Skip to content

தேனீ வளர்ப்பு பகுதி – 3

தேனீ வளர்ப்பு பகுதி – 3

தேன் கூட்டின் அமைப்பு மற்றும் தேனீக்களின் வகைகள்

சாதாரணமாக ஒரு தேனீ கூட்டில், 3 வகையான தேனீக்கள் உள்ளன. ஒரு ராணி, ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் (10000 முதல் 30000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் சில நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்கள் உள்ளன.  இவை ஒரு சில உருவ வேற்றுமைகளிலும் அளவுகளிலும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு கூட்டிலும் வெவ்வேறு வளர்ச்சி நிலைகள் உள்ளன. அவை முட்டை, புழுக்கள், கூட்டுப்புழு மற்றும் வளர்ந்த தேனீ ஆகிய நான்கு நிலைகள் ஆகும்.

ராணியின் பணிகள்:

ஒரு கூட்டில் ஒரு ராணி தேனீ மட்டுமே காணப்படும். அது மட்டுமே கூட்டில் முழுமையான பெண் தேனீ ஆகும். அதன் முதற்கண் செயல்பாடு முட்டையிடுவது. ஒரு நல்ல வளமான ராணியானது ஒரு நாளைக்கு 1500-2000 முட்டைகளை இடும்.

ராணி கருவுற்ற மற்றும் கருவுறாத முட்டைகளை இடுகிறது. கருவுற்ற முட்டைகள் வேலைக்கார தேனீக்களையும் கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களையும்  உருவாக்குகின்றன.

ஒரு நல்ல வளமான ராணி 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் திருப்திகரமாக வேலை செய்யும். இருப்பினும், வணிக ரீதியிலான தேனீ வளர்ப்பில், அதிக மகசூல் பெறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ராணி தேனீ மாற்றப்படுகின்றது.

ராணி வெளியிடும் பெரோமோன் (queen pheromone), வேலைக்கார தேனீக்களை ஒற்றுமையாக செயல்பட வைக்கிறது. மேலும், வேலைக்கார தேனீக்களில் கருப்பை வளர்ச்சியைத் தடுக்கிறது. ராணி தேனீ சுரக்கும் பெரோமோன் ஒரு கூட்டில் அடைகாத்தல், அடை கட்டுதல் மற்றும் உணவு சேகரித்தல் ஆகிய செயல்பாடுகளைத் தூண்டுகிறது.

ஒரு கன்னி ராணியானது முட்டையிலிருந்து வெளிவந்த 5 – 10 நாட்களுக்குள், பல (5-7) ஆண் தேனீக்களுடன் காற்றில் (பெட்டியின் உள்ளே அல்ல) சேர்ந்து விந்துப் பையில் விந்தணுக்களை சேமிக்கின்றன. சேமிக்கப்பட்ட விந்தணுக்கள் தீர்ந்துபோகும் வரை அதன் வாழ்நாள் முழுவதும் கருவுற்ற முட்டைகளை இடுகின்றன.

 

வேலைக்கார தேனீக்களின் பணிகள்:

          வேலைக்கார தேனீ ஒரு முழுமையற்ற பெண் ஆகும். இருப்பினும், ஒரு கூடு நீண்ட காலமாக ராணி இல்லாமல் இருந்தால், இவை முட்டையிடுவதைத் தொடங்கலாம். வேலைக்கார தேனீக்கள், கூட்டில் அனைத்து வேலைகளையும் செய்கின்றன.

 வேலைக்கார தேனீக்களின் கடமைகளில் பின்வருவன அடங்கும்:

கூட்டினை சுத்தம் செய்தல், ராணி மற்றும் இளம் புழுக்களுக்கு உணவளித்தல், கூட்டின் நுழைவாயிலை காத்தல், மெழுகு சுரத்தல், அடைகளை அமைத்தல், மகரந்தம் சேகரித்து தேனாக மாற்றுவது, அமிழ்தம் மற்றும் நீர் சேகரிப்பு, அரச கூழ் தயாரிப்பது மற்றும் புதிய வாழ்விடத்தை தேடுவது ஆகியவை.

ஒரு வேலைக்கார தேனீயின் சராசரி ஆயுள் 40-50 நாட்கள் மட்டுமே (உணவு சேகரிக்கும் காலம்) ஆனால் வாழ்க்கை விடுமுறை காலத்தில் 6 மாதங்கள் வரை நீடிக்கலாம்.

முட்டையிடும் வேலைக்கார தேனீக்கள்: நீண்ட காலமாக ராணி இல்லாத சூழ்நிலையில், சில வேலைக்கார தேனீக்களின் கருப்பைகள் உருவாகத் தொடங்குகின்றன, மேலும் அவை முட்டைகள் கூட இடுகின்றன, ஆனால் இவை கருத்தரிக்கப்படாததால், ட்ரோன்கள் (ஆண் தேனீ) மட்டுமே உருவாகின்றன. முட்டையிடும் தொழிலாளர்களால் போடப்பட்ட முட்டைகள் இடையூறு வடிவத்தைக் கொண்டுள்ளன மற்றும் அடையின் ஒவ்வொரு கலத்திலும் பல முட்டைகள் இடப்படுகின்றன. இறுதியில் முட்டையிடும் தொழிலாளர்களுடன் கூடு அழிந்துவிடுகிறது.

ஆண் தேனீக்களின் பணிகள்:

ஒரு ஆண் தேனீயின் ஒரே செயல்பாடு, ஒரு முறை துணையுடன் ( ராணி தேனீ ) சேர்வது. ஒவ்வொரு ஆண் தேனீக்கும் 3 முதல் 4 வேலைக்கார தேனீக்கள் உணவு வழங்குகின்றன. புதிய ராணிகள் உருவாக்கப்படும் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே ஆண் தேனீக்களை ஒரு காலனி வளர்க்கிறது. பின்னர் அவை காலனியில் இருந்து வெளியேற்றப்பட்டு பட்டினியால் இறந்துவிடும். கோடையில் ஆண் தேனீயின் அதிகபட்ச ஆயுள் 59 நாட்கள் ஆகும்.

…..தொடரும்

 

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news