Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-6)

                                             மாமழை போற்றுதும்!

நிலத்தினை ஐந்தினையாய் பிரித்தான் தமிழன். இவை நிலத்தின் பண்பை வைத்து மட்டுமன்றி அதில் நீரின் பங்கும் வைத்துத்தான். குறிஞ்சி அதிக ஈரப்பதம் கொண்ட குளிர்ந்த பகுதி, முல்லை நதிகள் பாயும் காடுடைய பகுதி, மருதம் வயல் சார்ந்த வேளாண் பகுதி, நெய்தல் நீர் நிறைந்த கடலில் நீட்சி, பாலை நீர் அற்ற நிலத்தின் வறட்சி இப்படி நிலங்களும் நீரால் தான் பிரிக்கப்பட்டன குளிர்ந்த மழை மேகங்கள் சூழ்ந்த குறிஞ்சி சோலையாகவும் உலக மழையில் ஒரு சதவீதம் கூட பெறாத நிலங்கள் பாலையாகவும் இருப்பது யாரால் எல்லாம் நீரால்.

 

இவ்வுலகில் பல இடங்களில் பச்சை போர்வை போர்த்தியதர்க்கும் பல இடங்கள் பாலை ஆனதற்கும் ஒரே காரணம் மழைதான். வெப்பமாகும் நீர் ஆவியாகி மேல் எழுந்து மீண்டும் குளிர்ந்து மழை பொழிகிறது. இருந்தும் எல்லா மழை நீரும் பூமியை அடைவதில்லை சில அப்படியே ஆவியாகி விடுகின்றன. ஒவ்வொரு நொடியும் 16 மில்லியன் டன் நீர் ஆவியாகிறது. அதே போல் உலகில் ஒவ்வொரு நொடியும் 16 மில்லியன் டன் மழையும் பொழிகிறது. இதையே நாம் நீர் சுழற்சி (water cycle) என்கிறோம்.   இது மழைக்கான, மழை உருவாக்கத்திற்கான ஒரு சுருங்கிய விளக்கம்.

வேளாண்மைக்கும் மழையின் பங்கு மிகவும் முக்கியமாகும். உலகின் 80% நிலம் மழையை நம்பியே வேளாண்மை செய்யும் வானம் பார்த்த பூமிதான். 60 சதவீத உணவு உற்பத்தி மழையை நம்பி நடக்கின்றன. இந்தியாவில் இருக்கும் விவசாய நிலங்களில் 70% புஞ்சை நிலம் ஆகும். பெரும் பகுதி விவசாயிகளும் இங்கு மழையை நம்பி வேளாண்மை செய்பவர்கள் தான். இங்கே வடகிழக்கு பருவமழை ஒருநாள் தவறுவது 24 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இடி மின்னலுடன் பொழியும் மழை காற்றில் இருக்கும் நைட்ரஜனை கிரகித்து வருவதால் அவை பயிர்களுக்கு கூடுதல் வளம் சேர்க்கின்றன. இப்படி மழை வேளாண்மையிலும் நம் அன்றாட வாழ்க்கையிலும் பல வகைகளில் நமக்கு உதவுகிறது உலகின் சுத்தமான நீரின் அளவு வெறும் ஒரு சதவீதம் தான். அதிலும் அதிகமானவை பனிக்கட்டிகளாகவே உள்ளன. எனவே மிச்ச நீரின் தேவையை நாம் மழையைக் கொண்டுதான் நிறைவு செய்கிறோம். வருடா வருடம் இந்த பூமியில் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் மழை பூமியில் கொட்டிதீர்க்கிறது. இந்தியாவில் பெய்யும் மழையை மட்டும் சேமித்தால் நிலத்திலிருந்து முழங்கால் அளவு நீர் மிச்சப்படுமாம். ஆனால் நமது நிலையோ அதிகமான மழை பொழியும் சிரபுஞ்சியில்  கூட சில மாதங்கள் தண்ணீர் பஞ்சம் தான்.

 

இந்தியாவின் சராசரி மழை அளவு 1194 மில்லி மீட்டர். தமிழகத்தின் மொத்த மழை அளவு வருடத்திற்கு 950 மில்லி மீட்டர் இருந்தும் ஒவ்வொரு கோடையிலும் நாம் நீருக்காக, குடிநீருக்காக அல்லாடுகிறோம். காரணம் முறையான மழை நீர் சேமிப்பு அமைப்புகளோ திட்டங்களோ இல்லாமை தான். உதாரணம் சென்னையில் ஒருநாளில் ஒரு மில்லிமீட்டர் மழை என்பது 17 .40 கோடி லிட்டர் நீர் ஆகும். இது சென்னையின் குடிநீர் தேவையில் பாதியாகும். இப்படி மழை எல்லா பகுதிகளையும் தன் கருணையால் அனுதினமும் நினைக்கத்தான் செய்கிறது. 2003 ஆம் ஆண்டு சதாராவில் ஏற்பட்ட பெரு மழையில் அங்கே தற்காலிக வெள்ளம் வந்ததை நாம் மறப்பதற்கில்லை. இப்படி எல்லா பக்கமும் பெய்யும் மழை பெய்யாத இடம் அண்டார்டிகா தான். ஆமா உலகின் வறண்ட பகுதி (மழை இல்லாத பகுதி) என்று அதைதான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மழை தான் அருவிகளின் நதிகளின் உருவாக்கம். பெய்யும் மழை வாய்க்கால் வழி ஓடினாள் நதியாகிறது மலை இடுக்குகளில் ஓடினாள் அருவி ஆகிறது.

 

இப்படி மழை செய்யும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் தான். சரி மழையை எப்படி அளப்பது? உலகின் எல்லா இடங்களிலும் மழை ஒன்றாகத்தான் பெய்கிறதா?

இவையெல்லாம் அடுத்த இதழில் ……..

 

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news