மூலம் இப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவு குழுவினால் (CIB&RC) பரிந்துரைக்கப்படாத ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் இயற்கை சூழலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து சமநிலை பாதிக்கப்பட்டு சுருள் வெள்ளை பூச்சியின் எண்ணிக்கை மற்றும் சேதம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கிறது.
  • வரைமுறையின்றி ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், ரூகோஸ் வெள்ளை ஈக்களுக்கு பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறன் (மறுஊக்ககுவிப்புத்திறன்) மற்றும் எஞ்சிய நஞ்சு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தென்னை வயல் சூழலில் இயற்கையாகவே அதிக அளவில் ரூகோஸ் வெள்ளை ஈக்களை தாக்கி அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள் ஒட்டுண்ணி குளவிகள் அதிகமாக காணப்படுகின்றன. அவை நாளடைவில் பெருகி ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரும் தன்மை கொண்டவை. இவ்வகை ஒட்டுண்ணி பூச்சிகளை ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளிக்காமல் பாதுகாப்பது விவசாயிகளின் முக்கிய கடமையாகும்.

மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் , திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தென்னை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சியான பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சிகளை அதிக அளவில் ஆய்வகத்தில் உற்பத்தி செய்து இலவசமாக வழங்கி வருகின்றது. மேலும், தென்னை ரூகோஸ் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு ஆலோசனைகளையும் இலவசமாக  வழங்கி வருகிறது.

 கட்டுரையாளர்கள்:

முனைவர். சி. ஞானசம்பந்தன் (உதவி இயக்குனர்), கோ.காளீஸ்வரன்  (தொழில் நுட்ப அலுவலர்), . அமுதா (உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர்)  மற்றும் முனைவர். . அய்யம்பெருமாள் (தொழில் நுட்ப அலுவலர்);  மத்திய ஒருங்கிணைத்த பயிர் பாதுகாப்பு மையம், மத்திய வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம், இந்திய அரசு, திருச்சிராப்பள்ளி. தொலைபேசி: 0431-2420190/ 2420970 மின்னஞ்சல்: ipmtn16@nic.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news